2013-08-01 16:20:21

கத்தோலிக்க நாடென்று அழைக்கப்படும் பிரேசிலுக்கு சிறந்ததொரு சாட்சியமாக உலக இளையோர் நாள் அமைந்தது - ரியோ பேராயர் Orani Tempesta


ஆக.01,2013. பிரேசில் நாட்டில் நிகழ்ந்த 28வது உலக இளையோர் நாள் நிகழ்வுகள், நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லதொரு மாற்றாக அமைந்ததைக் காட்டிலும், கத்தோலிக்க நாடென்று அழைக்கப்படும் பிரேசிலுக்கு சிறந்ததொரு கத்தோலிக்க சாட்சியமாக அமைந்தது என்று ரியோ தெ ஜனய்ரோ பேராயர் Orani Tempesta அவர்கள் கூறினார்.
இந்த உலக நிகழ்வுக்கென உழைத்த தன்னார்வத் தொண்டர்கள், அயல்நாட்டிலிருந்து வந்திருந்த இளையோருக்கு வரவேற்பளித்த குடும்பங்கள், நிகழ்ச்சியை முன்னின்று நடத்தியவர்கள் அனைவருக்கும் நன்றி கூறும் வகையில் பேராயர் Tempesta அவர்கள், இச்செவ்வாயன்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
இளையோர் நாள் நிகழ்வுகளை அறிவித்தது ஒரு திருத்தந்தையாகவும், இதனை முன்னின்று நடத்தியது மற்றொரு திருத்தந்தையாகவும் இருப்பினும், எவ்வித தடங்கலுமின்றி இந்த உலக நாள் நிகழ்வுகள் நடைபெற்றதை பேராயர் சிறப்பாக எடுத்துரைத்தார்.
மேலும், இளையோர் இலட்சக்கணக்கில் கூடும் நேரங்களில் வழக்கமாக எதிர்பார்க்கப்படும் வரம்புமீறல்கள், வன்முறைகள் என்று எதுவும் நிகழாமல், இந்த இளையோர் நாட்களை கண்ணியமான வகையில் நடத்தித் தந்ததற்காக, பேராயர் Tempesta அவர்கள், இளையோர் அனைவரையும் பாராட்டினார்.
இத்தகைய இளையோரிடம் வருங்காலத்தை ஒப்படைப்பதற்கு எவ்விதத் தயக்கமும் தேவையில்லை என்றும் இவ்வுலக நாள் நிகவுகளின் தலைமை அமைப்பாளர் பேராயர் Tempesta இக்கூட்டத்தில் அறிவித்தார்.
175 நாடுகளிலிருந்து வந்திருந்த இளையோர், பெரும்பாலும் 19 வயதுக்கும், 34 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்றும், உலக நாள் நிகழ்வுகளுக்கு 55 விழுக்காட்டு பெண்களும், 45 விழுக்காட்டு ஆண்களும் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர் என்ற விவரத்தையும் பேராயர் தெரிவித்தார்.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.