2013-08-14 17:16:58

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்தது தன் வாழ்வில் மறக்க முடியாத நாள் - Lionel Messi


ஆக.14,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்தது தங்கள் வாழ்வில் மறக்க முடியாத நாள் என்று அர்ஜென்டீனா கால்பந்தாட்டக் குழுவினரின் தலைவர் Lionel Messi அவர்களும், இத்தாலிய கால்பந்தாட்டக் குழுவினரின் தலைவர் Gianluigi Buffon அவர்களும் கூறினர்.
இச்செவ்வாயன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அர்ஜென்டீனா, இத்தாலி ஆகிய நாடுகளின் கால்பந்தாட்டக் குழுவினரைத் திருப்பீடத்தில் சந்தித்ததைத் தொடர்ந்து, இவ்விரு தலைவர்களும் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினர்.
கால்பந்தாட்ட வீரராக தான் உலகின் பல நாடுகளுக்கும் சென்றுள்ளதாகவும், பல்வேறு தலைவர்களைச் சந்தித்துள்ளதாகவும் கூறிய Messi அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்தது இதுவரை தான் பெற்றிராத ஓர் அனுபவம் என்று கூறினார்.
விளையாட்டுப் போட்டிகள் குழந்தைகளையும், இளையோரையும் கவர்ந்திழுக்கும் காரணத்தால், இப்போட்டிகளில் ஈடுபடும் வீரர்கள் எடுத்துக்காட்டுகளாக விளங்க வேண்டுமென்பதை திருத்தந்தை வலியுறுத்தியது தன்னைப் பெரிதும் கவர்ந்ததென்று Buffon அவர்கள் கூறினார்.
வரவிருக்கும் உலகக் கால்பந்து கோப்பை இறுதி ஆட்டத்தில் இத்தாலியும், அர்ஜென்டினாவும் விளையாடவேண்டும் என்ற புதுமையைத் திருத்தந்தை விரும்புவாரா என்று வேடிக்கையாகக் கேட்ட செய்தியாளரிடம், திருத்தந்தை அவர்கள் இன்னும் பல முக்கியமான் விடயங்களில் புதுமைகள் நடக்க வேண்டுமென்று விரும்புவார் என்று, Buffon அவர்கள் பதிலிறுத்தார்.
இத்தாலி, ஆர்ஜென்டீனா நாடுகளின் கால்பந்தாட்ட அணியினர் உரோம் நகரில் உள்ள ஒலிம்பிக் விளையாட்டுத் திடலில் இப்புதன் மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக, நட்புறவின் அடிப்படையில் கால்பந்தாட்டப் போட்டியில் கலந்து கொண்டனர்.

ஆதாரம்: Zenit








All the contents on this site are copyrighted ©.