2013-07-30 16:06:59

28வது உலக இளையோர் தினம் கொரியத் திருஅவைக்கு ஏராளமான வரங்களை வழங்கியுள்ளது, Daejeon ஆயர்


ஜூலை,30,2013. தென் கொரியாவிலிருந்து ரியோ தெ ஜனெய்ரோ சென்ற அருள்பணியாளர்கள், இளையோர் என ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் 28வது உலக இளையோர் தினம் சிறப்பான அருள் வழங்குவதாக இருந்தது என Daejeon ஆயர் Lazzaro You Heung-sik கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புன்சிரிப்பு, நட்புணர்வு, இன்னும் குறிப்பாக அவரது அன்பின் செய்தி இந்த இளையோர் தினத்தை மேலும் அழகானதாக அமைத்தன என்றுரைத்த ஆயர் You, இவ்வுலக தினம் கத்தோலிக்கத் திருஅவைக்கு ஓர் அசாதாரணமான மற்றும் தனித்துவமிக்கக் கொண்டாட்டமாக இருந்தது என்று கூறினார்.
ரியோவில் இடம்பெற்ற 28வது உலக இளையோர் தின நிகழ்வுகள் குறித்த தனது அனுபவங்களை ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்ட ஆயர் You, தான் திருத்தந்தையோடு நேரில் பேசிய அனுபவம் பற்றியும் விளக்கினார்.
கொரியத் திருஅவை உறுதியாக இருக்கின்றது, தொடர்ந்து அதனை உறுதியுடன் நடத்திச் செல்லுங்கள் என்று, தனது இயல்பான புன்சிரிப்புடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னிடம் கூறியதாகவும் ஆயர் You கூறினார்.
Daejeon ஆயர் You, கொரியாவிலிருந்து 350 இளையோருடன் இவ்வுலக இளையோர் தினத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.