2013-07-28 14:46:03

கற்றனைத்தூறும்..... இயற்கை உலகின் ஏழு வியப்புக்களில் ஒன்றான ரியோ தெ ஜனெய்ரோ துறைமுகம்


போர்த்துக்கீசிய மொழியில் ரியோ என்பதற்கு ஆறு என்றும், ஜனெய்ரோ என்பதற்கு சனவரி மாதம் என்றும் அர்த்தம். எனவே ரியோ தெ ஜனெய்ரோ என்றால் சனவரி ஆறு என்று அர்த்தமாகும். போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பனிலிருந்து 1501ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி புதிய உலகுக்குப் புறப்பட்ட நாடுகாண் மாலுமி Gonçalo Coelho என்பவர், மூன்று மாதங்கள் கப்பல் பயணம் செய்து தற்போதைய பிரேசிலின் கடற்கரையை வந்தடைந்தார். Gonçaloன் படகும், அவரோடு சென்ற மற்ற மூன்று படகுகளும் தென் அமெரிக்க கடற்கரை வழியாகச் சென்று கடைசியில் 1502ம் ஆண்டு சனவரி முதல் தேதியன்று ஒரு வளைகுடாப் பகுதியில் தரை தட்டி நின்றது. அவ்விடம் பெரிய ஆற்றின் முகத்தூவாரம் போல் அவர்களுக்குத் தோன்றியது. ஆற்றின் முகத்தூவாரம் அந்த Guanabara வளைகுடாவுக்கு நுழைவாயில் என நினைத்த அந்த மாலுமிகள் அவர்கள் கண்டுபிடித்த அந்த வியப்புமிக்க துறைமுகத்துக்கு அவர்கள் சென்றடைந்த நாளை வைத்தே பெயரிட்டனர். அதுதான் ரியோ தெ ஜனெய்ரோ அதாவது சனவரி ஆறு ஆகும். ரியோ தெ ஜனெய்ரோ துறைமுகம், உலகில் இயற்கையாக அமைந்துள்ள மிகவும் அழகான துறைமுகங்களில் ஒன்றாக உள்ளது. இந்தத் துறைமுகத்தை வியந்து இரசிக்கும் பயணிகள், கடவுள் ஆறு நாள்களில் உலகத்தைப் படைத்து ஏழாம் நாளில் ரியோவில் கவனம் செலுத்தினார் என்று சொல்கிறார்கள். இங்கு காலநிலையும் இதமாக, எல்லாரும் செல்லக்கூடியதாய் இதன் கடற்கரைகள் அமைந்துள்ளன. ரியோ தெ ஜனெய்ரோ துறைமுகம், பிரேசில் நாட்டின் Guanabara வளைகுடாக் கரையின் தென்மேற்கே அமைந்துள்ளது. மலைகளுக்கும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் இடையேயுள்ள நிலப்பகுதி வழியாக, பிரேசிலின் முன்னாள் தலைநகராகவும் இரண்டாவது பெரிய நகரமாகவும் இருக்கின்ற ரியோ நகரத்தால் இந்த வளைகுடா சூழப்பட்டுள்ளது. 395 மீட்டர் உயரமான Sugar Loaf மலை(1,296 அடி), 704 மீட்டர் உயரமான Corcovado மலை(2,310அடி), 1,021 மீட்டர் உயரமான Tijuca குன்றுகள் (3,350அடி) ஆகிய மலைகளால் இத்துறைமுகம் சூழப்பட்டுள்ளது. உலகப் புகழப்பெற்ற 38 மீட்டர் உயரமான இயேசு உலக மீட்பர் திருவுருவம் இந்த Corcovado மலைச்சிகரத்தில் உள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலால் உருவாகியுள்ள ரியோ தெ ஜனெய்ரோ துறைமுகக் கடற்கரைகள், இப்பெருங்கடலின் அலைகள் கொண்டுவரும் மண்ணாலும் பாறைக் கற்களாலும் நிறைந்துள்ளன.

ஆதாரம் : விக்கிப்பீடியா







All the contents on this site are copyrighted ©.