2013-08-13 15:33:53

விவிலியத்
தேடல் அறிவற்ற செல்வன் உவமை பகுதி 1


RealAudioMP3 செல்வம் மிகுந்த ஓர் இளைஞன் தன் விலையுயர்ந்த Mercedes Benz காரை ஒரு மலைப்பாதையில் ஒட்டிக் கொண்டிருந்தார். திடீரென, அந்தக் கார் கட்டுப்பாடின்றி தாறுமாறாக ஓடி, ஆழ்ந்ததொரு செங்குத்தான பள்ளத்தை நோக்கி விரைந்தது. கார் பள்ளத்தில் விழுவதற்குமுன், அந்த இளைஞன் காரிலிருந்து வெளியே எறியப்பட்டார். ஆனால், கார் கதவில் சிக்கிய அவரது இடது கரம் துண்டிக்கப்பட்டு, காரோடு சேர்ந்து பள்ளத்தில் விழுந்தது.
இளைஞன் பள்ளத்தில் ஓரத்தில் நின்று, "ஐயய்யோ என் Benz கார், Benz கார்" என்று அலறிக் கொண்டிருந்தார். அவரது அலறலைக் கேட்டு, மற்றொரு காரின் ஓட்டுனர் ஓடிவந்தார். இளைஞனின் இடது கரம் துண்டிக்கப்பட்டிருப்பதைப் பார்த்த அவர், "சார், என் காரில் ஏறுங்கள்... நாம் ஆஸ்பத்திரிக்குச் செல்வோம்" என்று துரிதப்படுத்தினார். இளைஞனோ மீண்டும், "என் Benz கார் போச்சே!" என்று அலறினார். "சார், உங்கள் இடது கரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதை முதலில் கவனிக்கவேண்டும்" என்று ஓட்டுனர் சொன்னதும்தான், தான் இடது கரத்தை இழந்துள்ளதை இளைஞன் உணர்ந்தார். உடனே அவர் இன்னும் உரத்தக் குரலில், "ஐயோ! என் Rolex கடிகாரம் போச்சே!" என்று கத்தத் துவங்கினார்.
சிரிப்பையும், பரிதாபத்தையும் ஒரு சேர நமக்குள் உருவாக்கும் சிறுகதை இது. அந்த இளைஞனை எண்ணி சிரிப்பதா, பரிதாபப்படுவதா, கோபப்படுவதா என்று தெரியவில்லை. இது ஒரு சிரிப்புத் துணுக்குதான். ஆனால், நாம் பல வேளைகளில் நடந்துகொள்ளும் பரிதாப முறைகளைக் குத்திக்காட்டும் சிரிப்புத் துணுக்கு இது.

Benz கார், Rolex கடிகாரம் என்று வாழ்வில் விலையுயர்ந்ததென கருதப்படும் பொருள்களை, செல்வங்களைக் குவிப்பவர்கள், அவற்றை இழக்கும்போது நிலைகுலைந்து போகின்றனர். தன் கரத்தை இழந்ததன் ஆபத்தையும் உணராமல், அந்தக் கரத்தில் கட்டப்பட்டிருந்த Rolex கடிகாரத்தை இழந்ததை எண்ணிக் கதறும் இந்த இளைஞனைப் போன்றவர்கள் நமக்கு நல்ல எச்சரிக்கைகள்.
நாம் சேர்க்கும் செல்வங்கள் நம்மீது கொள்ளும் ஆதிக்கம், நம்மில் பலர் உணர மறுக்கும் உண்மை நிலை. இந்த ஆதிக்கம் கட்டுக்கடங்காமல் செல்லும்போது, அதை மடமை என்றுதானே சொல்லவேண்டும்? இத்தகைய மடமையை உணர்த்தும் ஓர் உவமையை இயேசு கூறியுள்ளார். இயேசு கூறிய அத்தனை அழகான உவமைகளிலும், லூக்கா நற்செய்தி 12ம் பிரிவில் நாம் காணும் 'அறிவற்ற செல்வன்' உவமையில் மட்டுமே கடவுள் பேசுவதாகக் கூறப்பட்டுள்ளது. கடவுள் பேசும் வார்த்தைகள் ஓர் எச்சரிக்கையாக ஒலிக்கின்றன:
கடவுள் அவனிடம், "அறிவிலியே இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?" என்று கேட்டார் என்று லூக்கா நற்செய்தி 12ம் பிரிவு, 20ம் சொற்றொடரில் வாசிக்கிறோம்.

மனித வாழ்வின், குறிப்பாக, கிறிஸ்தவ வாழ்வின் உயிர் நாடிகளான 'அயலவர் அன்பு' மற்றும் 'இறைவேண்டுதல்' என்ற இரு அடிப்படைத் தேவைகளை விளக்க இயேசு கூறிய மூன்று அழகான உவமைகளில் நாம் இதுவரை பயணித்தோம். இன்று, மனித வாழ்வின் மற்றொரு முக்கியமானத் தேவையைப்பற்றி சிந்திக்கத் துவங்குகிறோம். அதுதான் செல்வம்.
லூக்கா நற்செய்தியில் மட்டுமே பணத்தைப்பற்றி, செல்வத்தைப்பற்றி மூன்று உவமைகளைக் காண்கிறோம். 'அறிவற்ற செல்வன் உவமை' (லூக்கா 12: 13-21), 'நேர்மையற்ற வீட்டுப் பொறுப்பாளர் உவமை' (லூக்கா 16: 1-8), 'செல்வரும் இலாசரும் உவமை' (லூக்கா 16: 19-31) என்று இம்மூன்று உவமைகளும் செல்வத்தின் பல்வேறு விளைவுகளைச் சிந்திக்க நம்மைத் தூண்டுகின்றன. 'அறிவற்ற செல்வன் உவமை'க்குள் அடியெடுத்து வைப்பதற்கு முன், இவ்வுவமை கூறப்பட்டச் சூழலைச் சிந்திப்பது பயனளிக்கும். லூக்கா 12ம் பிரிவின் ஆரம்ப வரிகள் இச்சூழலை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றன:
லூக்கா 12: 1அ
ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தபோது இயேசு முதலில் தம் சீடரோடு பேசத் தொடங்கினார்.

அலைமோதும் மக்கள் கூட்டம் இயேசுவைச் சுற்றி இருந்ததாக நற்செய்தியின் பல பகுதிகளில் நாம் வாசிக்கிறோம். மக்கள் கூட்டத்தைக் கண்டு, இயேசு மலைமீது ஏறி போதித்தார் என்று மத்தேயு 5ம் பிரிவின் துவக்கத்தில் காண்கிறோம். கெனசரேத்து ஏரிக்கரையில் அல்லது கடலோரத்தில் திரளான மக்கள் கூட்டத்தைக் கண்டு இயேசு படகிலேறி போதித்ததாக லூக்கா 5ம் பிரிவின் துவக்கத்திலும், மாற்கு 4ம் பிரிவின் துவக்கத்திலும் வாசிக்கிறோம். இயேசுவைப் பின்தொடர்ந்து மக்கள் கூட்டம் சென்றதால், அவர் அவர்களுக்கு உணவளித்தார் என்பதை நான்கு நற்செய்திகளும் (மத். 14: 13-21; மாற். 6: 31-44; லூக். 9: 10-17; யோவா. 6: 5-15) கூறுகின்றன. ஆயினும், லூக்கா 12ம் பிரிவின் துவக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. 'ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு' என்ற விவரம் இங்கு மட்டுமே காணப்படுகிறது.

இயேசுவின் புகழ் வெகு வேகமாகப் பரவி வந்ததால், மக்கள் கூட்டம் அதிகம் பெருகிவந்ததென்பதை நற்செய்தியாளர் லூக்கா அழகாகக் குறிப்பிடுகிறார். இதுமட்டுமல்லாமல், இயேசுவைச் சுற்றி மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதை தடுக்க மறைநூல் அறிஞரும், பரிசேயரும் ஏனைய மதத் தலைவர்களும் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோற்றுவிட்டன என்பதையும் லூக்கா மறைமுகமாகக் கூறுவதுபோல் தெரிகிறது.
தன் வார்த்தைகளுக்குச் செவிமடுக்க, கட்டுக்கடங்காமல் கூடியுள்ளவர்களைக் கண்டதும் இயேசு அவர்கள் கேட்கவிரும்பும் நல்ல சொற்களை, நல்ல பல பாடங்களைச் சொல்வார் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அங்கு நடப்பது முற்றிலும் மாறாக உள்ளது. இயேசு அவர்களிடம் எச்சரிக்கைகளை அளிக்கிறார். அதுவும் குறிப்பாக மதத் தலைவர்களைப் பற்றி கவனமாக இருங்கள் என்று எச்சரிக்கை விடுக்கிறார். இயேசு தரும் இந்தக் கடுமையான எச்சரிக்கைகளுக்கு பின்னணி உள்ளது.

'ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு' மக்கள் இயேசுவைச் சுற்றிக் கூடியதாகக் கூறப்படும் இப்பகுதிக்கு முன்னர், அதாவது, லூக்கா நற்செய்தி 11ம் பிரிவின் பின்பகுதியில் இயேசு ஒரு பரிசேயர் வீட்டுக்கு விருந்துண்ண அழைக்கப்பட்டார் என்ற விவரம் கூறப்பட்டுள்ளது. அந்த வீட்டில் பரிசேயர் இயேசுவுக்கு அளித்த விருந்தைவிட, இயேசு அவர்களுக்கு வழங்கிய எச்சரிக்கைகளும் கண்டனங்களும் மிகக் காரமாக இருந்திருக்க வேண்டும். லூக்கா நற்செய்தி 11ம் பிரிவில் 37 முதல் 52 முடிய காணப்படும் இறைச் சொற்றொடர்கள் மதத்தலைவர்களை இயேசு கண்டித்து கூறும் வார்த்தைகளாக வெடிக்கின்றன. இந்த விருந்தின் இறுதியில் அங்கு நிகழ்ந்ததை லூக்கா இவ்விதம் விவரித்துள்ளார்:
லூக்கா 11: 53
இயேசு அங்கிருந்து புறப்பட்டபோது மறைநூல் அறிஞரும் பரிசேயரும் பகைமையுணர்வு மிகுந்தவராய் அவரது பேச்சில் அவரைச் சிக்கவைக்குமாறு பல கேள்விகளைக் கேட்டனர்.
பகைமையும், வெறுப்பும் கலந்த அச்சூழலை விட்டு வெளியேறிய இயேசு, அடுத்து தன் சீடர்களையும் மக்களையும் சந்தித்ததும், அவர்களிடம் முதலில் விடும் எச்சரிக்கை மதத் தலைவர்களைப் பற்றியது என்பதில் ஆச்சரியமடைவதற்கு ஒன்றுமில்லையே!
லூக்கா 12: 1
இயேசு முதலில் தம் சீடரோடு பேசத் தொடங்கினார். அவர் அவர்களிடம் கூறியது: "பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்" என்றார்.

இயேசு தன்னைச் சுற்றியிருந்த சீடருக்கும் மக்களுக்கும் தொடர்ந்து பல எச்சரிக்கைகளையும், வாழ்க்கைப் பாடங்களையும் வழங்கினார். இயேசு கூறிய அழகான பாடங்களுக்குச் சற்றும் செவிகொடாமல், தன்னுடைய உலகத்தில் தன்னுடையப் பிரச்சனைக்குள் மூழ்கிக்கிடந்த ஒருவர், எவ்விதத் தொடர்பும் இல்லாமல் இயேசுவின் போதனையை இடைமறிக்கிறார். தன் பிரச்சனையை இயேசுவிடம் கூறுகிறார். அவருக்கும் இயேசுவுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலை நற்செய்தியாளர் லூக்கா இவ்விதம் பதிவு செய்துள்ளார்:
லூக்கா 12: 13-14
கூட்டத்திலிருந்து ஒருவர் இயேசுவிடம், “போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்என்றார். அவர் அந்த ஆளை நோக்கி, “என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?” என்று கேட்டார்.

மதத் தலைவர்களின் தவறான வழிநடத்துதலை குறித்து கவனமாக இருங்கள் என்று இயேசு எச்சரிக்கைகள் கொடுத்துக்கொண்டிருந்த நேரத்தில், சொத்துப் பிரச்சனையில் அவரை ஈடுபடுத்த விரும்பிய அந்த மனிதரை இயேசு கடிந்துகொண்டார். இத்தகையப் பிரச்சனைகளில் தங்களையே ஈடுபடுத்தி, அப்பிரச்சனைகளையும் தங்களுக்குச் சாதகமாக்கி புகழும், பொருளும் திரட்டி வந்த மதத் தலைவர்களைப் போல தன்னையும் அந்த மனிதர் கருதியதை இயேசு கண்டிக்கிறார். பின்னர் சூழ இருந்த மக்கள் அனைவருக்கும் 'பேராசை பெரும் நஷ்டம்' என்ற ஒரு மேலான உண்மையை எடுத்துரைக்கிறார்.
வாழ்வின் பிரச்சனைகள் அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் ஆசை என்று கூறினார் புத்தர். கரத்தை இழந்திருந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல், அதில் கட்டப்பட்டிருந்த Rolex கடிகாரத்தை இழந்ததை பெரிதாக எண்ணி வருந்திய இளைஞனைப் போல, வாழ்வில் முக்கியமானவற்றை இழப்பதையும் உணராதவண்ணம் நம்மைப் பார்வை இழக்கச் செய்வது பேராசையே என்ற முக்கியமான எச்சரிக்கையை இயேசு வழங்குகிறார்.
லூக்கா 12: 15
பின்பு இயேசு அவர்களை நோக்கி, “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாதுஎன்றார்.

இவ்வுண்மையைத் தெளிவாக்க செல்வன் ஒருவனது கதையை உவமையாகத் தருகிறார். இயேசு தன் உவமையில் அறிமுகப்படுத்தும் அறிவற்ற செல்வனை நாம் அடுத்த வாரம் சந்திப்போம்.








All the contents on this site are copyrighted ©.