2013-08-15 15:54:45

மரியாவின் புகழ்பாடல் குழந்தைகளாலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு நம்பிக்கைப் பாடல் - திருத்தந்தை பிரான்சிஸ்


ஆக.15,2013. "Magnificat" என்று அழைக்கப்படும் மரியாவின் புகழ்பாடல் நமக்குத் தெரிந்த புனிதர்களாலும், தெரியாத பல கோடி பெற்றோர், அருள் பணியாளர்கள், அருள் சகோதரிகள், இளையோர், ஏன்? குழந்தைகளாலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு நம்பிக்கைப் பாடல் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஆகஸ்ட் 15, இவ்வியாழன் கொண்டாடப்பட்ட அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவன்று, திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லம் அமைந்துள்ள Castel Gandolfoவின் விடுதலை வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தியத் திருப்பலியின் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
திருவெளிப்பாடு நூலில் கூறியுள்ளதுபோல், திருஅவை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இப்பெண் மாண்பையும், போராட்டத்தையும் ஒரே நேரத்தில் சந்திக்கும் பெண்ணாக நாம் காண்கிறோம் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
இப்பெண்ணைப் போல, திருஅவையும் இவ்வுலகில் போராட்டங்களால் சூழப்பட்டிருந்தாலும், இறைவனின் மகிமையில் இப்போதே பங்கேற்கும் நிலையிலும் விளங்குகிறது என்று திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
தன் மகன் இயேசுவும், சீடர்களும் சந்தித்த அனைத்து பிரச்சனைகளிலும் முழுமையாகப் பங்கேற்ற அன்னை மரியா, தற்போது விண்ணக மகிமையில் இருந்தாலும், நம்முடன் அனைத்துப் போராட்டங்களிலும் உடன் வருகிறார் என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.