2013-08-14 17:17:38

நிலத்தடி நீர்மட்டம் குறைவு, காற்றிலிருந்து நீர் உற்பத்தி : முதன் முறையாக மதுரையில் அறிமுகம்


ஆக.14,2013. மதுரையில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், காற்றிலிருந்து நீர் உற்பத்தி செய்து, குடிநீர் வழங்கும் திட்டத்தை, முதன்முறையாக மாநகராட்சி அறிமுகம் செய்ய உள்ளது.
மழை குறைவு, மரங்கள் அழிப்பு போன்றவற்றால், மதுரையின் நிலத்தடி நீர்மட்டம், நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. வைகை அணையிலிருந்து கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே, மாநகராட்சி நம்பியுள்ளது.
துளைக்கிணறுகளில் தண்ணீர் இல்லாததால், வார்டுகளில், பொது குடிநீர் தொட்டிகள் நிறுவ முடியவில்லை. இந்நிலையில், காற்றிலிருந்து நீர் உற்பத்தி செய்யும் முறையை, நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் வறண்ட எல்லை பகுதிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தை, தமிழகத்தில் முதன் முறையாக, மதுரையில் நடைமுறைப்படுத்த உள்ளனர். காற்றிலிருந்து நீரை பிரிக்கும் திறன் கொண்ட ‘வாட்டர் மேக்கர்’ இயந்திரம் மூலம், அதற்கான பரிசீலனை நடக்க உள்ளது.
120 லிட்டர் முதல், 5,000 லிட்டர் வரை, நாள் ஒன்றுக்கு குடிநீர் உற்பத்தி செய்யும் இவ்வியந்திரங்கள் மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸி., அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கரீபியத் தீவுகளில் பயன்படுத்தப்படுகின்றன
இந்தியாவில், மணிப்பூர், குஜராத், கோல்கட்டா, திரிபுரா, நாகலாந்து போன்ற இடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள "வாட்டர் மேக்கர்' முறை, மதுரை மாநகராட்சியில் நடைமுறைக்கு வருகிறது.

ஆதாரம்: தினமலர்








All the contents on this site are copyrighted ©.