2013-07-27 16:53:09

கோவில்கள், பங்குத்தளங்கள் ஆகிய வட்டங்களை விட்டு, சமுதாயத்தின் ஓரத்தில் இருப்போரைத் தேடிச் செல்லவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூலை,27,2013. ஜூலை 27, இச்சனிக்கிழமை காலை 9 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள வந்திருந்த அனைத்து ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர் அனைவரோடும் ரியோ தெ ஜனெய்ரோ நகர் பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றினார். அப்போது அவர் வழங்கிய மறையுரை இது:

RealAudioMP3 நம் அழைத்தலின் மூன்று அம்சங்களை உங்களோடு இணைந்து சிந்திக்க விழைகிறேன். நாம் இறைவனால் அழைக்கப்பட்டுள்ளோம்; நற்செய்தியை பறைசாற்ற அழைக்கப்பட்டுள்ளோம்; சந்திக்கும் கலாச்சாரத்தை வளர்க்க அழைக்கப்பட்டுள்ளோம்.

1. இறைவனால் அழைக்கப்பட்டுள்ளோம் - நாம் இயேசுவுடன் இருப்பதற்கு (காண்க - மாற்கு 3:14), இறைவனால் அழைக்கப்பட்டுள்ளோம். இந்த ஒன்றிப்பு எவ்வளவு ஆழமானது என்றால், "இனி வாழ்பவன் நான் அல்ல: கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்" (கலாத்தியர் 2:20) என்று புனித பவுலுடன் இணைந்து நாமும் சொல்ல முடியும். நமது அழைப்பு வாழ்வும் பணியும் திறம்பட அமைவதற்கு நாம் மேற்கொள்ளும் திட்டங்களும் செயல்பாடுகளும் உறுதி அளிப்பதில்லை, நாம் கிறிஸ்துவுடன் எவ்வளவு தூரம் ஒன்றித்திருக்கிறோம் என்பது மட்டுமே இந்த உறுதியை அளிக்கும். இதன் பொருள் என்ன என்பதை நாம் நன்கு அறிவோம்: அதாவது, செபத்தில் வேரூன்றி, ஒவ்வொரு நாளும் இறைவனைத் சந்திக்கும் வாழ்வே நமது பணியையும் வாழ்வையும் திறம்பட அமைக்கும்.
கிறிஸ்துவுடன் ஒன்றித்திருப்பது, பிறரிடமிருந்து நம்மைத் தனிமைப்படுத்துவதில்லை. முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா சொன்னதுபோல, "ஏழைகளிடம் கிறிஸ்துவைக் கண்டு பணிபுரிய வாய்ப்பு தந்துள்ள நமது துறவற அழைப்பில் நாம் பெருமிதம் கொள்ளவேண்டும்."

2. நற்செய்தியை பறைசாற்ற அழைக்கப்பட்டுள்ளோம் - உங்களில் பலர் இந்த உலக இளையோர் நாள் நிகழ்வுகளுக்கு வந்திருக்கும் இளையோருடன் துணை வந்திருக்கிறீர்கள். 'நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்' என்ற இயேசுவின் அழைப்பு, இந்த இளையோரையும் அடைந்துள்ளது. மறைபரப்புப் பணி ஆற்றும் இந்த ஆவலை இவர்கள் மனதில் வளர்ப்பது நம் கடமை. மறைபரப்புப் பணி என்றதும், தங்கள் சொந்த நாட்டையும் வீட்டையும் விட்டு புறப்பட வேண்டும் என்ற தயக்கம் எழலாம். நாம் இளம் வயதில் இருந்தபோது, ஜப்பானுக்குச் சென்று மறைபரப்புப் பணியைச் செய்ய கனவு கண்டேன். ஆயினும், என் நாட்டிலேயே நான் அப்பணியைச் செய்ய முடியும் என்பதை இறைவன் எனக்கு உணர்த்தினார். ஒவ்வொரு இளையோரும் அவர்கள் வாழும் இல்லங்களில், பகுதிகளில் மறைபரப்புப் பணியைச் செய்ய அழைக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர்கள் அறியச் செய்வது நமது கடமை.
தங்கள் உலகத்திலிருந்து வெளியேறி நற்செய்தியைப் பரப்பும் ஆவலில் நமது இளையோரை வளர்ப்போம். நாமும், நமது கோவில்கள், பங்குத் தளங்கள் ஆகிய வட்டங்களை விட்டு, சமுதாயத்தின் ஓரத்தில் இருப்போரைத் தேடிச் செல்லவேண்டும். கோவிலுக்கு வராமல் இருக்கும் மக்களை நாம் முதலில் தேடிச் சென்று அவர்களையும் இறைவனின் விருந்துக்கு அழைத்து வருவோம்.

3. சந்திக்கும் கலாச்சாரத்தை வளர்க்க அழைக்கப்பட்டுள்ளோம் - மற்றவர்களை ஒதுக்குதல், புறக்கணித்தல் என்ற போக்கில் நமது கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. வயது முதிர்ந்தோர், தேவையற்ற குழந்தைகள் ஆகியோருக்கு சமுதாயத்தில் இடம் இல்லாமல் போகிறது. வீதியோரங்களில் வாழ்வோருக்கு நேரம் ஒதுக்க முடியாமல் இந்தச் சமுதாயம் இருக்கிறது. திறமை, பயனுள்ளவை என்ற இரு அளவுகோல்கள் வழியே நமது மனித உறவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. வெள்ளமேனச் செல்லும் இந்த உலகப் போக்கிற்கு எதிராகச் செல்ல நாம் துணிவு பெறவேண்டும். ஒவ்வொருவரையும் சந்திப்பது, வரவேற்பது, ஒருங்கிணைப்பது என்ற கலாச்சாரத்தை வளர்க்க முயல்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.