2013-08-03 16:09:10

பொதுக்காலம் - 18ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 உலகப் புகழ்பெற்ற மனநல மருத்துவர் Karl Augustus Menningerஐத் தேடி ஒரு செல்வந்தர் வந்தார். என்னதான் முயன்றாலும் தன்னால் மகிழ்வாக வாழமுடியவில்லை என்று அந்தச் செல்வந்தர் சொன்னபோது, மருத்துவர் Menniger அவரிடம், "நீங்கள் சேர்த்துவைத்துள்ள செல்வத்தைக் கொண்டு என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டார். அச்செல்வந்தர் ஒரு பெருமூச்சுடன், "ம்... என்ன செய்வது? என் சொத்துக்களைப்பற்றி கவலைப் பட்டுக்கொண்டே இருப்பதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்?" என்று சொன்னார். "இவ்விதம் கவலைப்படுவதில் நீங்கள் இன்பம் காண்கிறீர்களா?" என்று Menninger கேட்டதும், "இல்லவே, இல்லை... ஆனால், அதேநேரம், என் சொத்தில் ஒரு சிறு பகுதியையும் பிறருக்குத் தருவது என்று நினைத்தாலே பயத்தில் உறைந்து போகிறேன்" என்று பதில் சொன்னார் செல்வந்தர். அப்போது, மனநல மருத்துவர் Karl Menninger மிக ஆழமான ஓர் எண்ணத்தை வெளிப்படுத்தினார்: “Money-giving is a very good criterion of a person's mental health. Generous people are rarely mentally ill people.”"தாராள மனதுடையவர்கள் மனநோய்க்கு உள்ளாவதில்லை". "தாராள மனதுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் நோயின்றி வாழ்வர்."

தன்னைச் சுற்றி செல்வத்தைக் குவித்துவைக்க வாழ்நாள் முழுவதும் உழைப்பவர்கள், நோய்களையும் கூடவே குவித்து வைக்கின்றனர். இது நாம் அனைவரும் அறிந்த உண்மை. இத்தகையோரில் ஒருவரை இன்றைய நற்செய்தியில் (லூக்கா 12: 13-21) நாம் சந்திக்கிறோம். அவரை இறைவன், 'அறிவிலியே' என்று அழைக்கிறார்.
இயேசு கூறிய 'அறிவற்ற செல்வன்' உவமையை நாம் ஆங்கிலத்தில் வாசிக்கும்போது, அங்கு இச்செல்வன் தனக்குத் தானே பேசிக்கொண்ட ஒரு சில வார்த்தைகளில் ‘I’ (நான்) என்ற ஒரெழுத்துச் சொல்லை ஆறுமுறையும், ‘my’ (எனது) என்ற ஈரெழுத்துச் சொல்லை ஐந்து முறையும் பயன்படுத்தியுள்ளார் என்பதைக் காணலாம். தன் எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட்ட அவர், தன்னைத் தாண்டிய ஓர் உலகத்தைக் காணமுடியாதவாறு பார்வையற்றுப் போனார்.
தங்களைச் சுற்றி தன்னலக் கோட்டைகளை எழுப்பி, அவற்றில் தேவைக்கு அதிகமாக செல்வங்களைக் குவிப்பவர்கள் நரகத்தை உருவாக்குகின்றனர். அந்த நரகத்தில் தங்களையேப் புதைத்துக்கொண்டு, அதை விண்ணகம் என்று தவறாகக் கற்பனை செய்து வாழும் செல்வர்கள்... பரிதாபத்திற்குரியவர்கள். அவர்களை 'அறிவிலிகள்' என்று அழைப்பதற்குப் பதில், வேறு எவ்விதம் அழைப்பது?

அறிவற்றச் செல்வனை இந்தப் பொய்யான விண்ணகத்தில் பூட்டியது எது? அவர் நிலத்தில் விளைந்த அறுவடை. இறைவன் தனக்குக் கொடுத்த நிலம் என்ற இயற்கைக் கொடை, அந்நிலத்தில் தங்கள் வியர்வையையும், இரத்தத்தையும் சிந்தி உழைத்த ஏழை மக்கள் ஆகிய அடிப்படை உண்மைகள் இணைந்ததால், அச்செல்வனின் இல்லம் அறுவடை பொருள்களால் நிறைந்தது. வீட்டை அடைந்த விளைபொருள்கள் மட்டுமே செல்வனின் கண்களையும் கருத்தையும் நிறைத்தனவே தவிர, அந்த அறுவடையின் அடிப்படை உண்மைகள் அவர் கண்களில் படவில்லை, எண்ணத்தில் தோன்றவில்லை.
அறுவடைப் பொருள்கள் செல்வனின் வீடு வந்த சேர்ந்த காட்சியைச் சிறிது கற்பனை செய்துபார்ப்போம். தானிய மூட்டைகளைத் தங்கள் முதுகில் சுமந்து வந்து வீடு சேர்த்த தொழிலாளிகள், மீண்டும் நிமிர்ந்து செல்லவும் வலுவின்றி திரும்பியிருக்கக் கூடும். செல்வனின் களஞ்சியங்களை நிரப்பிய அவர்கள், தங்கள் வயிற்றை நிரப்ப முடியாமல் பட்டினியில் மயங்கி விழுந்திருக்கக் கூடும். இந்த ஊழியர்களின் ஊர்வலம் தன் கண்முன் நடந்ததைக் கண்டும், காண மறுத்தச் செல்வன், அவர்கள் கொண்டுவந்து சேர்த்த பொருள்களை - அதாவது, தானியங்களை மட்டுமே பார்க்கிறார். குவிந்துள்ள தானியங்களைப் பகிர்ந்து தருவதற்கு மறுத்து, அவற்றை இன்னும் பதுக்கி வைப்பதற்கு, தன் களஞ்சியங்களை இடித்து, பெரிதாக்கத் திட்டமிடுகிறார். மனித உழைப்பில் விளைந்த தானியங்கள், மனிதர்களைவிட அதிக மதிப்பு பெறுகின்றன என்பதை இந்த உவமை வழியே நான் உணர்ந்தபோது, மூன்று ஆண்டுகளுக்கு முன் நான் வாசித்த ஒரு சில தலைப்புச் செய்திகள் மனதில் முள்ளென கீறின. இதோ, அச்செய்திகள்...
ஜூலை 21, 2010 - உத்திரப் பிரதேசத்தில் குழந்தைகளுக்குச் சேர வேண்டிய உணவை நாய்கள் சாப்பிடுகின்றன.
ஜூலை 23, 2010 - உத்திரப்பிரதேசத்தைப் போல, மஹாராஷ்ட்ராவிலும் உணவுத் தானியங்கள் அழுகிக் கிடக்கின்றன.
ஜூலை 27, 2010 - உச்ச நீதி மன்ற உத்தரவு: உணவு தானியங்களில் ஒன்று கூட இனி வீணாகக்கூடாது.
இச்செய்திகளை வாசித்தபோது, இன்றைய நமது நற்செய்தியில் கூறப்பட்டுள்ள அறிவற்ற செல்வன் செய்த அதே தவற்றை இந்திய நாடும், நாம் அனைவரும் செய்கிறோமோ என்ற கேள்வி எழுந்தது. "உங்களால் இந்தத் தானியங்களைச் சேமித்து வைக்க முடியவில்லை என்றால், ஏழைகளுக்காவது அவற்றைக் கொடுங்கள். உணவு தானியங்களில் ஒன்று கூட இனி வீணாகக்கூடாது" என்று 2010ம் ஆண்டு, ஜூலை 27 அன்று உச்ச நீதிமன்றம் ஓர் ஆணையைப் பிறப்பித்தது.
யாருக்கு இந்த ஆணை? Food Corporation of India என்றழைக்கப்படும் இந்திய அரசின் உணவு நிறுவனத்திற்கு இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஏன் இந்த ஆணை? FCIக்குச் சொந்தமான தானியக் கிடங்குகளில் 30 இலட்சம் டன் தானியங்கள் அழுகிக் கொண்டிருந்தன. சேமிக்கும் வசதிகள் இல்லை என்று கூறி, இந்திய உணவு நிறுவனம், தானிய மூட்டைகளை மண் தரைகளில், மழையில் அடுக்கி வைத்ததால், அவை அழுகிக் கொண்டிருந்தன.

இச்செய்திகளைத் தனித்துப் பார்க்கும்போது, இவற்றின் விபரீதம் நமக்குச் சரியாகப் புரியாது. இவற்றை இந்தியாவில் நிலவும் இன்னும் சில உண்மைகளோடு சேர்த்துப் பார்க்கும்போது, விபரீதம் புலப்படும். 2009ம் ஆண்டு கணக்குப்படி, இந்தியாவில் ஒவ்வொரு நாளும்... மீண்டும் சொல்கிறேன்... ஒவ்வொரு நாளும் 6,000 குழந்தைகள் உணவின்றி, பட்டினியால் இறந்தனர் என்று ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு காரணங்களால் தினமும் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் பல ஆயிரமாய் இருக்கும். ஆனால், உணவு இல்லை என்ற ஒரு காரணத்திற்காக இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 6,000. சேர்த்துவைக்க இடமில்லாமல் மழையில் குவிக்கப்பட்டு, அழுகிகொண்டிருக்கும் 30 லட்சம் டன் தானியங்கள் ஒரு புறம். பசியால், உணவில்லாமல் ஒவ்வொரு நாளும் இறக்கும் குழந்தைகள் மட்டும் 6,000 என்ற அதிர்ச்சித் தகவல் மறுபுறம்.

2001ம் ஆண்டு, இந்தியாவின் உணவுக் கிடங்குகளில் 9 கோடி டன் தானியம் முடங்கிக் கிடந்தது. 9 கோடி டன் என்பது எவ்வளவு தானியம்? இதை இப்படி புரிந்து கொள்ள முயல்வோம். இந்த உணவைக் கொண்டு, 20 இலட்சம் பேருக்கு இரண்டு ஆண்டுகள் உணவு கொடுக்கலாம். அவ்வளவு உணவு அது. இந்த அளவுக்கு அரிசியும், கோதுமையும் நமது கிடங்குகளில் குவிந்திருந்த அதே 2001ம் ஆண்டில், ஒரிஸ்ஸாவின் காசிப்பூர் பகுதியில் பல ஆயிரம் பேர் பட்டினியால் இறந்தனர். இந்தக் கொடூரத்தைப் பற்றி அப்போதையப் பிரதமர் வாஜ்பாயி அவர்கள், பாராளுமன்றத்தில் பேசியபோது, "நம் நாட்டில் தேவைக்கு அதிகமாக உணவை உற்பத்தி செய்கிறோம். ஆனால், உற்பத்தி செய்யப்படும் உணவு மக்களைச் சென்று சேர்வதில்லை. இதற்குக் காரணம், நம்மிடம் உள்ள தவறானப் பகிர்வு முறையே! (a faulty PDS - Public Distribution System)!" என்று கூறினார். உற்பத்தியில் குறைவில்லை ஆனால், பகிர்வதில்தான் பல குறைகள் என்று நாட்டின் பிரதமரே சொன்னார்.

2001ம் ஆண்டு, நாட்டின் பிரதமர் நம்மிடம் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டியபின், நாம் ஏதும் கற்றுக்கொண்டோமா? "உணவு தானியங்களில் ஒன்று கூட இனி வீணாகக்கூடாது. ஏழைகளுக்காவது அவற்றைக் கொடுங்கள்" என்று 2010ம் ஆண்டு உச்சநீதி மன்றம் அளித்த ஆணைக்குப் பின்னராகிலும் நாம் விழிப்படைந்துள்ளோமா என்று கேட்டால், இன்னும் இல்லை என்றுதான் வேதனையுடன் சொல்லவேண்டும். இவ்வாண்டு (2013) வெளிவந்த ஒரு செய்தியில், Food worth Rs 50 thousand crore goes waste in India every year (http://articles.timesofindia.indiatimes.com/2013-01-11) அதாவது, ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் 50,000 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு வீணாக்கப்படுகிறது என்று வாசித்தோம். இச்செய்தி நமது அறுவடைத் திருநாளான பொங்கலுக்கு முன்னர், சனவரி 11ம் தேதி வந்தது என்பது நமது வேதனையைக் கூட்டுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அறுவடைத் திருநாளன்று தேவையான அளவு தானியங்கள் அறுவடை செய்யப்படுவது நிச்சயம். ஆனால், அவை தேவையானவர்கள் வயிற்றுப் பசியைத் தீர்க்கிறதா என்று கேட்டால், நிச்சயம் இல்லை என்று சொல்லலாம்.

மூன்றாண்டுகளுக்கு முன் உச்ச நீதி மன்றம் உணவு நிறுவனத்திற்கு அளித்த அந்த ஆணையை மீண்டும் ஒருமுறை ஆழமாகச் சிந்திப்போம். "உணவு தானியங்களில் ஒன்று கூட வீணாகக் கூடாது. உங்களால் இந்தத் தானியங்களைச் சேமித்து வைக்க முடியவில்லை என்றால், ஏழைகளுக்காவது அவற்றைக் கொடுங்கள்" என்று உச்ச நீதி மன்றம் கொடுத்த அந்தத் தீர்ப்பை, உத்தரவைக் கேட்டு மனதில் ஆத்திரமும், வேதனையும் அதிகமானது. ஒரு நாட்டின் உச்சநீதி மன்றமே நீதியைத் தலைகீழாகப் புரட்டிப்போடும் ஒரு முயற்சி இது. வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சும் வார்த்தைகள் இவை.
சேமித்துவைக்க முடியவில்லை எனில், ஏழைகளுக்காவது கொடுங்கள் என்று ஒரு நாட்டின் நீதிமன்றம் கூறும்போது, அது 'சேமிப்புக்கு' முதலிடம் தருவதைக் காண முடிகிறது. சேர்த்துவைக்க, குவித்துவைக்க, பதுக்கிவைக்க உங்களுக்குத் திறன் இல்லையெனில், இருக்கவே இருக்கிறார்கள் ஏழைகள். அவர்களுக்காவது அதைத் தூக்கிப் போடுங்கள் என்ற பாணியில் ஒரு நாட்டின் உச்ச நீதிமன்றம் பேசுவதை எவ்விதம் நீதி என்று அழைப்பது? இந்தப் பாணியில்தானே அறிவற்ற செல்வனும் குவித்துவைப்பதற்கு முதலிடம் தந்தார்?
இதற்கு மாறாக, உச்சநீதி மன்றம் பின்வருமாறு கூறியிருந்தால், அதை நாம் ஒரு நீதிமன்றம் என்று அழைக்க முடியும். "நாட்டில் இத்தனை கோடி மக்கள் உணவின்றி வாடும்போது, உங்கள் தானியக் கிடங்குகளில் அளவுக்கு அதிகமாக நீங்கள் தானியங்களைக் குவித்துவைப்பது தவறு. அதை முதலில் ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுங்கள்" என்று நமது நீதி மன்றங்கள் எப்போது சொல்லப் போகின்றன?

உச்சநீதி மன்றங்களை, உணவு நிறுவனங்களை, குற்றம் கூற நீண்டிருக்கும் நமது சுட்டுவிரல்களை நம் பக்கம் திருப்புவோம். நம் ஒவ்வொருவரிடமும் ஆழமாக வேரூன்றி, புரையோடிப் போயிருக்கும் பேராசைகளை, தேவைக்கும் அதிகமாகச் சேர்த்துவைக்கும் போக்கைப் பற்றி சிந்திக்க இன்று நமக்கு நல்லதொரு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் அந்த செல்வன் நமக்கு இந்த வாய்ப்பைத் தந்திருக்கிறார். அச்செல்வனை ஒரு முட்டாள் என்று நாம் தீர்மானம் செய்வதற்கு முன், நம்மைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்பது நல்லது.

Ernest Hemingway என்பவர் நொபெல் பரிசு பெற்ற ஒரு பெரும் எழுத்தாளர். அவரிடம் தனித்துவமிக்கதொரு பழக்கம் இருந்தது. ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு நாளன்று, அவரிடம் உள்ள மிக விலையுயர்ந்த, அரிய பொருட்களை அவர் பிறருக்குப் பரிசாகத் தருவாராம். இதைப்பற்றி அவரிடம் நண்பர்கள் கேட்டபோது அவர், "இவற்றை என்னால் பிறருக்குக் கொடுக்கமுடியும் என்றால், இவற்றுக்கு நான் சொந்தக்காரன். இவற்றை என்னால் கொடுக்கமுடியாமல் சேர்த்துவைத்தால், இவற்றுக்கு நான் அடிமை." என்று பதில் சொன்னாராம்.

தன் சொத்துக்கு அடிமையாகி, அறிவற்றுப் போன செல்வன் உவமையைச் சொன்ன இயேசு தரும் எச்சரிக்கை இதுதான்: பின்பு இயேசு அவர்களை நோக்கிச் சொன்னார்: அவர்களை நோக்கி மட்டுமல்ல, அன்பர்களே, நம்மையும் நோக்கி இயேசு தரும் எச்சரிக்கை இது. கவனமாகக் கேட்போம்.
எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது.








All the contents on this site are copyrighted ©.