2013-07-31 16:55:56

27வது அனைத்துலக அமைதிக் கருத்தரங்கு : நம்பிக்கையின் துணிச்சல்


ஜூலை,31,2013. “நம்பிக்கையின் துணிச்சல் : உரையாடலில் மதங்களும் கலாச்சாரங்களும்” என்ற தலைப்பில், உலகில் அமைதியை ஊக்குவிக்கும் 27வது அனைத்துலக கருத்தரங்கு உரோம் ஜான் எஜிதியோ பிறரன்பு அமைப்பினால் நடத்தப்படவுள்ளது.
வருகிற செப்டம்பர் 29ம் தேதியிலிருந்து அக்டோபர் முதல் தேதி வரை நடைபெறவிருக்கும் இக்கருத்தரங்கில், உலகின் முக்கிய மதங்களின் பிரதிநிதிகள், ஐரோப்பிய அரசியல் மற்றும் கலாச்சார வாழ்வின் பிரதிநிதிகள் என அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் இடம்பெறும் நெருக்கடிகள், ஆப்ரிக்காவில் ஒப்புரவு, ஆசியாவில் மதங்களின் பங்கு, இலத்தீன் அமெரிக்காவின் எதிர்காலம், குடியேற்றம், மத நம்பிக்கையற்றவர்கள் மற்றும் மத நம்பிக்கையாளருக்கிடையே உரையாடல், துன்பத்தில் வாழ்வின் மதிப்பு, நீண்ட ஆயுள்காலம் ஓர் ஆசீர்வாதம், இன்றைய மறைசாட்சிய வாழ்வு, பெண்களுக்கு எதிரான வன்முறை என, பல தலைப்புகளில் இக்கருத்தரங்கு நடைபெறும்.
உரோமையில் நடைபெறவிருக்கும் இக்கருத்தரங்கில் இடம்பெறும் உரைகள், கருத்துப் பகிர்வுகள், பொதுவான விவாதங்கள் போன்றவை, உரோம் நகரை அமைதி மற்றும் ஒன்றிணைந்த வாழ்வின் அடையாளத் தலைநகராகக் காட்டும் என அந்தேரயா ரிக்கார்தி என்பவர் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.