2013-08-05 16:28:36

கற்றனைத்தூறும்.....உலகின் மிகப் பழமையான பாலைவனம்


தெற்கு ஆப்ரிக்காவிலுள்ள Namib பாலைவனம், உலகின் மிகப் பழமையான மற்றும் நீளமான பாலைவனமாகும். இது, அட்லாண்டிக் கடற்கரையில் வடக்கு தெற்காக இரண்டாயிரம் கிலோ மீட்டருக்கு மேலான நீளத்தையும், கிழக்கு மேற்காக 200 கிலோ மீட்டர் அகலத்தையும், 81,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் கொண்டுள்ளது. Namib பாலைவனத்தின் பெரும் பகுதி நமீபியா நாட்டில் அமைந்துள்ளது. Namib மணல் கடல் எனவும் அழைக்கப்படும் Namib பாலைவனம், அங்கோலா, தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது. இப்பாலைவனத்தின் வடக்குப் பகுதி, அங்கோலா-நமீபியா எல்லையில் 450 கிலோ மீட்டர் அளவுக்குப் பரவியுள்ளது. இப்பகுதி Moçâmedes பாலைவனம் என அழைக்கப்படுகிறது. Namib பாலைவனத்தின் தெற்குப் பகுதி, அதன் அருகிலுள்ள Kalahari பாலைவனத்தோடு இணைந்துள்ளது. Namib பாலைவனத்தின் மிக வறண்ட பகுதியில் ஆண்டுக்கு 2 மில்லி மீட்டரும், மற்ற பகுதியில் ஆண்டுக்கு 200 மில்லி மீட்டரும் மழை பெய்கிறது. இங்கு ஏற்பட்டுள்ள வறட்சி, ஏறக்குறைய 5 கோடியே 50 இலட்சம் ஆண்டுகள் முதல் 8 கோடி ஆண்டுகள்வரை பழமையுடையதாகும். இதனால் Namib பாலைவனம், உலகின் மிகப் பழமையான பாலைவனமாகக் கருதப்படுகிறது. இப்பாலைவனம் அட்லாண்டிக் கடற்கரையருகில் அமைந்துள்ளதால், இது கடல் மணலைக் கொண்டுள்ளது. இங்குள்ள சில மண் குவியல்கள், 300 மீட்டர் உயரத்தையும், 32 கிலோ மீட்டர் நீளத்தையும் கொண்டுள்ளன. இம்மண் குவியல்கள், சீனாவின் Badain Jaran பாலைவனத்துக்கு அடுத்தபடியாக, உலகில் அமைந்துள்ள இரண்டாவது பெரிய பாலைவன மண்குவியல்களாகும். Namib பாலைவனத்திலுள்ள சாறுநிறைந்த அசாதராண தாவர வகைகளில் இரண்டு இலைகள் மட்டுமே உள்ளன. இத்தாவரங்கள் 1,000த்துக்கு மேற்பட்ட ஆண்டுகள் வாழக்கூடியவை எனச் சொல்லப்படுகிறது.

ஆதாரம் : விக்கிப்பீடியா







All the contents on this site are copyrighted ©.