2013-07-31 16:54:16

பேராயர் Lahham : புலம்பெயர்ந்தோர் முகாமில் கிறிஸ்துவத்தைப் பரப்ப முயல்வது சரியான வழிமுறை அல்ல


ஜூலை,31,2013. புலம் பெயர்ந்த மக்களின் அடிப்படை தேவைகளுக்கான பொருட்களை அளிக்கும் தருணத்தில், அவர்களுக்கு விவிலியத்தையும் கொடுத்து, கிறிஸ்துவ மறையை பரப்ப முயல்வது சரியான வழிமுறை அல்ல என்று எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை பேராயர் Maroun Lahham கூறினார்.
Jordan நாட்டின் Zaatari எனுமிடத்தில் அமைந்துள்ள புலம்பெயர்ந்தோர் முகாம் ஒன்றில், ஒரு சில கிறிஸ்தவக் குழுக்கள், விவிலியத்தையும், வேறு சில துண்டு பிரசுரங்களையும் மக்களிடம் அளித்தது ஓலி-ஒளி காட்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகளைக் குறித்து, Jordan நாட்டு அப்போஸ்தலிக்க நிர்வாகியான பேராயர் Lahham அவர்கள், Fides செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கிறிஸ்துவை இவ்வழியில் மக்களுக்கு அறிமுகப்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்று கூறினார்.
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் தருணத்தில், அதுவே கிறிஸ்துவ அன்புக்கு சாட்சியாக விளங்கும் வலிமை பெற்றது என்றும், அத்தருணத்தை மறைபரப்பு வாய்ப்பாக பயன்படுத்துவது சரியான சாட்சியமாக இருக்காது என்றும் பேராயர் Lahham எடுத்துரைத்தார்.
சரியாக ஓராண்டுக்கு முன்னர், அதாவது, 2012ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி, 2,000 கூடாரங்களில் 10,000க்கும் அதிகமான மக்களுடன் துவங்கிய Zaatari முகாமில், தற்போது, 1,20,000 புலம்பெயர்ந்தோர் தங்கியுள்ளனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.