2013-08-14 17:17:47

ஏழைகளுக்கு ஒளி தரும் Alfredo Moser விளக்கு


ஆக.14,2013. பிரேசில் நாட்டைச் சேர்ந்த Alfredo Moser என்ற தொழில்நுட்ப உழைப்பாளி ஒருவர் சூரிய ஒளியில், மின்சாரம் இல்லாமல் எரியும் விளக்கு ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்.
2002இல் பிரேசில் நாட்டில் நிலவிய மிகப்பெரிய மின்வெட்டு காலத்தில், குறிப்பாக ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் வீடுகள் எல்லாம் பகலிலும் இருளாக இருந்தபோது, மோஸர் அவர்களின் மனதில் இந்த ''பாட்டில் லைட்'' (bottle light) திட்டம் உதித்தது.
பெரும் சாதனையாகக் கருதப்படும் பாட்டில் லைட் விளக்குக்கான அடிப்படை நுட்பம், மிகவும் எளிமையான ஒளி முறிவுத் தத்துவத்தை தளமாகக் கொண்டதாகும்.
அதாவது ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை, நீரால் நிரப்பி, அந்த நீர் நிறம் மாறாமல் இருப்பதற்காக அதில் சிறிது பிளீச்சிங் தாளைச் சேர்த்து, வீட்டுக் கூரையில் சிறிய துவாரத்தைபோட்டு, பாட்டிலின் மேற்பகுதி வெளியே சூரிய ஒளியிலும், கீழ் பகுதி இருளான வீட்டு அறையினுள்ளும் வைக்கப்படும்.
ஒளிமுறிவுத்தத்துவத்தின் அடிப்படையில், பிளாஸ்டிக் பாட்டிலின் ஊடாக வரும் சூரிய ஒளிக்கதிர், அதன் உள்ளே உள்ள தண்ணீரில் செல்லும் போது முறிந்து, அதன் வேகத்தை மாற்றி வீட்டினுள்ளே செல்லும், அப்போது உள்ளே மிகவும் பிரகாசமான வெளிச்சம் கிடைக்கும்.
உள்ளே கிடைக்கின்ற இந்த ஒளியைப் பரிசோதித்த மின் பொறியியலாளர் ஒருவர், சூரிய ஒளி எவ்வளவு பலமாக இருக்கின்றது என்பதைப் பொறுத்துத்தான் உள்ளே வெளிச்சம் வரும் என்கின்ற போதிலும், 40 முதல் 60 வாட் மின்குமிழ்களின் அளவுக்கு வெளிச்சம் கிடைப்பதாகக் கூறியுள்ளார்.
இந்த ஒளிவிளக்குத் திட்டம் பிரேஸில் நாட்டின் எல்லா இடங்களுக்கும் பரவி, ஏழைகள் வீடுகளில் இலவசமாக ஒளி விளக்கு எரிந்தது. சூரியன் இறைவனால் படைக்கப்பட்ட கொடை. ஆகவே இது ''இறைவனின் ஒளி'' என்கிறார் மோஸர்.
இந்தக் கண்டுபிடிப்பு தற்போது பிலிப்பின்ஸ், இந்தியா, பங்களாதேஷ், டான்சானியா, ஆர்ஜென்டீனா, பிஜி ஆகிய நாடுகளில் பரவி வருகின்றது என்று BBC செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மோஸருக்கு நொபெல் பரிசு கிடைக்கிறதோ இல்லையோ, அவரால் பல லட்சம் மக்கள் வெளிச்சம் பெற்றிருக்கிறார்கள் என்று அவரது ஆர்வலர் ஒருவர் கூறுகிறார். ஊருக்கே ஒளி ஏற்றியிருக்கும் மோஸர், இன்னமும் ஏழையாகவே இருக்கிறார். அதிலும் ஒரு சுகம் இருக்கிறது என்கிறார் மோஸர்.

ஆதாரம்: BBC








All the contents on this site are copyrighted ©.