2013-08-10 16:08:52

அரசுகளுக்கும் பூர்வீக இனத்தவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தங்கள் அமல்படுத்தப்பட வேண்டும்


ஆக.,10,2013 அரசுகள், தங்களின் பூர்வீக இன மக்களுடன் ஏற்படுத்தியுள்ள உடன்பாடுகளையும், ஒப்பந்தங்களையும் மதித்து அவற்றைச் செயல்படுத்துவதே அமைதி மற்றும் வளர்ச்சிக்கான ஒரே வழி என்று ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்துலக பூர்வீக இன மக்கள் தினம் இவ்வெள்ளிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன், அனைத்து நிலைகளிலும் முடிவு எடுக்கும்போது பூர்வீக இன மக்களின் பங்களிப்பு உறுதிச் செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
அரசுகளுக்கும் பூர்வீக இனங்களுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தங்கள், அவர்களின் கண்ணோட்டங்கள் மற்றும் விழுமியங்களைப் புரிந்துகொள்ளவும், பாதுகாக்கவும் வேண்டுமென வலியுறுத்தியுள்ள பான் கி மூன், பல்வேறு கலாச்சாரங்கள் சமூக நல்லிணக்கத்தோடு ஒன்றித்திருக்க வகைச்செய்யப்பட வேண்டுமென கேட்டுள்ளார்.
'ஒப்பந்தங்கள், உடன்பாடுகள் மற்றும் ஏனைய ஆக்கப்பூர்வமான ஏற்பாடுகளை மதித்தல்‘ என்ற தலைப்பில் இவ்வாண்டின் இவ்வனைத்துலக தினம் கொண்டாடப்பட்டது.
மேலும், அனைத்து அரசுகளும், உடன்பாடுகள் அனைத்தையும் மதிக்கவும் அதன் மூலம் வேற்றுமைகளைக் களையவும், பூர்வீக இன மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதில் வருகின்ற தடைகளைச் சமாளிக்கவும் வேண்டுமென, பூர்வீக இன மக்களுக்கான ஐ.நா.வின் சிறப்பு அதிகாரி James Anaya தெரிவித்துள்ளார்.
இருபது ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்ற விவாதத்துக்குப் பின்னர் 2007ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, அனைத்துலக பூர்வீக இன மக்கள் தினம் கடைப்பிடிக்கப்படுவதற்கு இசைவு தெரிவித்தது.
இத்தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 9ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது.
உலகம் முழுவதும் ஏறக்குறைய 90 நாடுகளில் 5,000க்கும் அதிகமான பூர்வீக இனங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் உலக மக்கள் தொகையில் 5 விழுக்காட்டுக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.