2013-08-05 16:30:59

வாரம் ஓர் அலசல் – நல்லவர்களுக்கு நல்ல எதிர்காலம்


ஆக.05,2013. RealAudioMP3 அமுதன், யாசகன் என அண்ணன், தம்பி இருவர். அப்பாவின் இறப்புக்குப் பின்னர் அவருடைய வியாபாரத்தை இவ்விருவரும் கவனித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒருமுறை ஒரு கிராமத்திற்குப் போய், தங்களுக்கு வரவேண்டிய ஆயிரம் பவுன்களை வசூலித்தனர். அதனை ஒரு சாக்குப் பையில் போட்டுக்கொண்டு இருவரும் ஊர் திரும்ப ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர். படகுக்காரர் எங்கோ போயிருந்ததால் தம்பியிடம் அந்தப் பையைக் கொடுத்துவிட்டுச் சற்று கண்மூடித் தூங்கினார் அண்ணன். இதற்குள் தம்பி, அதேபோன்ற ஒரு சாக்குப் பையில் கற்களை வைத்துக் கட்டி வைத்து அதனை ஒளித்துக் கொண்டார். சற்று நேரத்திற்கெல்லாம் படகுக்காரர் வரவே தம்பி தன் அண்ணனை எழுப்பி அவரோடு படகில் ஏறி உட்கார்ந்தார். படகும் கிளம்பியது. படகு நடு ஆற்றில் போகும்போது தம்பி ஒரு பையை எடுத்து ஆற்றில் நழுவவிட்டு, "ஐயோ அண்ணா, நம்முடைய பவுன்கள் பை ஆற்றில் விழுந்துவிட்டதே,'' எனக் கூறினார். "போனால் போகட்டும். அது நமக்குரியதாக இருந்தால் நமக்கே கிடைக்கும்,'' எனக் கூறினார் அண்ணன் அமுதன். தம்பியும் தான் தந்திரமாக ஆயிரம் பவுன்களைத் தட்டி விட்டதாக எண்ணி மகிழ்ந்தார். ஆனால், அவர் அவசரத்தில் ஆற்றில் போட்டது பவுன்கள் பையைத்தான். கற்களை வைத்துக் கட்டிய பைதான் அவரிடம் இருந்தது. அந்த ஆற்றில் இருந்த ஒரு பூதம், தம்பி பையை ஆற்றில் போட்டதும் ஒரு மீனை உடனே விழுங்கச் சொல்லி கட்டளை இட்டது. மீனும் அப்பூதம் சொன்னபடி நடந்தது. பூதம் தம்பி செய்த மோசடியைப் புரிந்து கொண்டது. எனவே, அந்தப் பையை எப்படியும் அண்ணனிடம் சேர்த்துவிட எண்ணி அதனை விழுங்கிய மீன் எங்கும் போகாதபடி காவல் காத்தது.

அண்ணனும், தம்பியும் காசிக்கு வந்து தங்கள் வீட்டை அடைந்தனர். தம்பி வீட்டில் தனியாக ஓரிடத்திற்குப்போய் தன்னிடமிருந்த பையை அவிழ்த்துப் பார்த்தார். அதில் கற்கள் இருப்பதைக் கண்டு, "ஐயோ! நான் அண்ணனை ஏமாற்ற எண்ணி நானே ஏமாந்தேனே...'' என எண்ணி மனம் புழுங்கினார். அன்று சில மீனவர்கள் ஆற்றில் வலை போட்டபோது பூதம் மீனவராக மாறி அந்த மீனை எடுத்துக்கொண்டு அண்ணனின் வீட்டுக்குச் சென்றது. அண்ணன் அந்த மீனவர் கேட்டபடி, ஒரு பவுனைக் கொடுத்து அந்த மீனை வாங்கிக் கொண்டார். அதனை அவர் தன் மனைவியிடம் கொடுக்கவே அவர் அதனை இரண்டாக நறுக்கினார். அதன் வயிற்றிலிருந்து பவுன்கள்பை வெளியே விழுந்தது. அதைக் கண்டு திகைத்தார் அமுதன். "இது நம் பவுன்களே. இதனை நம்மிடம் கொடுக்கவே இந்த மீனவர் வந்திருக்கிறார். இவருக்கு எப்படி இது கிடைத்தது?'' என எண்ணி வியந்தார் அமுதன். அப்போது, "அமுதா... நீர் மிகவும் நல்லவர். இந்த ஊரில் உள்ள ஏழைகளுக்கு நிறைய உதவிகளைச் செய்கிறீர். ஒரு முறை நீங்கள் படகில் சென்றபோது உம் கையில் இருந்து நழுவிய உணவுப் பொட்டலத்தை உண்டேன். "அது எனக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தது. அதனால்தான் உம்முடைய பவுன்கள் பையை உனது தம்பி வேண்டுமென்றே தூக்கி வீசியபோது அதை விழுங்கும்படி இந்த மீனுக்குக் கட்டளை கொடுத்தேன். அந்த மீனையும் எடுத்துக்கொண்டு வந்தேன். நல்லவர்களுக்கு எல்லாமே நல்லதாய்த்தான் நடக்கும்...'' என்று அந்தப் பூதம் சொல்லி மறைந்தது. அதைக் கேட்டு மகிழ்ந்தார் அமுதன். மறைக்காமல் அதில் பாதியான ஐந்நூறு பவுன்களைக் தன் தம்பியிடம் கொடுத்தார். (நன்றி: தினமலர்)

நல்லவர்களுக்கு எல்லாமே நல்லதாய்த்தான் நடக்கும். எம் இனிய வத்திக்கான் வானொலி அன்புள்ளங்களே, கடந்த ஜூலை 2ம் வாரத்தில் சமூக வலைதளங்களில் ஒரு சிறுவன் உச்சத்தில் வைத்துக் கொண்டாடப்பட்டார். “கடலில் தத்தளித்த உயிர்... காப்பாற்றிய இளம் தளிர்!.. சூர்யா மட்டும் இல்லையென்றால்...” என்று ஊடகங்கள் செய்தியை வெளியிட்டிருந்தன. இச்செய்தி பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து சூர்யாவுக்கு உலகம் முழுவதிலுமிருந்து பாராட்டுக் குரல்கள் எழுந்து கொண்டிருந்தன. பத்தாவது படிக்கும் சிறுவன் சூர்யா என்ன செய்தார் என்பது நேயர்களுக்குத் தெரிந்திருக்கலாம். கடந்த ஜூலை 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று வழக்கம்போல, சென்னையின் அழகிய மெரினா கடற்கரை மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது. பலர் கடற்கரையில் அமர்ந்து கடற்காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தனர். பலர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேரின் குதூகலக் கூச்சல், கொஞ்சம் அதிகமாகவே கேட்டுக்கொண்டிருந்தது. திடீரென, 'காப்பாத்துங்க... காப்பாத்துங்க...’ என்று அபயக் குரலாக அக்கூச்சல் மாறியது. ஆனால், 'உற்சாகக் கூச்சல்' என்றே கரையிலிருந்தவர்களால் உணரப்பட்டது. அதேசமயம், 'அது உயிர்க்கூச்சல்' என்பதை உணர்ந்தார் கடற்கரையில் சுக்கு காபி விற்றுக்கொண்டிருந்த சிறுவன் சூர்யா. உடனே சூர்யா காபிகேனைக் கீழே வைத்துவிட்டு, சிங்கம்போல சீறிப் பாய்ந்தார் கடலில். சூர்யா சென்ற வேகத்தைப் பார்த்தபோதுதான், கரையிலிருந்த கூட்டத்துக்கு ஏதோ விபரீதம் என்று புரிந்தது. அனைவரும் பதற்றமடைந்தனர். ஐந்து மாணவர்களில் இருவர் கரைக்கு வந்துவிட, மற்ற மூவரும் மயங்கிய நிலையில் அலையில் சிக்கினர். அதில் ஒருவரை சூர்யா போராடி கரைக்கு இழுத்துவர, மற்ற இருவரையும், அங்கிருந்த மீனவர்கள் படகில் அள்ளிப்போட்டுக் கொண்டு வந்தனர். சூர்யாவால் காப்பாற்றப்பட்டவர், சற்று நேரத்திலேயே சுயநினைவைப் பெற்றுவிட, மற்ற இருவரும் மூச்சுப் பேச்சற்ற நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் ஒருவர் உயிர் பிழைத்துக்கொள்ள, மற்றொருவர் பரிதாபமாக இறந்து போனார்.

சிறுவன் சூர்யாவின் குடும்பம் வறுமையினால் வாடும் குடும்பம். சூர்யாவின் அப்பா, அம்மா கடற்கரையில் சோளம், மாங்காய் விற்பவர்கள். அண்ணன், ஆட்டோ மொபைல் கம்பெனியில் வேலை செய்கிறார். அம்மா, அப்பாவுக்கு உதவியாக வீட்டிலேயே இருக்கிறார் அக்கா. அந்த வீட்டில் படிக்கும் ஒரே நபர் சூர்யாதான். படிப்பதற்கு ஆசைப்பட்ட சூர்யா இப்போது பத்தாவது படிக்கிறார். தினமும் பள்ளியிலிருந்து திரும்பியதும் மெரினா கடற்கரையில் காபி விற்று பெற்றோருக்கு உதவி செய்கிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேரமும் சுக்கு காபி, சுண்டல் விற்கிறார். கிடைக்கும் பணத்தை அப்படியே அம்மாவிடம் கொடுத்துவிடுகிறார் சூர்யா. அன்று நடந்த நிகழ்வை விகடன் நிருபரோடு இப்படி பகிர்ந்து கொண்டுள்ளார் சூர்யா....

''விபரீதம்னு புரிஞ்சதும்... 'நம்மளால காப்பாத்த முடியுமா... நாமளும் கடல்ல மாட்டிக்குவோமா?'ங்கற கேள்விகள் எழறதுக்கு முன்ன, என் கால்கள் கடலை நோக்கி ஓடிருச்சு. ஆனா, என்னால ஒரு அண்ணனை மட்டும்தான் காப்பாத்த முடிஞ்சுது'. 'கண்ணு முன்னாடி உயிருக்குப் போராடுறதை எப்படி பார்த்துட்டு இருக்குறது? நாம மத்தவங்களுக்கு உதவினாத்தான்... நமக்கு உதவ நாலு பேரைக் கடவுள் அனுப்புவார். 'அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நான் கடற்கரையில காப்பி விக்கிறதுல சம்மதம் இல்லதான். 'நீ படிடா’னுதான் சொல்லுவாங்க. ஆனா, குடும்பக் கஷ்டத்தை உணர்ந்து இதைச் செய்றேன். அதேசமயம், நல்லா படிச்சு இன்ஜினீயர் ஆகிடுவேன். அதுக்குப் பிறகு எங்க கஷ்டமெல்லாம் பறந்துடும்!''

என்று சிறுவன் சூர்யா சொல்லியிருக்கிறார். சூர்யாவுக்கு, காலில் போட செருப்புகூட இல்லை. சூர்யாவின் ஏழைத் தாய் விஜயா, ''சூர்யாவின் எதிர்கால ஆசைக்கு அவன் சொல்கிற கடவுள்தான் வழிகாட்ட வேண்டும்'' என்று கண்களில் வழிந்த நீரை துடைத்தபடி சொல்லியிருக்கிறார். அன்பு நேயர்களே, நல்லவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதுதானே நம்பிக்கை! ஆம். சூர்யா காப்பாற்றிய வசந்த், சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கிறார். வசந்த்தின் அம்மா பிரபா சொல்லியிருக்கிறார்...

''சூர்யாவின் படிப்புச் செலவு, எங்களுடையது. 'கடவுள் கண்ணுக்குத் தெரியமாட்டார்னு சொல்வாங்க. அது நெசமில்லைப்பா... என் பையனக் காப்பாத்துன சூர்யாதான் எனக்கு கடவுள். இப்ப எங்க குடும்பத்துல சூர்யாவும் ஒருத்தனாகி, என் வயித்துல பொறக்காத புள்ளையாகிட்டான். கஷ்டப்படுற சூர்யாவோட கனவு... நல்லா படிக்கிறதுனு கேள்விப்பட்டேன். அவனோட கல்விச் செலவை நான் ஏத்துக்கப் போறேன். என் பையனைக் காப்பாத்தினதுக்கு நான் செலுத்துற நன்றிக்கடன் இதுதான். வாழ்நாள் முழுசும் செலுத்தினாலும் இந்தக் கடன் தீராதுப்பா''

என்று பிரபா ஆனந்தக் கண்ணீருடன் விகடனுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார். “மனிதன்” என்ற இணையத்தில் இச்சனிக்கிழமையன்று ஒரு நிகழ்ச்சி பிரசுரமாகியிருந்தது. அழுக்கடைந்த ஓரிடத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஓர் ஏழைச் சிறுவன் 50 ரூபாய்த் தாளை குப்பையில் கண்டெடுத்தார். 6 வயது மதிக்கத்தக்க அச்சிறுவன் அதை வைத்துக்கொண்டு ஏதாவது வாங்கிச் சாப்பிடலாம் என்று கடைகளுக்குச் சென்றார். ஒருவர் ஐஸ்கிரீம் சாப்பிடுவதைப் பார்த்து இச்சிறுவனுக்கும் ஐஸ்கிரீம் சாப்பிட ஆசை வந்தது. அந்நேரத்தில் அந்தப் பக்கம் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனின் பந்து அருகிலிருந்த டீக் கடையில் விழுந்து கண்ணாடி டம்ளர்களை சுக்கு நூறாக உடைத்து விட்டது. அந்த டீக்கடைக்கார அம்மாவும் ஏழைதான். பதறினார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த ஏழைச் சிறுவன் தன்னிடமிருந்த 50 ரூபாயை எடுத்து டம்ளர்களை வாங்கி அந்தக் டீக்கடைக்கார அம்மாவுக்குத் தெரியாமலே அவற்றை அங்கு வைத்துவிட்டு மகிழ்ச்சியோடு திரும்பினார்.

இலங்கையின் வடக்கே போரினால் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதியில் பெண்கள் மற்றும் சிறாரின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு உழைத்து வருகின்ற 49 வயது Thavachsri Charles Vijayaratnam என்ற பெண் அனைத்துலக அமைதி விருதுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார் என்று இஞ்ஞாயிறன்று பிபிசி கூறியுள்ளது. அன்பு நேயர்களே, நல்லவர்களுக்கு நல்ல எதிர்காலம் நிச்சயம் உண்டு. நாம் இந்நிகழ்ச்சியில் கேட்ட அண்ணன் அமுதன், பத்தாம் வகுப்பு படிக்கும் சூர்யா, டம்ளர்கள் வாங்கிக் கொடுத்த சிறுவன் போன்று, நல்லது செய்யும் நல்லவர்களுக்கு நல்ல எதிர்காலம் நிச்சயம் உண்டு. ஆனால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் சொன்னது போல, இலாபத்தையும் உடைமைகளைக் கொண்டிருப்பதையும் அடிப்படையாகக் கொண்டு இக்காலம் முன்வைக்கும் வெற்று வார்த்தைகளுக்கும், மதிப்பீடுகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தால் எல்லாமே வீணாய்ப் போகும். வீணிலும் வீண், எல்லாமே வீண். ஆயினும், நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களை, தங்கள் எண்ணத்தால், செயல்களால் உயர்ந்தநிலை கொண்டவர்களை இந்த உலகம் எப்போதும் உயர்ந்த நிலையில் வைத்து வணங்கத் தவறுவதில்லை. எனவே நல்லவர்களாக வாழ முயற்சிப்போம். அல்லவை அகற்றி நல்லவை செய்வோம். நல்லவர்களுக்கு எப்போதும் நல்ல எதிர்காலம் உறுதியாக உண்டு.







All the contents on this site are copyrighted ©.