2013-08-02 16:16:46

திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கல்வி வழியாக ஒருவர் ஒருவருடன் நன்மதிப்பை வளர்க்க அழைப்பு


ஆக.,02,2013. கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் ஒருவர் ஒருவருடன் நன்மதிப்பையும், நட்பையும் வளர்க்க வேண்டும், குறிப்பாக, இவற்றை கல்வி வழியாக வளர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
'இத் ஆல்-ஃபித்ரு'(Id al-Fitr) பண்டிகையை முன்னிட்டு உலகின் அனைத்து முஸ்லீம்களுக்கும் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், ஒவ்வோர் ஆண்டும் திருப்பீட பல்சமய உரையாடல் அவை இப்பண்டிகையை முன்னிட்டு செய்தியை அனுப்புவது வழக்கமாக இருந்து வருகிறது, ஆயினும், இவ்வாண்டு, தனது தலைமைப்பணியின் முதல் ஆண்டு என்பதால், இச்செய்தியினை தான் கையொப்பமிட்டு அனுப்ப முடிவு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
அனைத்து முஸ்லிம் மக்கள் மீதும், சிறப்பாக, இஸ்லாமிய மதத்தலைவர்கள் மீதும் தான் கொண்டுள்ள மதிப்பை உணர்த்தவே இவ்வாறு செய்துள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கல்வி வழியாக, ஒருவர் ஒருவர் மீது மதிப்பை வளர்ப்பது குறித்து இணைந்து சிந்திப்பதற்கு இவ்வாண்டில் தான் சிறப்பாக அழைப்பதாகக் கூறியுள்ளார்.
நாம் ஒருவர் ஒருவரைப் புரிந்துகொள்ளவும், மதிக்கவும் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தவே இதனை நமது இணைந்த சிந்தனையின் கருவாகத் தேர்ந்தேன் என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், ஒவ்வொருவரையும் மதிப்பது என்பது, ஒருவரது வாழ்வை மதிப்பதில், அவரது உடலுக்கு ஆபத்து விளைவிக்காமல் காப்பதில், அவருக்குரிய மரியாதையை வழங்குவதில் ஆரம்பமாகிறது என்றும் கூறியுள்ளார்.
இரமதான் நோன்பு மாதம், இம்மாதம் 8ம் தேதிக்கும் 9ம் தேதிக்கும் இடைப்பட்ட இரவில் முடிக்கப்படுகின்றது.
'இத் ஆல்-ஃபித்ரு'(Id al-Fitr) பண்டிகை இம்மாதம் 9ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.