2013-07-31 16:16:39

கற்றனைத்தூறும்...... உடல் உறுப்பு தானம்


பொதுவாக நமக்குத் தெரிந்தது இரத்ததானம் மற்றும் கண்தானம். இந்த இரண்டு வித தானங்கள்தான் அதிக அளவில் இருந்து வருகின்றன.
உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும்போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.
உயிருடன் இருக்கும் போது தானமாகத் தரக்கூடிய உடல் உறுப்புக்கள்: ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, இரத்தம் ஆகியவை.
இறந்த பின்னர் தானமாகத் தரக்கூடிய உறுப்புக்கள் :இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).
உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு எவ்விதப்
பாதிப்பும் வருவதில்லை. கல்லீரலின் ஒரு பகுதியைத் தானம் செய்தபின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள பகுதிகள் சீராக வேலை செய்யத் தடை இல்லை. இரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாள்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும்.
கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), இரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் என, ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், தானமாகப் பெற முடியும். ஒரு மனிதர், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களைத் தானமாகத் தர முடியும்.
சிறுநீரகத்தை 72 மணி நேரம் வரையும், கல்லீரலை 18 மணி நேரம் வரையும், இதயம் மற்றும் நுரையீரலை 5 மணி நேரம் வரையும், கணையத்தை 20 மணி நேரம் வரையும், கண் விழித்திரையை (கார்னியா) 10 நாட்கள் வரையும், தோல், எலும்பு மற்றும் இதயத்தின் வால்வுகளை 5 வருடமும், அதற்கு மேலும் பாதுகாத்து வைத்து உபயோகப்படுத்தலாம் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.
பிறந்து, வாழ்ந்து, இறந்த பின்னரும் நாம் தொடர்ந்து இந்த உலகத்தில் பலரின் உடம்பின் மூலம் இந்த உலகத்தில் வாழ்வதற்கு இதுவே சிறந்த வழி.

ஆதாரம் : சித்தார்கோட்டை








All the contents on this site are copyrighted ©.