2013-08-12 16:22:42

மூவேளை செப உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் : இறையன்பு நமது மாபெரும் செல்வம்


ஆக.12.2013. ஒவ்வொரு குடும்பத்தையும் ஒன்றாக இணைத்திருப்பது அன்பு என்றும், அந்த அன்பைக் கொடுப்பவர் இறைவன் என்றும், அதுவே நம் வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுக்கும் உண்மையான செல்வம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் தெரிவித்தார்.
நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் ஒவ்வொரு கடமைக்கும் பொருள் கொடுப்பதும், வாழ்க்கையில் வரும் சோதனைகளை எதிர்கொள்ளத் துணைபுரிவதும் கடவுளின் அன்புதான் என்றும் திருத்தந்தை கூறினார்.
கடவுள் அன்பு என்பது வெறுமையான ஓர் உணர்வு அல்ல, மாறாக, அது இயேசு கிறிஸ்துவில் உருவமும் உயிரும் பெற்றுள்ளது, அதுவே மனித வாழ்க்கையின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் மதிப்பையும் அழகையும் கொடுக்கிறது என்றும் திருத்தந்தை கூறினார்.
கிறிஸ்துவில் வெளிப்படுகின்ற இறையன்பு நம் நம்பிக்கையின் கதவுகளைத் திறக்கின்றது. நம் வாழ்வுத் திருப்பயணத்தின் எல்லையை நோக்கி நம்மை வழிநடத்துகிறது. அதைப்போலவே நம் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு நிகழ்வும் பொருள் பெறுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
நம் பாவங்களும், கடவுளின் அன்பினால் அர்த்தம் பெறுகின்றன, ஏனென்றால் கிறிஸ்துவில் வெளிப்படும் இறையன்பு நம்மை எப்பொழுதும் மன்னிக்கின்றது. மேலும், கிறிஸ்துவைப் பின்பற்றும் ஒவ்வொருவரும், தன் சகோதரர்களுடன் இணைந்து கடவுளைச் சந்திக்கவேண்டும் என்ற மிகப்பெரிய ஆவலைக் கொண்டிருக்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.