2013-08-09 16:25:38

நாகசாகி நினைவு நாள்


ஆக.,09,2013. 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி ஜப்பானின் நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்ட நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் இவ்வெள்ளியன்று மௌன அஞ்சலி செலுத்தி உலகில் அணுஆயுதங்கள் களையப்படுவதற்கு உருக்கமாக அழைப்புவிடுத்தனர்.
இந்நிகழ்வில் பேசிய, 1945ம் ஆண்டின் அணுகுண்டுத் தாக்குதலுக்கு உள்ளான Shohei Tsuiki, அந்நாளைய கோர நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது தனக்கு 18 வயது நடந்தது என்றும், நாகசாகியில் அணுகுண்டு போடப்பட்டவுடன் அவ்விடம் நரகம் போன்று இருந்ததாகவும், மக்களின் உடல்கள் எரிந்த தோல்களுடன் தொங்கிக்கொண்டிருந்ததாகவும், சிலர் இறந்த தங்களின் குழந்தைகளைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருந்தனர் எனவும் கூறினார் Shohei Tsuiki.
மேலும், இந்நிகழ்வில் பேசிய நாகசாகி மேயர், எந்தச் சூழ்நிலையிலும் அணுஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதைத் தடைசெய்யும் அறிக்கையில் இவ்வாண்டில் கையெழுத்திட ஜப்பான் அரசு தவறியுள்ளது என்று குறை கூறினார்.
இதற்கிடையே, இந்நிகழ்வன்று உரையாற்றிய ஜப்பான் பிரதமர் Shinzo Abe, அணுஆயுதத் தாக்குதலால் உலகில் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள நாடு ஜப்பான் என்பதால், உலகில் ஆயுதங்கள் களையப்படுவதற்கு ஜப்பான் மேலும் முயற்சிகளில் ஈடுபடும் என்று தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.