2013-07-31 16:06:24

அன்னைமரியா திருத்தலங்கள் – அற்புத அன்னைமரியா,உரோம்


ஜூலை,31,2013. Marie Alphonse Ratisbonne என்பவர் 1814ம் ஆண்டு மே முதல் தேதியன்று பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பூர்க்கில் யூத வங்கிகளை நடத்திய பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவர். அக்காலத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் பெரும்பாலும் அவர்கள் வாழ்ந்த நகரத்தின் பெயரையே குடும்பப் பெயராக வைத்திருந்திருந்தனர். இவர் குழந்தையாக இருந்தபோதே இவருடைய மூத்த சகோதரர் தியோடர் கத்தோலிக்கத்துக்கு மாறி அருள்பணியாளராக ஆகிவிட்டார். அதனால் இவரது குடும்பம் கடும் கோபத்திலும், வெறுப்பிலும் இருந்தது. அல்போன்சும் இவரது மூத்த சகோதரரோடு ஒருநாளும் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என உறுதி எடுத்தார். அதோடு, கத்தோலிக்க விசுவாசத்தோடும், கத்தோலிக்கத்தைச் சார்ந்த அனைத்துப் பொருள்களோடும் கடும் வெறுப்பு கொண்டிருந்தார். 1842ம் ஆண்டில் இவரது 28வது வயதில் இவரது உறவினர் Flore Ratisbonne எனும் பெண்ணுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்தார். அவ்வாண்டு ஆகஸ்டில் இப்பெண்ணைத் திருமணம் செய்து, அவரது மாமாவின் வங்கியில் பங்குதாரராக ஆகவும் திட்டமிட்டிருந்தார். இதற்கிடையே, வீட்டுக்குக் கடைசி மகனாகிய அல்போன்சு ஐரோப்பாவுக்கும் கீழை நாடுகளுக்கும் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டார். இவர் தன்னிலே அறநெறி வாழ்வில் கட்டுப்பாட்டுடன் இருந்தவர். அச்சுற்றுலாவில் இத்தாலியின் நேப்பிள்ல்ஸ் நகரத்துக்குச் செல்லத் தீர்மானித்தார். பின்னர் குளிர் காலத்தில் மால்ட்டா சென்று தனது உடல் சுகத்தை மேம்படுத்த விரும்பினார்.
ஒருநாள் அல்போன்ஸ், இத்தாலியின் பலேர்மோ செல்வதற்காகப் பயணச்சீட்டைப் பதிவு செய்யும் இடத்துக்குப் போகச் சென்றார். ஆனால் அவர் செல்ல வேண்டிய பாதையை விட்டு வேறு பாதையை தவறுதலாக எடுத்து உரோமைக்குச் செல்லும் வாகனம் நிற்குமிடத்தை அடைந்தார். என்ன நடக்கிறது என்பதை உணராமலே உரோமைக்குச் செல்லும் நீராவிக் கப்பலில் பயணச்சீட்டைப் பதிவு செய்தார். 1842ம் ஆண்டு சனவரி 5ம் தேதி நேப்பிள்ல்சைவிட்டுப் புறப்பட்டார். அடுத்த நாள் 6ம் தேதி மூன்று கீழ்த்திசை ஞானிகள் விழாவன்று உரோம் வந்து சேர்ந்தார். ஒரு வழிகாட்டியின் உதவியுடன் உரோமையிலுள்ள பழங்கால உடைந்துபோன அரண்மனைக் கோட்டைகள், அருங்காட்சியகங்கள் என எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்தார். சனவரி 8ம் தேதி உரோமின் சாலை ஒன்றில் நடந்து கொண்டிருந்தபோது யாரோ ஒருவர் அவரது பெயரைச் சொல்லிக் கூப்பிட்டது போல உணர்ந்தார். திரும்பிப் பார்த்தபோது அவரைக் கூப்பிட்டவர் ஸ்ட்ராஸ்பூர்க்கில் அவரோடு படித்த Gustavo de Bussieres என்பவர்தான் அவர் எனக் கண்டுகொண்டார். குஸ்தாவோ பிரிந்த கிறிஸ்தவ சபையைச் சேர்ந்தவர். அவர்கள் இருவரும் அவர்களது பழைய நட்பைப் புதுப்பித்துக் கொண்டனர். அல்போன்சின் மூத்த சகோதரர் போலவே, குஸ்தாவோவின் மூத்த சகோதரர் Baron Theodore de Bussieresம் கத்தோலிக்கத்துக்கு மதம் மாறிவிட்டார் என்பதை அறிந்து கொண்டார் அல்போன்ஸ். இவ்விருவரின் இந்த மூத்த சகோதரர்கள் நண்பர்கள். கத்தோலிக்கத்துக்கு மதம் மாறிய Baron மீது அல்போன்சுக்கு வெறுப்பு இருந்தாலும், Baron கான்ஸ்ட்டாண்டிநோபிள் பற்றிய அறிவில் வல்லுனராக இருந்ததால் கான்ஸ்ட்டாண்டிநோபிள் பற்றி அறிவதற்கு அவரது உதவியை நாடினார். ஏனெனில் அல்போன்ஸ் கான்ஸ்ட்டாண்டிநோபிள் செல்லத் திட்டமிட்டிருந்தார். Baron பலரைக் கத்தோலிக்கத்துக்கு மதம் மாற்றுவதில் தீவிரமாய் இருந்தார். எனவே அல்போன்சுடன் நட்புடன் பழகினார். இருவரும் நண்பரானார்கள். ஆயினும் அல்போன்ஸ் கத்தோலிக்கத்தை அவமதித்துப் பேசியது, அதற்கு எதிராகப் பேசியது Baron Theodoreஐ எரிச்சலடையச் செய்தது.
இறுதியில் ஒருநாள் Baron அல்போன்சிடம் ஓர் அசாதரண வேண்டுகோளை முன்வைத்தார். Baron அல்போன்சிடம், நீ, ஒருமாதிரியான வெறுக்கத்தக்க கண்ணோட்டங்களைக் கொண்டிருக்கிறாய், அதனால் ஒரு சிறிய தேர்வுக்கு உடன்படுவாயா என்று கேட்டார். அதற்கு அல்போன்ஸ், அது என்ன தேர்வு என்று கேட்க, Baron அல்போன்சிடம், நான் கொடுக்கும் ஒரு சிறிய பதக்கத்தை அணிந்துகொள். அது புனித கன்னிமரியா பதக்கமாகும். இது உனக்கு முட்டாள்தனமாகத் தெரியும். பரவாயில்லை. ஆனால் நான் அந்தப் பதக்கத்தோடு நெருங்கிய பற்று கொண்டிருக்கிறேன். அந்தப் பற்று எனக்கு மிகவும் முக்கியமானது என்று சொல்லி ஒரு சிறு நூலில் தொங்கவிடப்பட்ட அப்பதக்கத்தைக் காட்டினார். அல்போன்ஸ் வாயடைத்துப் போனார். ஆனாலும் அதைப் பெரிதுபடுத்தி பெரிய பிரச்சனையாக்க விரும்பவில்லை. இந்தப் பதக்கம் எனக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாது என்று சொன்னார். Baronனின் இளைய மகள் அந்தப் புதுமை மாதா பதக்கத்தை அல்போன்சின் கழுத்தில் போட்டார். அதை அணிந்து கொண்டவுடன் சப்தமாக ஏளனச் சிரிப்பு சிரித்து, இதோ நான் உரோமன் கத்தோலிக்கர் என்றார். Baron அதோடு நிற்கவில்லை. அல்போன்சிடம், நீ இதனைக் கழுத்தில் போட்டிருந்தால் மட்டும் போதாது, புனித பெர்னார்துக்கு அன்னைமரி சொல்லிக் கொடுத்த சிறிய செபத்தை நீ தினமும் சொல்ல வேண்டும் என்றார். இப்போதும் அல்போன்ஸ், இது எனக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாது என்று சொன்னார்.
உண்மையில் Baronனின் தளராத செயல் அல்போன்சின் நரம்புகளில் வேலை செய்யத் தொடங்கியது. அல்போன்ஸ் கத்தோலிக்கத்தை நோக்கி வராமல் இன்னும் விலகிச் சென்று கொண்டிருந்தார். Baron மனம் தளரவில்லை. அல்போன்சை விடாமல் வலியுறுத்திக்கொண்டே இருந்தார். அவரோடு வாதாடிக் கொண்டே இருந்தார். அதேசமயம் அல்போன்ஸ்க்காக உருக்கமாகச் செபித்துக்கொண்டும் இருந்தார். Baron மட்டுமல்ல, அவரது நண்பர்களும், உரோமையிலுள்ள ப்ரெஞ்ச் பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் செபித்துக்கொண்டிருந்தனர். இப்படிச் செபித்தவர்களில் பிரபு Laferronaysம் ஒருவர். இவர் ஒரு காலத்தில் ரவுடியாக இருந்து பின்னர் மனம் மாறியவர். அல்போன்ஸ் என்ற இந்த இளவயது யூதரின் மனமாற்றத்துக்காக ஆலயத்திலும் செபம் நடந்தது. அப்படிச் செபித்துக் கொண்டிருந்த நாள்களில் ஒரு நாள் இரவு Laferronaysக்கு கடும் மாரடைப்பு வந்தது. இறுதி திருவருள்சாதனங்களைப் பெற்று அவரது அன்புக் குடும்பத்தினர் சூழ்ந்திருக்க அவரின் உயிர் பிரிந்தது.
1842ம் ஆண்டு சனவரி 20ம் தேதி நண்பகலில் தனது நண்பர் Laferronaysன் அடக்கச் சடங்குக்காக உரோம் புனித அந்திரேயா தெல்லே ஃபிராத்தே ஆலயத்தில் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார் Baron. இவர் தனது மற்றொரு நண்பர் அல்போன்சை அந்த ஆலயத்தில் தனக்காகக் காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார். Baron ஆலயத்துக்கு வந்தபோது அல்போன்ஸ் முழந்தால்படியிட்டு செபித்துக்கொண்டிருந்ததைக் கண்டார். இந்தக் காட்சியைப் பார்த்து Baron கண்ணீர் சொரிந்தார். அல்போன்ஸ் அவரிடம், நான் முழுவதும் குழப்பமான மனநிலையுடன் இந்த ஆலயத்துக்கு வந்தேன். நான் மேல்நோக்கிப் பார்த்தபோது இந்த ஆலயத்திலுள்ள ஒரு பீடம் தவிர மற்ற அனைத்தும் இல்லாததுபோல் உணர்ந்தேன். அனைத்து விளக்குகளும் அந்த ஒரே இடத்தில் குவிந்தன. அந்த ஒளிமிகுந்த இடத்தை நோக்கினேன். அந்தப் பீடத்தின்மேல் அழகான, உயரமான, கம்பீரமான, கருணையே வடிவான ஓர் உருவத்தைப் பார்த்தேன். எனது கழுத்தில் அணிந்திருந்த அந்தப் புதுமை மாதா பதக்கத்தில் இருப்பது போன்ற அன்னைமரியா உருவத்தைப் பார்த்தேன். அதைப் பார்த்தவுடன் நான் முழங்கால்படியிட்டேன். என் கண்கள் பார்வையின்றி இருந்ததுபோல உணர்ந்தேன். அவ்வன்னையின் கரங்களைப் பார்த்தேன். அவை இரக்கத்தையும் மன்னிப்பையும் கொண்டிருந்தன. அந்தத் தேவ அன்னை என்னிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அந்தநேரத்தில் எனது பாவங்கள் பற்றியும, கத்தோலிக்க விசுவாசத்தின் அழகு பற்றியும் புரிந்துகொண்டேன் என்று கூறினார்.
Baron, அல்போன்சைக் கைத்தாங்கலாகத் தூக்கிப் பிடித்து வாகனத்தில் அமரவைத்து அவர் தங்கியிருந்த Serny பயணியர் விடுதிக்கு அழைத்துச் சென்றார். அவரது கழுத்து டையைத் தளர்த்திவிட்டார். ஆனால் அல்போன்ஸ் தொடர்ந்து அந்தப் புதுமை மாதா பதக்கத்தை முத்தி செய்துகொண்டே, நன்றி இறைவா என முணுமுணுத்துக்கொண்டே இருந்தார். பின்னர் Baron பக்கம் திரும்பி அவரைக் கட்டித்தழுவினார் அல்போன்ஸ். ஒப்புரவு அருள்சாதனம் பெறுவதற்காகத் தன்னை ஒரு குருவிடம் அழைத்துச் செல்லுமாறு கேட்டார் அவர். நான் எப்பொழுது திருமுழுக்குப் பெறுவேன், அது இன்றி என்னால் வாழ முடியாது என்றும் சொன்னார் அல்போன்ஸ். ஏன், நீ என்ன பார்த்தாய் எனக் கேட்டதற்கு, முழந்தால்படியிட்ட நிலையில் மட்டுமே அதைச் சொல்ல முடியும், அதை ஒரு குருவிடம் சொல்ல முடியும் என்றார் அல்போன்ஸ். எனவே Baron, அல்போன்சை, உரோம் இயேசு சபையினரின் தலைமை ஆலயமான ஜேசு ஆலயத்தில் இயேசு சபை அருள்பணி Villefort என்பவரைப் பார்பதற்காக அழைத்துச் சென்றார். அங்கும் அவரால் விளக்க முடியவில்லை. வாய் தடுமாறியது. கடைசியாக தான் கழுத்தில் போட்டிருந்த புதுமை மாதா பதக்கத்தைக் காட்டி நான் இப்பெண்ணைப் பார்த்தேன், நான் அவரைப் பார்த்தேன் என அழுதார் அல்போன்ஸ்.
Alphonse Ratisbonne ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெற்றார். தான் திரும்பி தனது பெற்றோரிடம் சென்றால் தனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என நினைப்பார்கள் என்று சொல்லி, உலகின் பேச்சுக்களிலிருந்தும், தீர்ப்புக்களிலிருந்தும் ஒதுங்கி வாழ விரும்பினார். இயேசு சபை இல்லத்தில் அருள்பணி Villefortயிடம் தியானம் செய்தார். 1842ம் ஆண்டு சனவரி 31ம் தேதி திருத்தந்தையின் பிரதிநிதியாக இருந்த கர்தினால் பத்ரிசியிடமிருந்து திருமுழுக்கும் உறுதிபூசுதலும், புதுநன்மையும் பெற்றார் அல்போன்ஸ். அதைத் தொடர்ந்த மாதத்தில் அல்போன்சின் மனமாற்றம் பற்றிய சூழலை ஆராய ஒரு குழு உருவாக்கப்பட்டது. நீண்ட நாள்கள் பரிசோதனைக்குப் பின்னர் இது முற்றிலும் புதுமையாக நடந்திருக்கின்றது என்று கண்டறிந்தனர். 1842ம் ஆண்டு மே மாதத்தில் இந்தப் புதுமை மாதா படம் பொதுமக்களின் வணக்கத்துக்கு வைக்கப்பட்டது. 1842ம் ஆண்டு ஜூன் 3ம் தேதியன்று இது புதுமை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1847ம் ஆண்டில் இயேசு சபையில் குருவான அல்போன்ஸ், தனது அண்ணன் தியோடருக்கு உதவினார். தனது வாழ்வு முழுவதையும் யூதர்களின் மனமாற்றத்துக்காக அர்ப்பணித்தார். திருத்தந்தை 9ம் பத்திநாதரின் அனுமதியுடன் இயேசு சபையைவிட்டு விலகி 1855ம் ஆண்டில் சீயோன் சகோதரிகள் சபையை எருசலேமுக்கு மாற்றினார். இச்சபையை இவரும் இவரது அண்ணனும் 1843ம் ஆண்டில் தொடங்கினர். 1860ம் ஆண்டில் அயின் கரிம் என்ற ஊரில் ஒரு புதிய இல்லத்தை நிறுவினார். அங்கேயே அவர் இறந்தார். உரோம் புனித அந்திரேயா தெல்லே ஃபிராத்தே ஆலயத்தில் தொடர்ந்து புதுமைகள் நடந்தன. 1942ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி திருத்தந்தை 12ம் பத்திநாதர், இவ்வாலயத்தை பசிலிக்காவாக அறிவித்தார். 1960ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி திருத்தந்தை 23ம் ஜான், இப்பசிலிக்காவை கர்தினாலின் ஆலயமாக அறிவித்தார். 1982ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் இப்பசிலிக்கா சென்றார். உரோமையில் Alphonse Ratisbonneக்கு நடந்த அன்னைமரியா காட்சி, புதுமை என்று திருப்பீடத்தால் 1842ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி அங்கீகரிக்கப்பட்டது.
அன்னைமரியை நம்பிக்கையோடு நாடியவர்கள் வெறுங்கையோடு திரும்பியதில்லை. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரேசில் நாட்டின் அபரிசிதா அன்னைமரியா பசிலிக்காவில் கடந்த புதனன்று சொன்னது போல ஒரு தாய் தனது பிள்ளையை மறப்பாரோ?







All the contents on this site are copyrighted ©.