2013-07-30 15:23:02

விவிலியத் தேடல் இறைவேண்டல் பற்றிய இரு உவமைகள் - பகுதி 3


RealAudioMP3 இறைவேண்டுதல் பற்றி இயேசு கூறிய இரு உவமைகளின் அடிப்படையில், செபிப்பதைப் பற்றிய ஒரு சில பொதுவான சிந்தனைகளைக் கடந்த இரு வாரங்களாக மேற்கொண்டு வருகிறோம். இன்று, குறிப்பாக, லூக்கா நற்செய்தியின் 11ம் பிரிவில் நாம் காணும் 'நள்ளிரவில் வந்த நண்பர்' அல்லது, 'நள்ளிரவில் தொல்லை கொடுத்த நண்பர்' என்ற உவமையை மீண்டும் நம் தேடலின் மையமாக்குவோம். இந்த அழகிய உவமைக்கு நாம் திரும்பி வருவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன:

1. ஜூலை 28, கடந்த ஞாயிறன்று இந்த உவமை நமது ஞாயிறு வழிபாட்டின் மையமாக அமைந்தது. எனவே, சில கூடுதலான எண்ணங்கள் மனதில் எழுந்தன.
2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜனெய்ரோ நகரில் மேற்கொண்ட பயணத்தின்போது, பகிர்ந்துகொண்ட சில கருத்துக்களை இவ்வுவமையுடன் தொடர்புபடுத்த விரும்புகிறேன்.
3. ரியோ நகரில் திருத்தந்தை பயணித்த அதே வேளையில், அங்கு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த The Bread Tank, அதாவது, 'ரொட்டி பீரங்கி வண்டி' என்ற முயற்சியை இந்த உவமையுடன் தொடர்புபடுத்த விரும்புகிறேன்.

மனம் தளராமல் செபிக்கவேண்டும் என்பதை வலியுறுத்த, இயேசு, 'நள்ளிரவில் தொல்லை கொடுத்த நண்பர்' என்ற உவமையைச் சொன்னார் என்பதை நாம் அறிவோம். ஆயினும், இந்த உவமை வேறு பல கோணங்களில் சிந்திக்கவும் நம்மைத் தூண்டுகிறது. நள்ளிரவில் உதவி கேட்டு வந்த நண்பர் தன்னுடைய பசியைத் தீர்க்க அடுத்தவர் வீட்டின் கதவைத் தட்டவில்லை. மாறாக, தன்னைத் தேடிவந்த மற்றொரு நண்பரின் பசியைப் போக்கவே அந்த அகால நேரத்தில் அடுத்தவர் வீட்டுக் கதவைத் தட்டினார்.
நம்முடையத் தேவைகளுக்கு அடுத்தவரை நாடுவதற்கு நமக்குள் ஓரளவு உந்துசக்தி பிறக்க வாய்ப்புண்டு. ஆனால், அடுத்தவர் தேவையை எடுத்துச்சொல்லி உதவி கேட்பதற்கு இதே அளவு உந்துசக்தி நமக்குள் தோன்றுமா என்பது சிறிது சந்தேகம்தான். அதுவும் நாம் உதவி கேட்டு செல்லும் இடத்தில் மூடப்பட்ட கதவுகள் இருந்தால், நமது முயற்சி தொடருமா என்பது இன்னும் பெரிய சந்தேகம்தான்.
முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா அவர்களின் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு நிகழ்வு நினைவில் எழுகிறது. அன்னை அவர்கள் நடத்தி வந்த ‘Nirmal Hriday’ அதாவது, ‘தூய இருதயம்’ என்ற கருணை இல்லத்திற்காக அவர் ஒருநாள் கொல்கத்தாவின் கடைவீதிகளில் நிதி திரட்டிக் கொண்டிருந்தார். ஒரு கடை முதலாளியிடம் அவர் கரங்களை நீட்டியபோது, அவர் அந்தக் கரங்களில் எச்சில் துப்பினார். அன்னையவர்கள் அந்த எச்சிலைத் துடைத்தப்படியே, "சரி, இது எனக்கு நீங்கள் தந்ததாக இருக்கட்டும். எங்கள் இல்லத்திற்கு நீங்கள் என்ன தரப்போகிறீர்கள்?" என்று மீண்டும் கரங்களை நீட்டினார்.
அடுத்தவரின் தேவைக்கென எதையும் செய்வதற்கு அன்னைத் தேரேசாவைப் போல ஆயிரம் உள்ளங்கள் முன்வருவதற்கு, 'நள்ளிரவில் வந்த நண்பர்' ஓர் உந்துதலாக இருந்திருக்கலாம் என்றும் நான் சிந்தித்துப் பார்க்கிறேன்.

இயேசு இங்கு சித்திரித்துள்ள காட்சி எளியோர் வாழும் ஒரு பகுதியை நம் கண்முன் கொணர்கிறது. ஏழைகள் வாழும் இல்லங்களில் அறிவுப்பு ஏதுமின்றி வரும் விருந்தினர்களை நாம் காணமுடியும். இரவோ, பகலோ எந்த நேரமாயினும், வறியோர் இல்லங்களில் வரவேற்பு இருக்கும் என்பதை இயேசு அழகாகச் சொல்கிறார். இதே எண்ணங்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் தன் பயணத்தின்போது குறிப்பிட்டார். ஜூலை 25, கடந்த வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரேசில் நாட்டின் Varginha நகரில் அமைந்திருந்த வறியோர் குடியிருப்பு ஒன்றைச் சுற்றிவந்து, அங்குள்ள மக்களைச் சந்தித்தார். அங்கு கூடியிருந்த அனைவருக்கும் அவர் கூறிய அழகான எண்ணங்கள் இதோ:
பிரேசில் நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் சந்திக்க எனக்கு அதிக ஆசை. ஒவ்வொரு வீடாகச் சென்று, உங்களை வாழ்த்தி, நீங்கள் தரும் தண்ணீர் அல்லது காபியைப் பருக ஆசை. ஆனால், பிரேசில் மிகப் பெரிய நாடு எனவே நான் Varginha குடியிருப்பிற்கு வந்தேன். உங்களைச் சந்திப்பதன் வழியாக, நான் பிரேசில் மக்கள் அனைவரையும் சந்திப்பதைப் போல் உணர்கிறேன்.
பிரேசில் மக்கள் மனதில் உள்ள வரவேற்கும் குணம் எனக்கு முக்கியமாகத் தெரிகிறது. இந்த வரவேற்பும், விருந்தோம்பலும் நம் மத்தியில் இருக்கும்வரை, நாம் வறியோர் அல்ல. பசியோடு உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும் எவரும் உணவின்றிப் போகமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். "பருப்பில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்ப்போம்" என்று உங்களிடையே வழங்கப்படும் பழமொழி, உங்கள் விருந்தோம்பலை வெளிப்படுத்தும் அன்பு மொழி.
பிரேசில் மக்கள், குறிப்பாக, உங்களிடையே உள்ள மிகவும் வறிய மக்கள், சமுதாயத்தில் தோளோடு தோள் நின்று உதவுவது என்ற மேலான பாடத்தை உலகிற்குச் சொல்லித்தர முடியும். பிரேசில் மக்களிடம் நான் குறிப்பாக வேண்டுவது இதுதான்... யாரையும் சமுதாயத்திலிருந்து ஒதுக்கவேண்டாம். எந்த ஒரு சமுதாயமும் தன்னிடம் உள்ள மக்களில் சிலரை ஒதுக்கிவிட்டு அமைதியையும், வளமையையும் வளர்க்க முடியாது. தூக்கி எறியும் கலாச்சாரம் நம் இதயத்தில் நுழைவதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. பகிர்வதால் மட்டுமே நாம் உண்மையில் செல்வம் மிகுந்தவர்களாய் வாழ முடியும். பகிரும்போது, அனைத்தும் பன்மடங்காக வளர்கிறது.

'நள்ளிரவில் வந்த நண்பர்' உவமைக்கு முன்னர் இயேசு சொல்லித்தந்த அந்த அற்புத செபத்துடன் இந்த நண்பரின் முயற்சியை இணைத்துச் சிந்திக்கலாம். அந்த அழகிய செபத்தில், 'எங்கள் அனுதின உணவை எங்களுக்குத் தாரும்' என்று வேண்டுகிறோம். இது ஒரு சமுதாய வேண்டுதல். 'எனக்குத் தேவையான உணவைத் தாரும்' என்ற தன்னல வேண்டுதல் அல்ல. அந்த வேண்டுதலின் ஓர் எடுத்துக்காட்டாக, தன் நண்பரின் உணவுத் தேவையை நிறைவேற்ற, நள்ளிரவு என்றும் பாராது, உதவி கேட்டுச்செல்லும் ஒருவரை இயேசு தன் உவமையில் சித்திரிக்கிறார்.

உலகில் ஒவ்வொரு நாளும் பல கோடி மக்கள் பசியோடு படுத்துறங்கச் செல்கின்றனர். அவர்கள் பசியைப் போக்க நாம் முயற்சிகள் எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அடுத்தவர் பசியைப் போக்க நம்மிடம் ஒன்றும் இல்லாதபோதும், மனம் தளராது மற்றவர் உதவியை நம்மால் நாட முடிந்தால், இறை அரசு இவ்வுலகில் வருவது உறுதி. உலகில் உள்ள ஒவ்வொருவரும் வயிறார உண்ணும் அளவுக்கு இவ்வுலகில் உணவு ஒவ்வொரு நாளும் தயாராகிறது. ஆயினும், அந்த உணவைப் பகிர்ந்துகொள்ள மனமில்லாமல், நம்மில் பலர் கதவுகளை மூடிவிட்டுப் படுத்துவிடுகிறோம். "எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது..." (லூக்கா 11 : 7) என்று தெளிவாக மறுப்பு சொல்கிறோம். இந்த வார்த்தைகளில் பொதிந்துள்ள மற்றொரு ஆபத்தையும் இங்கு சிந்திப்பது நல்லது. பகிர்ந்து தரவோ, அடுத்தவருக்கு உதவவோ நமக்கு மனமில்லை என்பதோடு நாம் நிறுத்திவிடாமல், நம் பிள்ளைகளின் முன்னிலையில் இவ்வகையில் நாம் சொல்வது, அவர்களுக்கும் தன்னலப் பாடங்களைச் சொல்லித் தர வாய்ப்பாக அமைகிறது.

உலக இளையோர் நாள் நிகழ்வுகளில், உணர்வுமிகுந்த ஓர் உச்ச நிகழ்வாக அமைவது அங்கு நடத்தப்படும் சிலுவைப்பாதை பக்திமுயற்சி. ஜூலை 26, வெள்ளிக்கிழமை மாலை Copacabana கடற்கரையில் இடம்பெற்ற இந்தப் பக்திமுயற்சியில் கலந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பகிர மறுக்கும் இவ்வுலகைப் பற்றி அங்கு பேசினார்:
தன் சிலுவையைச் சுமந்து, நம்முடன் துணைவரும் இயேசு, நம் மனதின் ஆழத்தில் புதைந்துள்ள அச்சங்கள், பிரச்சனைகள், துன்பங்கள் அனைத்தையும் தன் தோள்மீது சுமந்து, நம்முடன் நடக்கிறார் என்று கூறிய திருத்தந்தை, இவ்வுலகின் பல துயரமானச் சூழல்களில் கிறிஸ்து இணைகிறார் என்பதைப் பட்டியலிடும்போது, ஒவ்வொரு நாளும் பெருமளவில் உணவு, குப்பைகளில் கொட்டப்படும் இவ்வுலகில், பசியால் வாடும் ஒவ்வொருவருடனும் சிலுவையில் அறையப்பட்டுள்ள இயேசு இணைகிறார் என்று கூறினார்.

பசியைப் போக்கும் முயற்சிகள் எடுக்கும் உலகம் ஒருபுறம். அந்த முயற்சிகளுக்குச் செவி கொடுக்காமல், கதவுகளை மூடும் உலகம் மறுபுறம். உலகை அழிக்கும் ஆயுதங்களுக்கு நாம் செலவிடும் தொகையில் பத்தில் ஒரு பகுதியைப் பயன்படுத்தினால் போதும், உலக மக்களின் பசியை நிரந்தரமாக, முற்றிலும் துடைக்கலாம் என்ற உண்மையை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும், இந்த உண்மையை உணர்ந்து, ஏற்றுக்கொள்ள மறுக்கும் அரசுகளைக் கண்டு நாம் வேதனைப்படுகிறோம்.
சமுதாய நீதி, வறியோர் மீது அன்பு, இயற்கை மீது அக்கறை என்ற கருத்துக்களைத் தன் உரையில் அடிக்கடி வலியுறுத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கவனத்தை ஈர்க்க, ரியோ தெ ஜனெய்ரோ நகரில் பல குழுக்கள் முயன்றன. அவற்றில் ஒன்று, World Future Council - அதாவது, 'உலக எதிர்கால அவை' என்ற அமைப்பு. இவ்வமைப்பு உருவாக்கியிருந்த The Bread Tank - 'ரொட்டி பீரங்கி வண்டி' ஒரு புதுவகை போராட்ட முயற்சி. போர்க்களங்களில் பயன்படுத்தப்படும் பீரங்கி வண்டியைப் போன்ற ஒரு வாகனம், முழுவதும் ரோட்டியால் வடிவமைக்கப்பட்டிருந்தது. 2012ம் ஆண்டு ஜூன் மாதம் ரியோ தெ ஜனெய்ரோ நகரில் நடைபெற்ற Rio+20 உலக உச்சி மாநாட்டையொட்டி 'ரொட்டி பீரங்கி வண்டி' முதல் முதலாக மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ரியோ நகருக்குச் சென்றபோது, இந்த முயற்சி மீண்டும் ஒரு முறை மேற்கொள்ளப்பட்டது.
உலகில் இன்று 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பட்டினியால் பரிதவிக்கும்போது, ஒவ்வோர் ஆண்டும் 1.74 டிரில்லியன் டாலர்கள், அதாவது, 1740 கோடி டாலர்கள் இராணுவத்திற்காகச் செலவிடப்படுவது எவ்வகையிலும் நியாயம் அல்ல என்பதை வலியுறுத்த 'ரொட்டி பீரங்கி வண்டி' முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இம்முயற்சியை மேற்கொண்ட World Future Council உறுப்பினர்கள் திருத்தந்தையைச் சந்தித்ததாகத் தெரியவில்லை. ஆயினும், இவ்வமைப்பினரின் எண்ணங்கள், திருத்தந்தையின் மனதுக்கு நெருக்கமான எண்ணங்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மைதானே!

இயேசு கூறும் இந்த உவமையில் நாம் யாராக வாழ்கிறோம்? அடுத்தவர் பசியைப் போக்க முயற்சிகள் மேற்கொள்ளும் மனிதராக வாழ்கிறோமா? பிறர் பசியைப் போக்கும் வாய்ப்புக்கள் நம் வாசல் கதவைத் தட்டினாலும், கதவை மூடிவிட்டு உறங்கும் மனிதராக வாழ்கிறோமா?
இயேசு சொல்லித் தந்த அற்புத செபத்திற்குத் திரும்புவோம். “உமது அரசு வர வேண்டும்” என்று மன்றாடும் அதே செபத்தில், “எங்கள் உணவைத் தாரும்” என்ற சமுதாய ஏக்கத்தையும் எழுப்புகிறோம் இந்த ஏக்கத்திற்கு விடையாக இறைவன் இந்த உலகின் பசியைப் போக்கத் தேவையான அளவு உணவைத் தந்துள்ளார் என்பதையும் நாம் உணர்ந்துள்ளோம். ஆயினும், அதனைப் பகிர்வதற்கு மனமின்றி நம் மனக்கதவுகள் மூடப்பட்டால், பசி மட்டுமே இங்கு அரசாள முடியும்... இறைவனின் அரசு இங்கு வருவது கடினமாகும்.

"செல்லுங்கள், அஞ்சாதீர்கள், பணியாற்றுங்கள்" என்ற மூன்று சொற்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் பங்கேற்ற இளையோருக்கும், உலக இளையோர் அனைவருக்கும் தன் இறுதி விருதுவாக்காக அளித்தார். உலக இளையோர் நாள் நிகழ்வுகள் முடிவுபெற்றுள்ள இத்தருணத்தில், உலகச் சமுதாயமாக வாழும், அல்லது, வாழவிழையும் எங்களுக்கு அனுதின உணவை இன்று அளித்தருளும் என்ற செபம் நம் அனைவரிடமிருந்து, குறிப்பாக, எதிர்காலத்தை வடிவமைக்கவிருக்கும் இளையோரிடமிருந்து, உண்மையான ஏக்கமாக, உறுதியான செபமாக விண்ணகத் தந்தையை நோக்கி எழட்டும்!








All the contents on this site are copyrighted ©.