2013-08-12 14:58:12

வாரம் ஓர் அலசல் – இளையோரே எழுந்திடுங்கள்


ஆக.,12,2013. RealAudioMP3 அண்மையில் பேருந்துப் பயணத்தில் ஓர் உரையாடலைக் கேட்க நேர்ந்தது. ஓர் இளம் தம்பதியர் பேசிக்கொண்டு வந்தனர். அந்த இளம் மனைவி, தனது கணவரிடம், நான் நாட்டில் இருந்த ஓராண்டில் உங்கள் அம்மாவோடு மிகவும் கஷ்டப்பட்டேன். எனக்கு அந்த வாழ்க்கை மத்திய சிறைச்சாலை மாதிரி இருந்தது. சிலநேரங்களில் எனக்கு வாழ்க்கை விரக்தியாக இருந்தது. தற்கொலை செய்து கொள்ளலாமா என்றுகூட சிலநேரங்களில் சிந்தித்ததுண்டு. நீங்கள் நமக்குத் திருமணம் ஆன சிறிது நாள்களில் இங்கு வந்துவிட்டீர்கள். நான் அங்கு பட்ட கஷ்டங்களை விவரிக்கவே முடியாது, நான் இங்கேயே உங்களுடனே இருந்து விடுகிறேன். சிக்கனமாக வாழ்வோம். நாட்டுக்குமட்டும் என்னைத் திருப்பி அனுப்பாதீர்கள் என்று சொல்லிக்கொண்டே வந்தார். அந்த இளவயது கணவரும் பதிலுக்கு எதுவுமே பேசாமல் கேட்டுக்கொண்டே வந்தார். எனக்கு இறங்குமிடம் வந்துவிட்டதால் பேருந்தைவிட்டு இறங்கிவிட்டேன். ஆனால் அதற்குப் பின்னர் அவர்கள் என்ன பேசிக்கொண்டனர், அந்தக் கணவர் என்ன பதில் சொன்னார் என்பது எனக்குத் தெரியாது. இத்தாலி நாடு சில ஆண்டுகளாக எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியால் இத்தாலியர் உட்பட வெளிநாட்டவர் பலருக்கும் சரியான வேலை கிடையாது. அதேசமயம் விலைவாசியும் ஏறிவிட்டது. அப்படியிருக்க இந்த இளம் கணவர் தனது மனைவிக்கு என்ன பதில் சொல்லியிருப்பார் என்று என்னால் யூகிக்க முடிகின்றது.
திருமணமான சில நாள்களிலே மனைவியரை விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு கணவர்கள் வேலைக்குத் திரும்பிவிடுவதால் இரு பக்கமும் தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். சில பெண்கள் வேலி தாண்டிவிடுவதோடு, கணவர்கள் அனுப்பும் பணத்தை வைத்து தங்களுக்குள்ளே மறைமுகமாக வேறு ஒரு குடும்பத்தையும் அமைத்துக்கொள்ளும் நிலையும் ஏற்படாமல் இல்லை. அதேசமயம், இந்த இளவயது மனைவியர் தவறுகள் செய்துவிடாமல் இருப்பதற்காக மாமியார்கள் கண்டிப்பை அதிகப்படுத்துவதும் ஏற்படுகிறது. சில நேரங்களில் குழந்தைகளின் நிலையும் பாதை மாறுகின்றது. தந்தை அல்லது தாய் வெளிநாடுகளில் வேலை செய்வதால், அவர்களின் பாசம் கிடைக்கவேண்டிய குறிப்பிட்ட வயதில் பிள்ளைகளுக்குக் கிடைப்பதில்லை. இதனால் பிள்ளைகளும் திசை மாறுகின்றனர். தேவையான கைச்செலவு பணம் கிடைப்பதால் பிள்ளைகளும் தீய பழக்கங்களுக்கு உள்ளாகின்றனர். வெளிநாடு சென்ற தந்தை வீடு திரும்புவதற்குள் இவர்கள் தங்களுக்கென ஒரு துணையைத் தேடிக்கொள்கின்றனர். இப்பிள்ளைகளைத் தாய்களாலும் கட்டுப்படுத்த முடிவதில்லை. வங்கியில் பெருந்தொகையோடு வெளிநாடுகளிலிருந்து திரும்பும் சில தந்தையர், தங்களின் குடும்பச் சீரழிவைப் பார்த்து வேதனைப்பட வேண்டியிருக்கிறது.
18 ஆண்டுகளுக்குமேல் வெளிநாட்டில் மணிக்கணக்குப் பார்க்காமல் ஒரு நாளைக்கு 14 மணிநேரம்கூட உழைத்துத் திரும்பிய ஒரு தந்தை சிறுவனாக அவர் விட்டுச்சென்ற மகனின் போக்கால் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் நாட்டிலே தங்கி வேலை செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், நான் இங்கு இருந்திருந்தால் இவ்வளவு வசதி கிடைத்திருக்காது, ஆனால் எனது மகனையும், மனஅமைதியையும் இழந்திருக்கமாட்டேன் என்று சொன்னார். இப்படி எத்தனை பெற்றோர் மனக்கஷ்டத்தில் வாழ்கின்றனரோ தெரியாது. பேசிய சொல், எறிந்த அம்பு, தவறவிட்ட காலம், இழந்துவிட்ட வாய்ப்பு ஆகிய நான்கையும் திரும்பப் பெற முடியாது என்று இபின் அல் அலிம் என்பவர் சொன்னார். இன்றைய சமூக, பொருளாதாரக் கட்டமைப்பில், தங்களது குடும்பத்தை நிர்வகிக்கப் போதிய வருமானம் இல்லாததாலும், வாழ்க்கைத்தரத்தை உயர்த்த விரும்பியும், பஞ்சம் பட்டினி, போர், உள்நாட்டுச் சண்டைகள், இனவெறிப் பாகுபாடுகள் போன்ற காரணங்களாலும் நாடுவிட்டு நாடு சென்று குடியேறும் மக்களின் எண்ணிக்கை மனித வரலாற்றில் எப்பொழுதும் இல்லாததைவிட இக்காலத்தில் அதிகரித்து வருகின்றது. இத்தாலியின் Lampedusa தீவுக்கு ஆப்ரிக்காவிலிருந்து மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். ஐரோப்பாவில் நுழைவதற்கு இத்தீவு நுழைவாயிலாக இருக்கின்றது. கடந்த வியாழனன்றுகூட 103 சொமாலி நாட்டவர் Lampedusa தீவுக்கு படகில் வந்தனர். இவர்களில் ஏழு வயதுச் சிறுவன் உட்பட இருவர் இறந்துள்ளனர். இப்படி குடியேற்றதாரர் பெரிய படகுகளில் வரும்போது நடுக்கடலிலே படகுகள் கவிழ்ந்து பலர் இறக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளன. கடந்த ஜூலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Lampedusa தீவு சென்று கடலில் இறந்த ஆயிரக்கணக்கான குடியேற்றதாரர்களை நினைவுகூர்ந்தார்.
15 வயதுக்கும் 24 வயதுக்கும் உட்பட்டவர்கள் இளையோர் என ஐக்கிய நாடுகள் நிறுவனம் வரையறுத்துள்ளது. உலகில் தற்போது ஏறக்குறைய 180 கோடிப்பேர் இந்த வயதுடைய இளையோர் உள்ளனர். ஒரு நாட்டின் எதிர்காலமே, இளையோரின் கையில்தான் உள்ளது. இளையோரின் வளர்ச்சிக்கு ஏற்பதான், ஒரு நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. இத்தகைய வலிமைபடைத்த இளையோரில் பலர் வேலை தேடியும், அடக்குமுறைகளுக்கு அஞ்சியும், பொருளாதார நெருக்கடி, இன்னும் பிற காரணங்களுக்காகவும், சில சமயங்களில் தனியாகவும், சிலநேரங்களில் தங்களின் குடும்பங்களுடனும் வேறு நாடுகளில் குடியேறுகின்றனர். இவ்வாறு குடியேறும் இளையோர் இன, நிறப் பாகுபாடுகள், மனித உரிமை மீறல்கள் எனப் பல்வேறு இடர்களை குடியேறிய நாடுகளில் சந்திக்கின்றனர். எனவே இந்த இளையோர்மீது ஒவ்வோர் அரசும் கவனம் செலுத்த வேண்டுமென்று இத்திங்களன்று அழைப்புவிடுத்துள்ளது ஐ.நா. நிறுவனம். அதாவது, ஆகஸ்ட் 12, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக இளையோர் தினத்திலே இந்த அழைப்பை முன்வைத்துள்ளது ஐ.நா. ஒவ்வொரு நாடும் தங்களது இளையோரை ஆக்கப்பூர்வப் பணிகளில் ஈடுபடுத்த வலியுறுத்தும் விதமாக 2000மாம் ஆண்டிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 12ம் தேதியன்று அனைத்துலக இளையோர் தினத்தையும் ஐ.நா. சிறப்பித்து வருகிறது.
இந்த 2013ம் ஆண்டின் அனைத்துலக இளையோர் தினமாகிய இத்திங்களன்று, குடியேற்றதார இளையோர்மீது கவனம் செலுத்த அரசுகளுக்கு அழைப்புவிடுத்துள்ளது ஐ.நா. நிறுவனம். இத்தினத்துக்கென செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், உலகிலுள்ள ஏறக்குறைய 21 கோடியே 40 இலட்சம் குடியேற்றதாரரில் 10 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் அதாவது 2 கோடியே 70 இலட்சம் பேர் இளையோர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இவர்களில் பலர், நாடுகளைக் கடந்து வரும்போது அல்லது குடியேறிய நாடுகளில் மனித உரிமை மீறல்கள், இனவெறி, பாகுபாடு போன்ற பெரும் துன்பங்களை எதிர்நோக்குகின்றனர். ஆயினும், இந்தக் குடியேற்றதார இளையோரால், அவர்கள் குடியேறியுள்ள மற்றும் அவர்களது சொந்த நாடுகளுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன என பான் கி மூன் தனது செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்துலக குடியேற்றதாரர் குறித்து வருகிற அக்டோபரில் ஐ.நா.வில் நடைபெறவிருக்கும் உயர்மட்டக் கூட்டத்தில் குடியேற்றதார இளையோர் குறித்து கவனம் செலுத்த வேண்டுமெனவும் ஐ.நா.பொதுச்செயலர் வலியுறுத்தியுள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ரியோவில் கடந்த ஜூலையில் நடத்திய மாபெரும் அனைத்துலக கத்தோலிக்க இளையோர் விழாவிலும் இளையோர் குறித்த உலகினரின் கவனத்தைத் திருப்பினார். அதற்குப் பின்னர் இடம்பெற்ற இரு ஞாயிறு மூவேளை செப உரைகளிலும் இளையோர் பற்றிப் பேசியுள்ளார். இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னரும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து ஆன்மீகச் சுற்றுலாப் பயணிகளாக வந்திருந்த இளையோர் பற்றிக் குறிப்பிட்டார்.
RealAudioMP3 மாணவர்கள் நினைத்தால் அவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்று இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் அடிக்கடி மாணவர்களிடம் சொல்லி வருகிறார். Vishwamitri நதியைச் சுத்தம் செய்யும் திட்டத்தில் இச்சனிக்கிழமையன்று பேசியபோதும் இதே வார்த்தைகளைத்தான் சொன்னார் அப்துல் கலாம். இளையோர் மனம் வைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை அரபு நாடுகளில் அண்மை ஆண்டுகளில் நடந்த எழுச்சிகள் காட்டுகின்றன. ஓர் ஊரில் நடந்த திருட்டைக் கண்டுபிடிப்பதற்கு அந்த ஊர் இளைஞர்களைத்தான் இரவில் ஊரைக் கண்காணிக்கச் சொன்னார்கள். எத்தனையோ இளையோர், 18,19 வயதுகளில் அரபு நாடுகளுக்கு வந்து, கிடைக்கும் வேலைகளைச் செய்து தங்கள் குடும்பங்களைக் காப்பாற்றி வருகின்றனர். குடும்பத்திலுள்ள அக்கா அல்லது தங்கைகளுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். வீட்டில் நடக்கும் முதல் நல்ல மங்களகரமான நிகழ்ச்சியாக இருந்தால்கூட பணத்தை மட்டும் அனுப்பி வைத்துவிட்டு தொடர்ந்து வேலை செய்கின்றனர்.
நல்ல குடும்பப் பொறுப்புள்ள, பண்புள்ள பல இளையோரை நம்பியே, இந்த இளையோரைப் பார்த்தே இக்காலப் பெரியோர் உலகின் எதிர்காலம் நன்றாக அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். சென்னை, அடையாறு சாக்கடைத் தண்ணிரீல் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்த ஒன்பது வயது குழந்தை ரோஷிணியைப் பார்த்து, 'பயப்படாதே குட்டிம்மா...நான் இருக்கேன்!' என்று காப்பாற்றியிருக்கிறார் தினேஷ். தினகரன் பத்திரிகைப் பணியாளராகிய தினேஷ் நடந்ததை இவ்வாறு விவரித்திருக்கிறார்.
''காலையில அலுவலகத்துக்குப் போயிட்டு இருந்தேன். ஒரு அம்மாவும் பையனும் அடை​யாறு பாலத்துக்கிட்ட நின்னு கதறிக்கிட்டு இருந்தாங்க. மக்கள் கூட்டமா நின்னு பாலத்துக்கீழே பார்த்துக்கிட்டு இருந்தாங்க. என்னன்னு நானும் எட்டிப்பார்த்தேன். ஒரு குழந்தை அடையாறு சாக்கடைத் தண்ணியில மூழ்கித் தத்தளிச்சுக்கிட்டு இருந்தது. சட்டுனு நான் உள்ளே குதிச்சிட்டேன். நான் அதைத் தூக்கியதும், 'காப்பாத்துங்க அங்கிள்... காப்பாத்துங்க’னு அலறித் துடிச்சுது. 'பயப்படாதே குட்டிம்மா... நான் இருக்கேன்’னு தைரியம் சொல்லி நீந்தி கரை ஓரம் வந்தேன்!''
என்று அந்த நிமிடங்களை, படபடப்​புடன் விவரித்திருக்கிறார் தினேஷ்.
தினேஷ் போன்ற இளையோரை நம்பித்தான் நாடு வாழ்கின்றது. ஆம். எம் அன்பு இளையோரே, உங்களுக்குத் தேவை தன்னம்பிக்கை. உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம், உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம், இந்த உலகையே நீ ஆளலாம் என்பது கவியரசர் கண்ணதாசனின் தத்துவப்பாட்டு. இளையோரே, நாளை என்பது உங்களுக்கிலை. இன்றே என்பதே உங்கள் கையில். இளையோரே, எழுந்திருங்கள். விழித்திருங்கள். உங்களது வெற்றிக்கனியைப் பறிக்கும்வரை உழைத்திடுங்கள். நீங்கள் தேடுவது உங்களது அகத்திலே இருக்கின்றது. உங்களிலே இருக்கின்றது. என்னால் முடியும் என்பதே உங்களின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். அது என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கையிலிருந்து பிறப்பது.
அந்த இளையோரால் முடிந்தது ஏன் என்னால் முடியாது என்று சிந்தியுங்கள். எதுவும் இயலும் என்ற தன்னம்பிக்கை ஊன்றுகோலுடன் வீறுகொண்டு எழுந்திடுங்கள். இதுதான் எனது பாதை என்று தெரிந்தவுடன் அதில் தயக்கம் தவிர்க்க வேண்டும். தள்ளிப்போடுதலே கூடாது. ஏனெனில் ஒவ்வொரு தாமத நிமிடமும் உங்களது சக்தியை ஓர் அங்குலம் குறைக்கின்றது. உங்களின் அடிமனது தட்டியெழுப்புகிறது என்றால் உடனே எழ வேண்டும். அந்த எழுச்சியில், இளையோரே, உங்கள் ஆற்றல், பெரும் அருவியாய் வந்து கொட்டட்டும்.







All the contents on this site are copyrighted ©.