2013-07-30 16:02:14

பேருந்து விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்குத் திருத்தந்தை ஆறுதல்


ஜூலை,30,2013. தென் இத்தாலியில் இஞ்ஞாயிறன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இப்பேருந்து விபத்தில் இறந்தவர்கள் இறைவனின் நிறைசாந்தியை அடையத் தான் செபிப்பதாக அச்செய்தியில் தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ், இவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆறுதலையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்த அனுதாபச் செய்தியை நேப்பிள்ல்ஸ் பேராயர் கர்தினால் Cresenzio Sepe அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரில் அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் Tarcisio Bertone.
நேப்பிள்ல்ஸ் நகருக்கும் கனோசா நகருக்கும் இடையே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் பேருந்து ஒன்று 30 மீட்டர் பள்ளத்தில் விழுந்ததில் அதில் பயணம் செய்த ஏறக்குறைய 50 பேரில் 38 பேர் இறந்துள்ளனர் மற்றும் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் இறந்தவர்கள் அனைவருக்கும் மொத்தமாக Pozzuoliவில், இச்செவ்வாயன்று அடக்கச் சடங்கு நடத்தப்பட்டது. Pozzuoli ஆயர் Gennaro Pascarella நிகழ்த்திய இவ்வடக்கச் சடங்கு திருப்பலியில் இத்தாலிய பிரதமர் Enrico Letta உட்பட பல முக்கிய அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.