2013-07-28 16:39:40

மனிதர்களுக்கு முதலிடம் கொடுக்கும் பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றைச் சிந்திக்கவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூலை,28,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் வெளிநாட்டுப் பயணமாக அமைந்துள்ள ரியோ தெ ஜனெய்ரோ நகர் பயணத்தின்போது, பிரேசில் நாட்டின் அரசியல், மதம், கலாச்சாரம், கல்வி, வர்த்தகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த தலைவர்களை ஜூலை 27, இவ்வெள்ளியன்று சந்தித்தபோது அவர் ஆற்றிய உரை:
மதிப்பிற்குரியோரே,

பல துறைகளிலிருந்தும் வந்திருக்கும் உங்கள் அனைவரையும் சந்திக்க கிடைத்த வாய்ப்பிற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். அழகிய போர்த்துகீசிய மொழியில் பேச எனக்கு ஆவலாக இருந்தாலும், என் உள்ளத்தில் உள்ளவற்றைத் தெளிவாகச் சொல்வதற்கு நான் இஸ்பானிய மொழியைத் தெரிவுசெய்துள்ளேன். மன்னித்துக்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு நாட்டிலும் பொறுப்பில் உள்ளவர்கள் வருங்காலத்தை எதிர்கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். சலனமற்ற, அமைதியான முறையில் உண்மையைக் காணவேண்டும் என்று பிரேசில் நாட்டு சிந்தனையாளர் Alceu Amoroso கூறியுள்ளார். சலனமற்ற, அமைதியான முறையில் எதிர்காலப் பார்வை அமைவதை மூன்று அம்சங்களில் நான் சிந்திக்க விழைகிறேன். உங்கள் கலாச்சாரத்தின் தனித்துவத்தைக் காண்பது; எதிகாலத்தை இணைந்து உருவாக்குவது; இன்றைய தருணத்தில் ஆக்கப்பூர்வமான உரையாடலை மேற்கொள்வது.

1. மனிதரைக் குறித்தும், வாழ்வைக் குறித்தும் பிரேசில் மக்கள் கொண்டிருக்கும் கண்ணோட்டம், தனித்துவம் மிக்கது. இக்கண்ணோட்டத்தை, கத்தோலிக்கத் திருஅவையும், விவிலியமும் வெகுவாக வளர்த்துள்ளன. ஒருங்கிணைந்த மனிதத்துவமும், அனைவரையும் சந்தித்து அரவணைக்கும் குணமும் பிரேசில் கலாச்சாரத்தில் அடிப்படையான அம்சங்கள். பொதுநலனை வளர்க்கவும், வாழ்வின் மகிழ்வை வெளிக்கொணரவும் கிறிஸ்தவ விழுமியங்களின் அடிப்படையில் இக்கலாச்சாரத்தை வளர்க்க முயலவேண்டும்.

2. எதிகாலத்தை இணைந்து உருவாக்குவது என்று சிந்திக்கும்போது, மனிதர்களுக்கு முதலிடம் கொடுக்கும் பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றைச் சிந்திக்கவேண்டும். தலைமைத்துவம் என்பது தகுதியான இலக்குகளை நிர்ணயிப்பதிலும், அவற்றை அடையும் வழிகளைச் சிந்திப்பதிலும் அடங்கியுள்ளது. தடைகள் வந்தாலும், மனம் தளராது செல்வது, தலைமைத்துவத்தின் பண்பு. எந்த ஒரு முடிவு எடுக்கும்போதும், பல்வேறு கோணங்களில் சிந்தித்து, முழுமையான பரந்த ஒரு நோக்குடன் முடிவெடுப்பது தலைமைத்துவத்திற்குத் தேவை. மக்களின் உரிமைகள், இறைவனின் தீர்ப்பு என்ற கோணங்களில் நமது முடிவுகளை, செயல்பாடுகளை ஆய்வு செய்வது நல்லது.

3. இன்றைய தருணத்தில் ஆக்கப்பூர்வமான உரையாடலை மேற்கொள்வதை நான் முக்கியமாகக் கருதுகிறேன். தன்னலம் அதிகமாவதால் உருவாகும் அக்கறையின்மைக்கும், ஆத்திரம் மிகுந்த போராட்டத்திற்கும் இடையே, உரையாடல் என்ற ஆக்கப்பூர்வமான வழியும் உள்ளது. கலாச்சாரம், மதம், கல்வி என்ற பல துறைகளிலிருந்தும் கிடைக்கும் எண்ணங்கள் தகுந்த உரையாடலுக்கு பெரிதும் உதவும். சமுதாயத்தின் பல துறைகளிலிருந்தும் என்னிடம் ஆலோசனை கேட்கும் தலைவர்கள் அனைவருக்கும் நான் கூறும் ஒரு முக்கிய பதில்: உரையாடல், உரையாடல், உரையாடல்... என்னிடமிருந்து மாறுபட்டவர்கள் எனக்குப் பயனுள்ளவற்றைத் தரமுடியும் என்ற மனப்பக்குவத்துடன் உரையாடல்கள் நிகழவேண்டும். ஒருவர் ஒருவரைச் சந்தித்து, உரையாடி, ஒருமித்துச் சிந்தித்தால், நாம் உயர்ந்து நிற்கமுடியும், அல்லது அனைவரும் வீழ வேண்டியிருக்கும். சரியான பாதையை அனைவரும் இணைந்து தேடினால், எதிர்காலம் வளமிக்கதாக, பாதுகாப்பாக அமையும்.

திருஅவையின் மேய்ப்பர் என்ற முறையிலும், பிரேசில் மக்கள் மீது அன்பு கொண்டவர் என்ற முறையிலும் நான் இந்த ஆலோசனைகளை வழங்குகிறேன். பொதுவான நலனுக்காக நீங்கள் அனைவரும் உழைக்கும்படி, தந்தையாம் இறைவனிடம், Aparecida அன்னைமரியா வழியாக வேண்டுகிறேன். உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக.

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.