2013-07-31 16:55:32

Los Angeles பேராயர் : நாம் கத்தோலிக்கத் திருஅவையாக இருப்பதால், குடியேற்றதாரர் குறித்த விவாதத்தில் ஆர்வமாய் இருக்கிறோம்


ஜூலை,31,2013. அமெரிக்க ஐக்கிய நாட்டில் இடம்பெற்றுவரும் குடியேற்றதாரர் குறித்த விவாதம் தலத்திருஅவையின் எதிர்காலம் மற்றும் கத்தோலிக்கர் குறித்ததாய் உள்ளது என, அந்நாட்டின் Los Angeles பேராயர் Jose H. Gómez கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடியேற்றதாரர் விவகாரம் குறித்து Fides செய்தி நிறுவனத்துடன் செய்திகளைப் பகிந்துகொண்டுள்ள பேராயர் Gómez, மெக்சிகோ மற்றும் இலத்தீன் அமெரிக்கர்கள் இவ்விவகாரத்தால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.
அமெரிக்க அரசியல்வாதிகளால் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் இலட்சக்கணக்கான மக்களில் பெரும்பாலானவர்கள் கத்தோலிக்கர் என்றும், திருஅவை, தனது மக்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதையல்ல, ஆனால் எத்தனை சிறார் திருமுழுக்குப் பெற்றுள்ளார்கள் என்பதையே கவனத்தில் கொள்கின்றது என்றும் கூறினார் பேராயர் Gómez.
Los Angeles உயர்மறைமாவட்டம் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 84,000 குழந்தைகளுக்குத் திருமுழுக்கு அளிக்கின்றது, இவர்களில் பெரும்பாலானோர் இலத்தீன் அமெரிக்காவையும் பிற சிறுபான்மை இனங்களையும் சேர்ந்தவர்கள் என்றும் பேராயர் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு காங்கிரஸ் அவையின் வரவுசெலவு அலுவலகம் இத்திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அந்நாட்டில் தற்போது இடம்பெற்றுவரும் குடியேற்றதாரர் குறித்த சீர்திருத்த மசோதா அங்கீகரிக்கப்பட்டால், அந்நாட்டில் சரியான ஆவணங்கள் இன்றி வாழ்கின்றவர்களில், நான்கு பேருக்கு ஒருவர் வீதம் தங்களது நிலைகளைச் சரிசெய்ய முடியாத நிலைக்கு உட்படுவார்கள் எனத் தெரிகிறது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.