2013-07-30 15:24:39

கற்றனைத் தூறும் ரொட்டி பீரங்கி வண்டி (The Bread Tank)


சமுதாய நீதி, வறியோர் மீது அன்பு, இயற்கை மீது அக்கறை என்ற கருத்துக்களைத் தன் உரையில் அடிக்கடி வலியுறுத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கவனத்தை ஈர்க்க, ரியோ தெ ஜனெய்ரோ நகரில் பல குழுக்கள் முயன்றன. அவற்றில் ஒன்று, World Future Council - அதாவது, 'உலக எதிர்கால அவை'. இவ்வமைப்பு உருவாக்கியிருந்த The Bread Tank - ரொட்டி பீரங்கி வண்டி ஒரு புதுவகை போராட்ட முயற்சி.
போர்க்களங்களில் பயன்படுத்தப்படும் பீரங்கி வண்டியைப் போன்ற ஒரு வாகனம், முழுவதும் ரொட்டியால் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த ரொட்டிகளை மக்கள் உண்ணும்போது, அந்த ரோட்டிகளுக்கு அடியில் உருவாக்கப்பட்டிருந்த அழகியத் தோட்டம் ஒன்று வெளியானது. இவ்வகையில் இந்த ரொட்டி பீரங்கி வண்டி வடிவமைக்கப்பட்டிருந்தது.
உலகில் இன்று 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பட்டினியால் பரிதவிக்கும்போது, ஒவ்வோர் ஆண்டும் 1.74 டிரில்லியன் டாலர்கள், அதாவது, 1740 கோடி டாலர்கள் இராணுவத்திற்காகச் செலவிடப்படுவது எவ்வகையிலும் நியாயம் அல்ல என்பதை வலியுறுத்த 'ரொட்டி பீரங்கி வண்டி' முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
2012ம் ஆண்டு ஜூன் மாதம் ரியோ தெ ஜனெய்ரோ நகரில் நடைபெற்ற Rio+20 உலக உச்சி மாநாட்டையொட்டி 'ரொட்டி பீரங்கி வண்டி' முதல் முதலாக மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. திருத்தந்தை ரியோ நகருக்குச் சென்றபோது, இந்த முயற்சி மீண்டும் ஒரு முறை மேற்கொள்ளப்பட்டது.
2013ம் ஆண்டிலிருந்து உலக அரசுகளின் இராணுவச் செலவு 10 விழுக்காடாகிலும் குறைக்கப்படவேண்டும் என்பது இவ்வமைப்பினரின் போராட்டக் கோரிக்கை. நொபெல் பரிசுபெற்ற பலரின் ஆதரவுடன் 'உலக எதிர்கால அவை' அமைப்பினரின் போராட்டம் தொடர்கிறது.

ஆதாரம் : http://www.worldfuturecouncil.org








All the contents on this site are copyrighted ©.