2013-08-05 16:54:07

கர்தினால் டர்க்சன் : ஹிரோஷிமா நினைவு நாள் திருப்பலி


ஆக.,05,2013. தலைவனைத் தனியாக விட்டுவிட்டு ஓடிய, மற்றும் அவரைக் காட்டிக்கொடுத்தச் சீடர்களின் செயலை மன்னிக்கும் இயேசு, தான் உயிர்த்தபின் அவர்கள் நடுவில் தோன்றி, அவர்களை நோக்கி 'சமாதானம்' என உரைத்து அவர்களோடு ஒப்புரவை வளர்க்கிறார் என்றார் கர்தினால் பீட்டர் டர்க்சன்
1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9 தேதிகளில் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகாசாகி நகர்களில் அணுகுண்டு வீசப்பட்டதன் நினைவையொட்டி 'அமைதிக்கான 10 நட்கள்' என்ற திட்டத்தின்கீழ் அந்நாட்டில் பயணம் மேற்கொண்டுவரும் திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் டர்க்சன் இத்திங்களன்று ஹிரோஷிமாவில் நிறைவேற்றிய திருப்பலியில் இவ்வாறு மறையுரையாற்றினார்.
உயிர்த்த இயேசுவின் மன்னிப்பையும் ஒப்பரவு அமைதியையும் பெற்ற சீடர்கள், மன்னிப்பு மற்றும் ஒப்புரவின் பணியை எடுத்துரைக்கத் தேவையான கொடைகளை தூய ஆவியிடமிருந்து பெற்றுப் பலமடைந்தனர் என்றார் கர்தினால்.
மக்களிடையேயான பகையுணர்வுகளை முடிவுக்குக் கொணரவும், போர் ஆயுதங்களை அமைதியின் ஆயுதங்களாக மாற்றவும், கவலைகளை மகிழ்வாக மாற்றவும் கடவுளின் வார்த்தைகள் அவரின் சீடர்களால் நமக்குக் கொணரப்படுகின்றன எனவும் எடுத்துரைத்தார் கர்தினால் டர்க்சன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.