2013-07-29 16:51:37

28வது உலக இளையோர் தின நிறைவு திருப்பலி


ஜூலை,29,2013. இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு இடம்பெற்ற உலக இளையோர் தின நிறைவுத் திருப்பலியிலும் இத்தகைய சப்தங்களை அதிகமாகக் கேட்க முடிந்தது. முப்பது இலட்சம் இளையோர் என்றால் கேட்கவா வேண்டும். ஞாயிறு மூவேளை செப உரையில் அனைவருக்கும் நன்றி சொல்லிய திருத்தந்தை,
என் அன்பு இளையோர் நண்பர்களே, இந்நாள்களில் இயேசு உங்களைத் தமது மறைப்பணிச் சீடர்களாக மாற தொடர்ந்து அழைத்தார். நீங்களும் உங்களின் பெயர் சொல்லி அழைத்த நல்ல மேய்ப்பராம் அவரின் குரலைக் கேட்டீர்கள்; உங்களை அழைத்த அவர் குரலை நீங்கள் புரிந்து கொண்டீர்கள்; உங்கள் இதயங்களில் எதிரொலிக்கும் இக்குரலில் இறையன்பின் கனிவை நீங்கள் உணரவில்லையா? திருஅவையில் மற்றவரோடு சேர்ந்து கிறிஸ்துவைப் பின்தொடர்வதன் அழகை நீங்கள் அனுபவிக்கவில்லையா? வாழ்வை முழுமையாக வாழ்வதற்கான உங்களது ஆவலின் பதில் நற்செய்தியே என்பதை இன்னும் ஆழமாக நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?
என்ற கேள்விகளை உலக இளையோரிடம் கேட்டு, அடுத்த உலக இளையோர் தினம் 2016ம் ஆண்டில் போலந்தின் க்ரக்கோ நகரில் நடைபெறும் எனத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்தபோது எழுந்த கரவொலியை விளக்க வார்த்தைகளே இல்லை. 28வது உலக இளையோர் தின நிறைவுத் திருப்பலியில் திருத்தந்தை ஆற்றிய மறையுரையிலும், செல்லுங்கள், அஞ்சாதீர்கள், பணியாற்றுங்கள் என்று இளையோரின் மறைப்பணி ஆர்வத்தையே ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இளையோரே, செல்லுங்கள், அஞ்சாதீர்கள், பணியாற்றுங்கள். ரியோவில் இந்நாள்களில் இயேசுவை மற்றவரோடு சேர்ந்து சந்திக்கும் அழகான அனுபவத்தை நீங்கள் அனுபவித்தீர்கள். விசுவாசத்தின் மகிழ்வை உணர்ந்தீர்கள். இந்த உங்கள் அனுபவம், உங்களது வாழ்வில் அல்லது சிறிய குழுக்களில் அல்லது உங்கள் இயக்கங்களில் அடைக்கப்பட்டுவிடக் கூடாது. அவ்விதம் செய்தால் எரியும் நெருப்பிலிருந்து பிராணவாயுவை தடுத்து வைப்பதுபோல் ஆகும். விசுவாசம் சுடர் போன்றது. அது எவ்வளவுக்குப் பகிர்ந்து கொள்ளப்படுகிறதோ அவ்வளவுக்கு அது உறுதியுடன் வளரும். வாழ்வின் மற்றும் வரலாற்றின் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவை அறியவும், அன்புகூரவும், அவரை அறிவிக்கவும் உங்கள் விசுவாசம் உதவட்டும். ஆயினும் கவனம் தேவை. நீங்கள் விரும்பினால், உங்களுக்கு நேரம் கிடைத்தால், நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள் என்று இயேசு சொல்லவில்லை. விசுவாச அனுபவத்தைப் பகிர்நது கொள்ளுங்கள். விசுவாசத்துக்குச் சாட்சியாக இருங்கள், நற்செய்தியை அறிவியுங்கள். இவ்வாணையையே ஆண்டவர் அகிலத் திருஅவையிடம் ஒப்படைத்தார். அகிலத் திருஅவையில் நீங்களும் ஓர் அங்கம். இயேசு நம்மை அடிமைகளாக நடத்தவில்லை. சுதந்திர மனிதர்களாக, நண்பர்களாக, சகோதர சகோதரிகளாக நடத்துகிறார். அவர் நம்மை அனுப்பமட்டும் செய்யவில்லை, நம்மோடு உடனிருக்கிறார், நமது அன்பின் பணியில் எப்போதும் நம் அருகில் இருக்கிறார்.
இயேசு நம்மை எங்கே அனுப்புகிறார்? அதற்கு எல்லைகள் இல்லை, வரையறைகள் இல்லை. ஒவ்வொருவரிடமும் நம்மை அனுப்புகிறார். நற்செய்தி சிலருக்கும் மட்டும் உரித்தானது அல்ல. அது அனைவருக்கும் உரியது. கிறிஸ்துவை எல்லா இடங்களிலும், எல்லாரிலும், அறிவிப்பதற்குப் பயப்பட வேண்டாம். கிறிஸ்துவை நாம் அறிவிக்கும்போது நமக்கு முன்னால் அவரே சென்று நம்மை வழிநடத்துகிறார். நம்மோடு எப்போதும் இருக்கிறார். இயேசுவின் தாயும், நம் தாயுமான மரியா இந்த நமது பணியில் நம்மோடு இருப்பாராக
என்று சொல்லி இம்மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். கத்தோலிக்கத் திருஅவையில் இதுவரை நடைபெற்றுள்ள உலக இளையோர் தினங்களில் ரியோ தெ ஜனெய்ரோவில் இடம்பெற்ற 28வது உலக இளையோர் தினமே மிகப் பெரியதாக இருந்ததென எம் நிருபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அபரெசிதா அன்னைமரி திருத்தலத்தில் செபித்த நேரம், ரியோவின் சேரிப்பகுதியில் புனித Jerome Emiliani பங்கு ஆலயத்தில் செபித்த நேரம், 28வது உலக இளையோர் தினத்தை நிறைவு செய்த நேரம் ஆகிய மூன்று தருணங்களில் அவர் மிகவும் உள்ளம் உருகிக் காணப்பட்டார் என திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார். அன்பர்களே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளது போல அஞ்சாமல் நற்செய்தியை எடுத்துரைப்போம்.







All the contents on this site are copyrighted ©.