2013-08-09 16:23:12

Knights of Columbus அமைப்பினரின் சான்றுவாழ்வை ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்


ஆக.,09,2013 கத்தோலிக்கர் தங்களின் அழைப்புக்கேற்றபடி வாழ்வதற்கு Knights of Columbus என்ற அனைத்துலக கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு செய்துவரும் சிறப்பான பணிகளை ஊக்குவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு Texas மாநிலத்தின் San Antonioவில், “இறைவனின் கொடைகளைப் பாதுகாக்கின்றவர்களாக இருங்கள்” என்ற தலைப்பில் தங்களின் 131வது மாநாட்டை நடத்திய இப்பிறரன்பு அமைப்பின் உறுப்பினர்களுக்கு அனுப்பிய செய்தியில் இவ்வாறு ஊக்குவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருமணம் மற்றும் குடும்பத்தின் உண்மையான இயல்புக்கும், மனித வாழ்வின் தூய்மைக்கும் அதன் இன்றியமையாத மாண்புக்கும், மனிதப் பாலியலின் அழகுக்கும், அதன் உண்மைக்கும் சான்றுகளாய்த் திகழுமாறும் அச்செய்தியில் அவ்வமைப்பினரைக் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.
சமூக மற்றும் கலாச்சார மாற்றங்கள் வேகமாக இடம்பெற்றுவரும் இக்காலத்தில், நற்செய்தி அறிவிக்கும் ஒழுக்கநெறி உண்மைகளை உறுதிப்படுத்திக் காப்பவர்களாகவும் செயல்படுமாறு அவர்களை மேலும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்செய்தியை திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அவர்கள் அனுப்பியுள்ளார்.
இம்மாதம் 6 முதல் 8 வரை நடைபெற்ற இம்மாநாட்டில் 11 கர்தினால் உட்பட 100க்கும் மேற்பட்ட திருஅவைத் தலைவர்களும், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.