2013-08-14 17:16:39

அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவன்று Castel Gandolfoவில் திருத்தந்தை


ஆக.14,2013. ஆகஸ்ட் 15, இவ்வியாழன் கொண்டாடப்படும் அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லமான Castel Gandolfo வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றி, நண்பகல் மூவேளை செப உரையும் வழங்குகிறார்.
திருப்பலிக்கு முன்னதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Castel Gandolfoவில் அமைந்துள்ள ஏழைகளின் கிளாரா தவஇல்லத்திற்குத் தனித்துச்சென்று பார்வையிடுகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1631ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தவஇல்லத்திற்கு ஜூலை மாதம் 14ம் தேதியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்கனவே தனித்துச்சென்று பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த காலத்தில், 1944ம் ஆண்டு, அருள்சகோதரிகளின் தவஇல்லம் குண்டுத் தாக்குதலுக்கு உட்பட்டதில், அங்கு வாழ்ந்த 18 கன்னியர்கள் கொல்லப்பட்டனர் என்று வரலாறு சொல்கிறது.
திருத்தந்தையர்கள் ஆறாம் பவுல், இரண்டாம் ஜான்பால் மற்றும் 16ம் பெனடிக்ட் ஆகியோர் ஏழைகளின் கிளாரா தவஇல்லத்திற்குச் சென்றுள்ளனர் என்பதும், அங்கு திருப்பலிகள் நிறைவேற்றி, அருள் சகோதரிகளைச் சந்தித்துள்ளனர் என்பதும் வரலாறு.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.