2013-08-15 15:55:32

எகிப்தில் அமைதிக்காகச் செபிக்கத் திருத்தந்தை விண்ணப்பம்


ஆக.15,2013. உலகம் முழுவதும் திருஅவையில் இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட அன்னை மரியாவின் விண்ணேற்பு விழாவையொட்டி காஸ்தல் கந்தோல்ஃபோ கோடைவிடுமுறை இல்லப் பங்குதளத்தில் திருப்பலி நிறைவேற்றி மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எகிப்தில் அமைதி நிலவச் செபிக்குமாறு அனைவருக்கும் அழைப்புவிடுத்தார்.
எகிப்திலிருந்து வரும் செய்திகளால், தான் மிகுந்த கவலை அடைந்திருப்பதாகத் தெரிவித்தத் திருத்தந்தை, வன்முறைகளால் உயிரிழந்தவர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும், காயமுற்றோருக்கும் தன் செப உறுதிகளையும் தெரிவித்தார். எகிப்திலும், உலகின் அனைத்து நாடுகளிலும் பேச்சுவார்த்தைகள் வழியாகவும், ஒப்புரவின் வழியாகவும் முழுமையான அமைதி நிலவ செபிக்கவேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.
'பெண்களின் மாண்பு' என்று பொருள்படும் 'Mulieris dignitatem' என்ற அப்போஸ்தலிக்க சுற்றுமடலை, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் வெளியிட்டதன் 25ம் ஆண்டு தற்போது சிறப்பிக்கப்படுவதையும், தன் மூவேளை செப உரையின்போது நினைவூட்டினார் திருத்தந்தை.
இச்சுற்றுமடல் வலியுறுத்தும், பெண்களின் அழைப்பு மற்றும் மாண்பு பற்றியும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, பெண்களின் முன்னேற்றத்தை வலியுறுத்தி இம்மடலில் காணப்படும் அனைத்துக் கருத்துக்களும், அன்னைமரியை அடித்தளமாகக்கொண்டவை எனவும் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.