2013-08-06 15:36:05

விவிலியத் தேடல் இறைவேண்டல் பற்றிய இரு உவமைகள் - பகுதி 4


RealAudioMP3 இறைவேண்டுதல் பற்றிய இரு உவமைகளை அடிப்படையாகக் கொண்டு, செபிப்பதைப் பற்றிய பொதுவான சிலத் தெளிவுகளைப் பெற கடந்த சில வாரங்களாக முயற்சித்து வருகிறோம். செபிப்பதன் ஒரு முக்கிய நோக்கம்... மாற்றங்கள். உடலளவில், மனதளவில், நாம் வாழும் சூழல்களில் மாற்றங்கள் வேண்டும் என்பது நாம் அடிக்கடி எழுப்பும் செபங்களாகின்றன. ஒரு சில வேளைகளில், மாற்றம் வேண்டாம் என்றும் செபங்களை எழுப்புகிறோம்.

மாற்றங்கள் வேண்டும் அல்லது, வேண்டாம் என்ற பாணியில் நாம் எழுப்பும் செபங்களைப் பற்றி இன்று நாம் சிந்திக்க இரு காரணங்கள் உள்ளன. ஜூலை 6, இச்செவ்வாயன்று, இயேசு உருமாறியத் திருநாள். இதே ஆகஸ்ட் 6ம் தேதி, ஜப்பானின் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட நாள். ஒரே தேதியில் நிகழ்ந்த இவ்விரு நிகழ்வுகளும் இன்றைய நம் தேடலின் மையமாகின்றன.
மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் இயேசுவின் உருமாறுதல் நிகழ்வு சொல்லப்பட்டுள்ளது. (மத். 17: 1-8; மாற். 9: 2-8; லூக். 9: 28-36) நற்செய்தியாளர்கள் மத்தேயு, மாற்கு இருவரும் இயேசுவின் உருமாற்றத்துடன் இப்பகுதியைத் துவக்கும்போது, நற்செய்தியாளர் லூக்கா மட்டும் உருமாற்றத்தை செபத்துடன் இணைத்துப் பேசுகிறார். லூக்கா நற்செய்தியில் நாம் காணும் இந்நிகழ்வின் ஆரம்ப வரிகள்:
லூக். 9: 28-29
ஏறக்குறைய எட்டுநாள்கள் ஆனபிறகு இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார். அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது.
இயேசு வேண்டிக்கொண்டிருந்தபோது, மாற்றங்கள் நிகழ்ந்தன. அவரது முகத்தோற்றமும், அவர் அணிந்திருந்த ஆடையும் மாற்றங்கள் பெற்றன. இயேசுவின் உள்ளும், புறமும் மாறின. செபத்தில் ஈடுபட்டிருக்கும் இயேசுவிடம் இத்தகைய மாற்றங்களை அடிக்கடி கண்டுவந்த சீடர்கள், தங்களுக்கும் செபிக்கக் கற்றுத்தரும்படி இயேசுவிடம் கேட்டதே, (லூக்கா 11:1) நமது இறைவேண்டுதல் உவமைகளை துவக்கி வைத்தன. செபம் நம் வாழ்வில் உருவாக்கும் மாற்றங்களைச் சிந்திப்பது நல்லது... இது, முதல் காரணம்.

இயேசுவின் உருமாற்றத்தைக் கொண்டாடும் இதே ஆகஸ்ட் 6ம் தேதியன்று ஜப்பானில் நிகழ்ந்த ஒரு மாற்றம் உலக வரலாற்றில் மீண்டும் வேண்டாம் என்றும் ஒவ்வோர் ஆண்டும் செபங்கள் விண்ணகத்தை நோக்கி எழுகின்றன. இது இரண்டாவது காரணம். ஆகஸ்ட் மாதத்தின் துவக்கத்தில், பலருடைய நினைவுகளில் ஆகஸ்ட் 6, 9 ஆகிய நாட்கள் வேதனையுடன் பதிந்திருக்கும். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6, மற்றும் 9 தேதிகளில் அமெரிக்கப் படையினர், ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டு வீசினர். இரண்டாம் உலகப் போர், மனித வரலாற்றில் உருவாக்கிய பல இரத்தம் நிறைந்த பக்கங்களில், ஹிரோஷிமா, நாகசாகி பக்கங்கள் இரத்தவெள்ளத்தில் தோய்ந்தவை.

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 6 மற்றும் 9ம் தேதிகளில் இவ்விரு நகரங்களில், அணுகுண்டு வீசப்பட்ட அந்தக் குறிப்பிட்ட நேரங்களில் மணிகள் ஒலிக்கப்படுகின்றன. மணியோசை கேட்டதும், மக்கள் அனைவரும் அவரவர் இருக்கும் இடங்களில், கண்களை மூடி, அமைதியாகச் செபிக்கின்றனர். இது எவ்வகைச் செபம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6,9 தேதிகளில் இவ்வுலகம் கண்ட மாற்றங்கள் இனி வேண்டாம் என்பதே மக்களின் செபமாக ஒவ்வோர் ஆண்டும் எழுகின்றது. ஆகஸ்ட் 6, இயேசுவின் உருமாற்றம் திருநாளைச் சிந்திக்கும்போது, மாற்றங்களை உருவாக்கும் செபத்தின் வலிமையை உணர்கிறோம். அதே ஆகஸ்ட் 6ம் தேதி, ஹிரோஷிமாவை எண்ணிப் பார்க்கும்போது, மாற்றங்கள் வேண்டாம் என்ற செபமும் நம்மிடம் எழுகின்றது.

மாற்றம் வேண்டும் அல்லது வேண்டாம் என்று எதைக் கொண்டு தீர்மானிக்கிறோம்? மாற்றம் எங்கிருந்து ஆரம்பமாக வேண்டும்? நமக்குள்ளிருந்தா அல்லது வெளி உலகிலிருந்தா? பல நேரங்களில் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள், நமது சூழல் மாறினால் நாமும் மாறுவோம் என்று எண்ணுகிறோம், நம்புகிறோம். தீர ஆராய்ந்தால், நமக்குள் இருந்து வரும் மாற்றங்களே பிற மாற்றங்களின் அடித்தளமாய் அமையும்.... நமக்குள் இருந்து எழும் மாற்றங்களே நீண்ட காலம் நீடிக்கும் என்பதை உணரலாம்.

மாற்றங்களைப் பற்றி, அதுவும் நமக்குள் இருந்து ஆரம்பமாகும் மாற்றங்களைப் பற்றி பேசும்போது, இயேசுசபை அருள்பணியாளர் Anthony de Melloவின் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. வயது முதிர்ந்த ஒருவர் தன் வாழ்வைத் திரும்பிப் பார்த்தார்: நான் புரட்சிகளை அதிகம் விரும்பிய இளைஞனாய் இருந்தபோது, "கடவுளே, உலகை மாற்றும் வரம் தா!" என்று இறைவனிடம் வேண்டினேன். நடுத்தர வயதை அடைந்தபோது என் செபம் சிறிது மாறியது: "கடவுளே, என் குடும்பத்தினரை, நண்பர்களை, என்னைச் சுற்றியுள்ளவர்களை மாற்றும் வரம் தா!" என்பது என் செபமானது. இப்போது வயது முதிர்ந்த நிலையில், என் இறுதி நாட்கள் எண்ணப்பட்டுள்ளது என்பதை உணர்கிறேன். இப்போது நான் வேண்டுவது இதுதான்: "கடவுளே, என்னையே நான் மாற்றிக் கொள்ளும் வரம்தா!" என்பதே என் இப்போதையச் செபம். இந்த செபத்தை நான் ஆரம்பத்திலிருந்தே வேண்டியிருந்தால், என் வாழ்வு எவ்வளவோ மாறியிருக்கும். என்னைச் சுற்றியிருந்தவர்கள் மாறியிருப்பர், இந்த உலகமும் மாறியிருக்கும்.

நமது வேண்டுதல்களால் நாம் விழைந்த மாற்றங்கள் நிகழவில்லை எனில், மீண்டும், மீண்டும் வேண்டுதல்களை எழுப்புகிறோம். குழுவாகக் கூடி, தொடர்ந்து பல நாட்கள் வேண்டுதல்கள் எழுப்புகிறோம். ‘Storming heaven with our prayers’ என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடரைப் பயன்படுத்துகிறோம். அதாவது, "நமது செபங்களால் விண்ணகத்தில் புயல் எழுப்புவோம்" என்ற கருத்தில் பேசுகிறோம். இத்தகைய உருவகத்தில் ஓர் ஆபத்து உள்ளது. நமது செபங்களால் விண்ணகத்தை அசைத்து விடலாம், கடவுளை எவ்வகையிலாவது நம் வழிக்குக் கொணரலாம் என்ற வகையில் நம் கற்பனைகள் செல்வது ஆபத்தானது. சொல்லப்போனால், கடவுளை மாற்றிவிடலாம் என்ற கற்பனை இது.
Prayer does not change God, but it changes him who prays. - Søren Kierkegaard "செபங்கள் இறைவனை மாற்றுவதில்லை, செபம் செய்பவரை மாற்றுகின்றன" என்று Søren Kierkegaard என்ற சிந்தனையாளரும், Prayer may not change things for you, but it for sure changes you for things. - Samuel M. Shoemaker "செபங்களால் நம்மைச் சுற்றியுள்ள சூழல்கள் மாறாது, அச்சூழல்களுக்கு ஏற்ப நாம் மாறுகிறோம்" என்று Samuel Shoemaker என்ற இறைபணியாளரும் கூறியுள்ளனர். செபங்கள் மாற்றங்களை உருவாக்கும் என்று சிந்திக்கும்போது, இத்தகையக் கோணத்தில் சிந்திப்பது பயனளிக்கும். மேலும், செபிப்பதால் நம்மிடம் உருவாகும் மாற்றங்கள், இயேசுவின் தோற்ற மாற்றம் நிகழ்வில் நடந்ததுபோல், பலருக்கும் தெளிவாகத் தெரியும்படி அமையலாம். அல்லது, ஒருவருக்கும் தெரியாத, புலப்படாத உள்ளார்ந்த மாற்றங்கள் நிகழலாம். ஒரு சில வேளைகளில், நமது செபங்கள் மிக அற்புதமான மாற்றங்களையும் உருவாக்கும்.

உலகின் பல பகுதிகளிலும் உள்ள பல்லாயிரம் திருத்தலங்களில் பக்தர்கள் எழுப்பும் செபங்களால் அற்புதமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் அமைந்துள்ள அன்னை மரியா திருத்தலத்தில் இத்தகைய அற்புதமான மாற்றம் ஒன்று நிகழ்ந்ததாக இவ்வாண்டு ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது.
1989ம் ஆண்டு நிகழ்ந்த இந்தப் புதுமை, கடந்த 24 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள், ஆலோசனைகள் ஆகியவற்றிற்குப் பிறகு, இவ்வாண்டு, ஜூன் 20ம் தேதி புதுமை என்று அறிவிக்கப்பட்டது. 1946ம் ஆண்டு இத்தாலியில் பிறந்த Danila Castelli என்ற பெண்ணை 34வது வயதுக்குப் பிறகு ஓர் இனம் புரியாத நோய் தாக்கியது. ஒன்பது ஆண்டுகள் Danila மேற்கொண்ட பல வைத்தியங்கள் பலனளிக்கவில்லை. Danilaவுக்கு லூர்துநகர் அன்னையிடம் சென்று வேண்டிக்கொள்ள வேண்டுமென்ற ஆவல். எனவே, அவர், 1989ம் ஆண்டு அவரது கணவருடன் லூர்து நகர் அன்னை மரியாவின் திருத்தலம் சென்றார். அங்குள்ள நீர் ஊற்றில் குளித்த பின் தன்னிடம் ஏற்பட்ட ஒரு மாற்றத்தை அத்திருத்தல அலுவலகத்தில் பதிவு செய்தார்.

இப்பதிவைத் தொடர்ந்து, 1989, 1992, 1994, 1997, 2010 ஆகிய ஆண்டுகளில் மருத்துவர்கள் குழு Danilaவை மீண்டும், மீண்டும் சந்தித்தது. பல ஆண்டுகள் நீடித்த ஆய்வுகள், விவாதங்கள் ஆகியவற்றின் முடிவாக, Danilaவுக்கு ஏற்பட்டுள்ள நலமிக்க மாற்றம் மருத்துவ அறிவைக்கொண்டு விளக்கமுடியாத ஒரு நிகழ்வு என்பதை இம்மருத்துவர்கள் குழு, 2011ம் ஆண்டு, நவம்பர் 19ம் தேதி அறிவித்தது. இதைத் தொடர்ந்து, Danila தற்போது இத்தாலியில் வாழ்ந்து வரும் Paiva மறைமாவட்டத்தின் ஆயர் Giovanni Giudici அவர்கள், 2013ம் ஆண்டு, ஜூன் 20ம் தேதி இதனை ஒரு புதுமை என்று அறிவித்தார்.

இத்தகைய மாற்றங்கள் ஒவ்வொரு நாள் நிகழ்வு அல்ல. 1858ம் ஆண்டு முதல் கடந்த 155 ஆண்டுகளாகப் புகழ்பெற்று விளங்கும் லூர்து நகர் அன்னை திருத்தலத்திற்கு, ஒவ்வோர் ஆண்டும் செல்லும் பக்தர்கள் தங்கள் உள்ளங்களில் செபங்களை ஏந்திச் செல்கின்றனர். தங்கள் வாழ்வில் நிகழவேண்டிய ஒரு முக்கியமான மாற்றத்தை உள்ளத்தில் ஏந்திச் செல்கின்றனர். இந்தச் செபங்களையெல்லாம் ஒன்று திரட்டினால், அன்னையின் திருத்தலத்தில் இதுவரை பல்லாயிரம் கோடி செபங்கள் எழுப்பப்பட்டிருக்கும் என்பது நிச்சயம். இவர்களில் பல்லாயிரம் பேருக்கு மாற்றங்களும் உறுதியாக நிகழ்ந்திருக்கும். ஆயினும், இத்திருத்தலத்தின் 155 ஆண்டு வரலாற்றில், Danila Castelli அவர்களின் புதுமை 69வது அதிகாரப்பூர்வப் புதுமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமான புதுமைகள் நிகழவில்லையெனினும், லூர்து நகர் அன்னையின் திருத்தலம் சென்று வந்துள்ள அனைவருமே தங்கள் வாழ்வில் மாற்றங்களை உணர்ந்திருப்பர் என்பது நிச்சயம். இயேசு சபையின் முன்னாள் உலகத் தலைவராக பணியாற்றிய Pedro Arrupe அவர்கள் லூர்து நகர் அன்னையின் திருத்தலத்தில் தனக்கு ஏற்பட்ட மாற்றங்களைக் கூறியுள்ளார். மருத்துவயியல் மாணவரான அவர், அங்கு கோடை விடுமுறையில் பணி செய்யச் சென்றிருந்தபோது, ஒரு நாள் மாலையில் திருநற்கருணை ஊர்வலத்தில் கலந்துகொண்டார். நடக்கும் திறன் இழந்திருந்த ஒருவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கையில், திருநற்கருணையைச் சுமந்துவந்த அருள் பணியாளர், அவரை அணுகி ஆசீர்வதித்ததும், சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அவர் எழுந்து நடக்க ஆரம்பித்ததை Arrupe அவர்கள் நேரில் கண்டதாகக் கூறியுள்ளார். அந்த நிகழ்வு அவர் வாழ்வில் ஒரு மாற்றத்தை உருவாக்கியதாகவும், கோடை விடுமுறை முடிந்து திரும்பியவர், இயேசு சபையில் இணைந்ததாகவும் கூறியுள்ளார்.

எங்கும், எப்போதும், எந்நிலையிலும் நாம் செபிக்கலாம். நமது தேவைகளை விட அடுத்தவர் தேவைகள் நமது வேண்டுதலில் அதிகம் இடம்பெறுவது சிறந்த செபம், கடவுளிடம் அல்ல, நம்மிடம் மாற்றங்களை உருவாக்குவதற்கே செபிக்கிறோம் என்ற எண்ணங்களை செபத்துடன் தொடர்புபடுத்தி சிந்தித்து வருகிறோம். இந்தப் பாடங்களையும், இறைவேண்டுதல் குறித்து இயேசு சொல்லித்தந்த அனைத்து பாடங்களையும் தன் வாழ்வாக மாற்றியவர் அன்னை மரியா.

மனித வாழ்வின் உயிர் மூச்சான இறைவேண்டுதலின் பல பரிமாணங்களை, பல்வேறு பாடங்களை நமக்குத் தொடர்ந்து சொல்லித்தரும் அன்னை மரியாவின் செப வாழ்வை ஓர் அற்புதக் கவிதையாக வடித்துள்ளார் அருள் பணியாளர் அருள் வரப்பிரசாதம் அவர்கள். 70 ஆண்டுகளுக்கும் மேலாக இயேசு சபையில் தன் பணியைத் தொடர்ந்து வரும் அருள் பணியாளர் வரப்பிரசாதம் அவர்களின் கவிதையை வாசித்தபோது, எனக்குள் எழுந்த எண்ணங்களை இங்கு தொகுத்துள்ளேன். இந்த எண்ணங்களுடன் இறை வேண்டல் உவமை என்ற நமது இரு உவமைகளின் தேடலை நாம் நிறைவு செய்வோம்:

நம்மை மிகவும் ஈர்த்த ஒரு புன்னகை நம் மனதில் பசுமையாய்ப் பதிகின்றது
என்றோ சொல்லப்பட்ட ஓர் அன்பு வார்த்தை இன்னும் உள்ளத்தில் சுடராய் ஒளிர்கின்றது
இந்தப் புன்னகையை, இந்த வார்த்தையை
மீண்டும், மீண்டும் அசைபோடுவதால் நாம் சக்தி பெறுகிறோம்.
ஆண்டவன் அருளை அசைபோடுவதில், அன்னை மரியாவுக்கு இணை, அவரே...
உயர்ந்த பல நினைவுகளின் உன்னத ஆலயம்
அன்னை மரியாவின் அற்புத உள்ளம்.
பச்சிளம் குழந்தையாய் புல்லணையில் படுத்திருந்தவரைப்பற்றி
ஆயர்கள் கூறிய அற்புத வார்த்தைகளை
மரியா தன் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார் (லூக்கா 2:19).
பன்னிரு வயதில் எருசலேம் கோவிலில்
பலரையும் வியக்கச் செய்த தன் பாலனைப் பற்றிய "நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்" அன்னை மரியா (லூக்கா 2:51).
பணிவாழ்வில் தன் மகன் உழைத்தபோதும்
பரிதாபமாய் சிலுவைச் சுமந்து அவர் களைத்தபோதும்
அனைத்தையும் மனதில் பதித்து, உடன் சென்றவர் அன்னை மரியா.
உயர்ந்த பல நினைவுகளின் உன்னத ஆலயம்
அன்னை மரியாவின் அற்புத உள்ளம்.
இறை வேண்டலின் இணையில்லா வாழும் உவமை, அன்னை மரியா.








All the contents on this site are copyrighted ©.