2013-07-27 17:01:54

ரியோ பேராலயத்தில் திருத்தந்தை திருப்பலி


ஜூலை,27,2013.ரியோ தெ ஜனெய்ரோவில் நடைபெறும் 28வது உலக இளையோர் தின நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கென அர்ஜென்டினாவின் Jujuy விலிருந்து 1,829 மைல்கள் நடந்தே ரியோ வந்துள்ளார் Young Facundo என்ற இளைஞர். இந்நகரிலிருந்து ரியோ வந்துள்ள குழுவுடன் சேர்ந்து பயணம் செய்வதற்கு 1280 டாலர் தேவைப்பட்டதால், அதற்கு வசதியில்லாத Facundo ஒரு மாதம் நடந்தே வந்துள்ளார். தனது தாய் கொடுத்த 118 டாலருடன் நடைபயணத்தைத் தொடங்கி ரியோ வந்துள்ளார். திருத்தந்தை சொல்வது போல இயேசுவால் வழிநடத்தப்பட என்னை நான் அனுமதிக்க வேண்டும் என Facundo சொல்லியுள்ளார். இவ்வாறு இளையோரில் தாக்கத்தை ஏற்படுத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 8 மணிக்குத் திருப்பயண நிகழ்வுகளைத் தொடங்கினார். அன்று காலை 9 மணிக்கு ரியோ தெ ஜனெய்ரோவின் புனித செபஸ்தியார் பேராலயத்தில் ஆயிரக்கணக்கான ஆயர்கள் மற்றும் குருக்களோடு கூட்டுத்திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை. அப்போது இந்தியாவுக்கு நேரம் இச்சனிக்கிழமை மாலை 5.30 மணியாகும். அனைவரும் வெண்மைநிற திருப்பலி ஆடையில் இருந்தனர்.
திருப்பலியின் தொடக்கத்தில் ஆயர்கள் ஒவ்வொருவரையும் கைகலுக்கி வாழ்த்தினார் திருத்தந்தை. முதலில் ரியோ பேராயர் வரவேற்புரை வழங்கினார். பின்னர் திருத்தந்தை அப்பேராலயத்துக்கு ஓர் அழகான திருப்பலி பாத்திரத்தை வழங்கினார். திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் நம்பிக்கை ஆண்டையொட்டி குருக்கள், துறவறத்தார் மற்றும் குருத்துவ மாணவர்களுக்கென நிகழ்த்திய இத்திருப்பலியில் ஆயிரக்கணக்கான பொதுநிலையினரும் பங்குபெற்றனர். இத்திருப்பலியில் அழைப்பின் மூன்று அம்சங்கள் குறித்து மறையுரையாற்றினார் திருத்தந்தை.
இச்சனிக்கிழமை மாலையில் இளையோரோடு திருவிழிப்பு வழிபாட்டில் திருத்தந்தை கலந்து கொள்வது இந்நாளின் கடைசி நிகழ்ச்சியாகும். இஞ்ஞாயிறன்று 28வது உலக இளையோர் தின நிறைவுத் திருப்பலியை நிகழ்த்தி அன்று மாலை 7 மணிக்கு உரோம் புறப்படுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியது போன்று இயேசுவின் சிலுவை போதிக்கும் பாடத்தின்வழி நாம் செல்வோம். நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள் என்ற தலைப்பில் இடம்பெற்றுவரும் இந்த 28வது உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் நாமும் ஆன்மீக வழியில் கலந்து கொள்வோம்.







All the contents on this site are copyrighted ©.