2013-07-27 16:52:14

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிலுவையை மையப்படுத்தி இளையோருக்கு விடுத்த மூன்று கேள்விகள்


ஜூலை,27,2013. ஜூலை 26, இவ்வெள்ளி மாலை 6 மணியளவில் Copacabana கடற்கரையில் இடம்பெற்ற சிலுவைப்பாதை பக்தி முயற்சியின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரை:

என் அன்புக்குரிய இளைய நண்பர்களே,
இயேசுவின் அன்பிலும், துன்பத்திலும் உடன் செல்ல இங்கு வந்துள்ளோம். உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் உணர்வுமிக்கத் தருணங்களில் ஒன்று, சிலுவைப்பாதை. முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள், (1983 - 84ம் ஆண்டுகளில் கொண்டாடப்பட்ட) மீட்பின் புனித ஆண்டிற்கென உருவாக்கப்பட்ட சிலுவையை இளையோரிடம் ஒப்படைத்தார். அப்போது, அவர் உங்களிடம் கேட்டுக்கொண்டது இதுதான்: "கிறிஸ்து மனிதர்கள் மீது கொண்ட அன்புக்கு அடையாளமாக விளங்கும் சிலுவையை உலகெங்கும் ஏந்திச் செல்லுங்கள். கிறிஸ்துவின் மரணம், உயிர்ப்பின் வழியாக மட்டுமே மீட்பை நாம் காணமுடியும் என்பதை உலகிற்கு அறிவியுங்கள்" (ஏப்ரல் 22, 1984). அன்றிலிருந்து, உலக இளையோர் நாள் சிலுவை உலகின் அனைத்து கண்டங்களுக்கும், பல்வேறுச் சூழல்களில் பயணம் செய்துள்ளது. இதனைச் சுமந்து சென்ற, அல்லது இதனைக் கண்ணுற்ற இளையோரின் வாழ்வு அனுபவங்கள் பலவற்றில் இந்தச் சிலுவை தோய்ந்துள்ளது.
இயேசுவின் சிலுவையை அணுகி, அதனைத் தொடுவோர் ஒவ்வொருவரும் தன்னிடம் உள்ளதில் ஏதோ ஒன்றை அங்கு விட்டுவிடுகின்றார்; அச்சிலுவையில் இருந்து ஏதோ ஒன்றைப் பெறுகின்றார். நீங்கள் இயேசுவுடன் இணைந்து நடக்கும்போது, உங்களிடம் இம்மாலையில் மூன்று கேள்விகளை முன்வைக்கிறேன்: கடந்த ஈராண்டுகள் பிரேசில் நாட்டின் பல பகுதிகளுக்கும் இச்சிலுவையை ஏந்திச் சென்ற இளையோரே, நீங்கள் இச்சிலுவையின் மீது விட்டுச் சென்றவை எவை? கிறிஸ்துவின் சிலுவை உங்கள் ஒவ்வொரிடமும் எதைக் கொடுத்துள்ளது? இறுதியாக, இச்சிலுவை நமக்குக் கற்றுத்தருவது என்ன?

1. உரோமையப் பாரம்பரியத்தின்படி, நீரோ மன்னரின் கொடுமைகளுக்குப் பயந்து, புனித பேதுரு உரோம் நகரைவிட்டு ஓடிக்கொண்டிருந்தபோது, இயேசு அவருக்கு எதிரான திசையில் செல்வதை பேதுரு பார்த்தார். அவர் இயேசுவிடம், "ஆண்டவரே, நீர் எங்கு செல்கிறீர்?" என்று கேட்க, இயேசு அவருக்கு மறுமொழியாக, "நான் உரோம் நகரில் மீண்டும் அறையப்படுவதற்குச் செல்கிறேன்" என்று சொன்னார். ஆண்டவரைத் தொடர்வதில் இறுதிவரை உறுதியாக இருக்கவேண்டும் என்பதை புனித பேதுரு அத்தருணத்தில் உணர்ந்தார். அப்பயணத்தில் தான் தனித்து விடப்படப் போவதில்லை, இயேசு தன்னுடன் இருப்பார் என்பதையும் அவர் உணர்ந்தார்.
RealAudioMP3 தன் சிலுவையைச் சுமந்து, நம்முடன் துணைவரும் இயேசு, நம் மனதின் ஆழத்தில் புதைந்துள்ள அச்சங்கள், பிரச்சனைகள், துன்பங்கள் அனைத்தையும் தன் தோள்மீது சுமந்து, நம்முடன் நடக்கிறார். குரல் எழுப்ப முடியாதவாறு மௌனமாக்கப்பட்டு, வன்முறைகளுக்கு உள்ளாகும் அப்பாவி மனிதர்களுடன் இயேசு தன் சிலுவையுடன் ஒன்றிக்கிறார். தங்கள் குழந்தைகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுடன் இணைகிறார். இவ்வாண்டின் துவக்கத்தில், (பிரேசில் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள) Santa Mariaவில் (இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில்) உயிரிழந்த 242 பேரை நினைவு கூருகிறோம். அவர்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்வோம். போதைப் பொருள் போன்ற செயற்கையான விண்ணகங்களை நம்பி துன்புறுவோருடன் இயேசு தன் சிலுவை வழியாக இணைகிறார். ஒவ்வொரு நாளும் பெருமளவில் குப்பைகளில் உணவு கொட்டப்படும் இவ்வுலகில், பசியால் வாடும் ஒவ்வொருவருடனும் சிலுவையில் அறையப்பட்டுள்ள இயேசு இணைகிறார். தங்கள் மதத்திற்காக, நம்பும் கொள்கைகளுக்காக, அல்லது தங்கள் தோல் நிறத்திற்காக துன்புறுத்தப்படுவோருடன் சிலுவையில் அறையப்பட்டுள்ள இயேசு இணைகிறார். தன்னலத்தையும், ஊழலையும் மட்டுமே காண்பதால், அரசியல் அமைப்புக்களில் நம்பிக்கை இழந்துள்ள இளையோருடன் இயேசு இணைகிறார். கிறிஸ்தவர்களிடமும், நற்செய்திப் பணியாளர்களிடமும் காணப்படும் எதிர் சாட்சிய வாழ்வைக் கண்டு, திருஅவை மீதும், ஏன்? கடவுளின் மீதும் நம்பிக்கை இழந்துள்ள இளையோருடன் இயேசு இணைகிறார்.
நம்முடைய பாவங்களையும் சேர்த்து, மனிதகுலத்தின் பாவத்தையும், துயரத்தையும் கிறிஸ்துவின் சிலுவை தாங்குகிறது. விரிந்த தன் கரங்களுடன் இவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, நம்மிடம் இயேசு சொல்கிறார்: "துணிவு கொள்ளுங்கள்! உங்கள் சிலுவையை நீங்கள் தனியே சுமப்பதில்லை! நானும் உடன் சுமக்கிறேன். நான் சாவை வென்றுவிட்டேன். உங்களுக்கு நம்பிக்கையையும், வாழ்வையும் தர நான் வந்துள்ளேன்" (காண்க. யோவான் 3:16)

2. எனவே, நாம் இரண்டாவது கேள்விக்கு பதில் சொல்ல முடியும். சிலுவையை நோக்கிப் பார்த்து, அதைத் தொட்டதால் நாம் எதைப் பெற்றுக்கொண்டோம்? சிலுவை நம் ஒவ்வொருவரிடமும் எதைக் கொடுத்துள்ளது? வேறு யாரும் தரமுடியாத அரிய கருவூலத்தை, சிலுவை நமக்குத் தரமுடியும். நம் ஒவ்வொருவர் மீதும் இறைவன் கொண்டுள்ள அசைக்கமுடியாத அன்பு அது. நம் பாவங்களுக்குள் நுழைந்து மன்னிக்கவும், நம் துயரங்களுக்குள் நுழைந்து, அவற்றைத் தாங்கும் வலிமையை நமக்குத் தரவும் சக்தி வாய்ந்தது இவ்வன்பு. சாவினுள் நுழைந்து வாழ்வு தருவது இவ்வன்பு. இறைவனின் அளவற்ற கருணை அனைத்தையும் தாங்கி நிற்பது கிறிஸ்துவின் சிலுவை. இந்த அன்பை நாம் முழுமையாக நம்பமுடியும்.
என் அன்புக்குரிய இளையோரே, இயேசுவிடம் நம்மை முழுமையாக ஒப்படைப்போம் (காண்க - Lumen Fidei - விசுவாச ஒளி 16). அறையப்பட்டு, உயிர்த்த கிறிஸ்துவில் மட்டுமே நமது மீட்பைக் கண்டடைய முடியும். அவருடன் இருக்கும்போது, தீமை, துன்பம், சாவு ஆகியவற்றிற்கு இறுதி வெற்றி இல்லை. வெறுப்பு, தோல்வி, சாவு ஆகியவற்றின் அடையாளமாக விளங்கிய சிலுவையை அன்பு, வெற்றி, வாழ்வு ஆகியவற்றின் அடையாளமாக கிறிஸ்து மாற்றிவிட்டார்.
'திருச்சிலுவையின் நாடு' என்பதே பிரேசில் நாட்டுக்கு வழங்கப்பட்ட முதல் பெயர். ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர், சிலுவை, இந்நாட்டின் மண்ணில் மட்டும் ஊன்றப்படவில்லை, மாறாக, மக்களின் வாழ்விலும், மனங்களிலும், இந்நாட்டு வரலாற்றிலும் சிலுவை ஊன்றப்பட்டது. கிறிஸ்துவின் துன்பம் நமது பயணத்தின் இறுதிவரை துணைவரும் என்பது இந்நாட்டில் ஆழமாக உணரப்படுகிறது. சிறிதோ, பெரிதோ... ஆண்டவர் பங்கேற்காத சிலுவைகள் நம் வாழ்வில் இல்லை.

3. இறை அன்பினால் ஆட்கொள்ளப்படுவதற்கு நாம் அனுமதி தர வேண்டும் என்ற அழைப்பை கிறிஸ்துவின் சிலுவை நமக்கு விடுக்கிறது. துன்புறுவோரை கனிவுடன் கண்ணோக்கி, அவர்களை ஊக்கப்படுத்தும் வார்த்தையை, செயலைக் காட்டும்படி நம்மை அழைக்கிறது. நாம், நமது என்ற எல்லையைத் தாண்டி, பிறருக்கு உதவிக்கரம் நீட்ட நம்மைத் தூண்டுகிறது.
கல்வாரி நோக்கி இயேசு சென்றபோது, எத்தனை பேர் அவருடன் இருந்தனர்? பிலாத்து, சீரேன் ஊரைச் சேர்ந்த சீமோன், மரியா, பெண்கள்... கூட்டத்திற்கு எதிராகச் சென்று, இயேசுவின் வாழ்வைக் காப்பதற்குப் பதில், கைகளைக் கழுவிய பிலாத்துவைப் போல் சிலசமயங்களில் நாம் இருக்க முடியும்.
அன்பு நண்பர்களே, இயேசுவின் சிலுவையைச் சுமக்க உதவி செய்த சீரேன் ஊர் சீமோனைப் போல நாம் இருக்கவேண்டும் என்று கிறிஸ்துவின் சிலுவை கற்றுத் தருகிறது. கிறிஸ்துவுடன் இறுதிவரை துணிவோடு சென்ற மரியாவைப் போல், மற்ற பெண்களைப் போல் நாம் இருக்கவேண்டும் என்று கற்றுத் தருகிறது. நீங்கள் யாரைப் போல் இருக்கிறீர்கள்? பிலாத்துவைப் போலவா? சீரேன் ஊர் சீமோனைப் போலவா? மரியாவைப் போலவா? இதோ, இயேசு உங்களை நோக்கிக் கேட்கிறார்: எனது சிலுவையைச் சுமக்க உதவி செய்கிறீர்களா? உங்கள் இளைமைச் சக்தியனைத்தையும் திரட்டி, என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

அன்பு நண்பர்களே,
கிறிஸ்துவின் சிலுவைக்கு நமது மகிழ்வுகள், துன்பங்கள், தோல்விகள் அனைத்தையும் கொணர்வோம். அங்கு ஓர் இதயத்தைக் காண்போம்... நமக்காகத் திறந்திருக்கும் இதயம் அது. நம்மைப் புரிந்துகொண்ட, மன்னிக்கும், அன்புகூரும் இதயம் அது. இந்த அன்பினை நமது சகோதர சகோதரிகளுக்கு வழங்குவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.