2013-08-09 16:15:41

திருத்தந்தை பிரான்சிஸ் நிதிசார்ந்த குற்றங்கள் தொடர்பான சட்டங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளார்


ஆக.,09,2013. சட்டத்துக்குப் புறம்பே பணமோசடி இடம்பெறுவதைத் தடை செய்யவும், பயங்கரவாத நிறுவனங்களுக்கும், பெருமளவில் அழிவை ஏற்படுத்தும் ஆயுதப் பரவலுக்கும் நிதியுதவி செய்வதைத் தடுத்து நிறுத்துவதற்குமென புதிய நடவடிக்கைகள் கொண்ட அரசாணையை இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Motu Proprio அதாவது ‘தனது சொந்த முயற்சியினால்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ள இந்த ஆணை, நிதி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் திருப்பீடத்தின் அனைத்துத் துறைகளுக்கும், திருப்பீடத்தைச் சார்ந்த பிற நிறுவனங்களுக்கும், திருஅவை சட்டப்படி இயங்கும் இலாபமற்ற அமைப்புகளுக்கும் பொருந்தும் என, திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்துள்ளது.
சட்டத்துக்குப் புறம்பே இடம்பெறும் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு வத்திக்கான் மேற்கொண்டுள்ள அர்ப்பணத்தை உறுதிப்படுத்துவதற்கென முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2010ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதியன்று வெளியிட்ட Motu Proprio ஆணையை மீண்டும் உறுதிப்படுத்துவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தற்போதைய ஆணை உள்ளது என்றும் அப்பத்திரிகை அலுவலகம் மேலும் அறிவித்துள்ளது.
Motu Proprio என்ற இலத்தீன் பதத்திற்கு, ஒருவரின் சொந்த முயற்சியினால் என்று அர்த்தமாகும். Motu Proprio என்று வெளியிடப்படும் ஆணை திருத்தந்தை அவர்களால் மட்டுமே வெளியிடப்படும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.