2013-08-03 16:15:41

புனித பூமியில் அன்னைமரியாவின் பிறப்பு விழாவைக் கொண்டாடுவதற்கு இந்தியக் குடியேற்றதாரர்கள் தயாரிப்பு


ஆக.,03,2013. புனித பூமியில் வாழும் மூவாயிரத்து மேற்பட்ட இந்தியக் குடியேற்றதாரர்கள் அன்னைமரியாவின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதற்குத் தயாரித்து வருகின்றனர்.
இஸ்ரேலின் ஜாப்பாவில் வருகிற செப்டம்பர் 8ம் தேதி சிறப்பிக்கப்படவிருக்கும் இவ்விழாவுக்கானத் தயாரிப்புக்களை இப்பொழுதே அக்குடியேற்றதாரர் தொடங்கிவிட்டனர் என்று, புனித பூமியில் இந்தியர்களின் ஆன்மீகப்பணிப் பொறுப்பாளர் அருள்பணி ஜெயசீலன் பிச்சைமுத்து கூறினார்.
இந்தியச் சமூகம், அன்னைமரியாவைத் தங்களின் தாயாகப் போற்றுகின்றது என ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள அருள்பணியாளர் பிச்சைமுத்து, அன்னைமரியா, குடியேற்றதாரர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் இருக்கின்றார் என்றும் கூறினார்.
இயேசுவின் பாதுகாப்புக்காக எகிப்தில் புகலிடம் தேடிய திருக்குடும்பம் பின்னர் நாசரேத்தில் வாழ்ந்தது என்றும், இயேசு தமது இறையாட்சிப் பணியை யூதேயா, கலிலேயா மற்றும் எருசலேமில் செய்தார் என்றும் அருள்பணியாளர் பிச்சைமுத்து கூறினார்.
ஜாப்பாவில் வருகிற ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்கும் திருவிழா நவநாள் செபங்கள் செப்டம்பர் 8ம் தேதியன்று விழாத் திருப்பலியோடு நிறைவடையும்.

ஆதாரம் : UCAN







All the contents on this site are copyrighted ©.