2013-08-17 15:47:47

திருத்தந்தை பிரான்சிஸ் : எகிப்தில் வன்முறைகள் நிறுத்தப்பட்டு உரையாடலும் ஒப்புரவும் இடம்பெற வேண்டுகோள்


ஆக.,17,2013. எகிப்தில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் வன்முறைகள் நிறுத்தப்பட்டு, போரிடும் தரப்புகள் உரையாடல் மற்றும் ஒப்புரவின் பாதையைத் தேர்ந்தெடுக்குமாறு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எகிப்திலிருந்து தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் மிகவும் வேதனைதரும் செய்திகள் திருத்தந்தையின் கவலையை அதிகரித்திருப்பதாகவும், அந்நாட்டில் சண்டையிடும் குழுக்கள் வன்முறையை நிறுத்தி அமைதிக்கான உரையாடலில் ஈடுபட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார் எனவும் திருப்பீட பத்திரிகை அலுவலகத்தின் உதவி இயக்குனர் அருள்பணி Ciro Benedettini கூறினார்.
அன்னைமரியின் விண்ணேற்பு விழாவான இவ்வியாழனன்று காஸ்தெல் கந்தோல்ஃபோவில் வழங்கிய மூவேளை செப உரையிலும் எகிப்தில் அமைதி நிலவ அனைவரும் செபிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுத்தார் என்பதையும் அருள்பணி Benedettini குறிப்பிட்டார்.
அதேசமயம், வன்முறைகளில் காயமடைந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர், இன்னும் துன்புறுவோர் அனைவருக்காகவும் தான் செபிப்பதாகவும் திருத்தந்தை தெரிவித்தார் என்றும் அருள்பணி Benedettini கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.