2013-07-26 15:36:47

திருத்தந்தை பிரான்சிஸ் - நாம் கிறிஸ்துவை அணிந்துகொண்டால் ஏமாற்றம் அடைய முடியாது


ஜூலை,26,2013. Copacabana கடற்கரையில் கூடியிருந்த இளையோருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரை:
இயேசு தோற்றம் மாறியதைக் கண்ட பேதுரு, "நாம் இங்கேயே இருப்பது நல்லது" என்று மகிழ்வுடன் கூறியதைப் போல நமக்கும் சொல்லத் தோன்றுகிறது. கிறிஸ்து நம்மை வரவேற்று, நம்மிடையே இங்கு தங்கியுள்ளார். "இவரே என் மைந்தர்; நான் தேர்ந்துகொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்" (லூக்கா 9:35) என்று அன்று தந்தையாம் இறைவன் சொன்னதைப் போல நமக்கும் சொல்கிறார்.
நாம் என்ன செய்யமுடியும்? இந்த உலக இளையோர் நாள் நிகழ்வையொட்டி, பிரேசில் நாடெங்கும் "நம்பிக்கையை அணிந்துகொள்ளுங்கள்" என்ற வார்த்தைகளைத் தாங்கிய சிலுவையை நாம் ஊர்வலமாகக் கொணர்ந்தோம். "நம்பிக்கையை அணிந்துகொள்ளுங்கள்" என்பதன் பொருள் என்ன? அணிதல், அல்லது இடுதல் என்பதை உணவோடு ஒப்பிடுவோம். உணவுக்குச் சுவை சேர்க்க, அதில் உப்பை இடுகிறோம், எண்ணெயை இடுகிறோம். அதேபோல், வாழ்வுக்குச் சுவை சேர்க்க நாம் நம்பிக்கையை, எதிர்நோக்கை, அன்பை இடவேண்டும், அணிய வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக நான் உங்களிடம் வலியுறுத்திக் கூறுவது இதுதான்: 'கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்'.
உங்களிடம் ஒன்றை உண்மையாகக் கேட்க விழைகிறேன்: நாம் யாரிடம் அல்லது எதனிடம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்? நம்மிடமா, நம்மிடம் உள்ள பொருட்களிடமா? அல்லது கிறிஸ்துவிடமா? நம்மை மையப்படுத்தி, நம்மைச் சுற்றி பொருட்களைக் குவிக்கும்போது நாம் மகிழ்கிறோம். அந்த மகிழ்ச்சி நிரந்தரம் அல்ல, விரைவில் ஏமாற்றம் அடைகிறோம். பொருட்களை, செல்வங்களை நாம் வைத்திருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில், அவை நம்மை வைத்துள்ளன. அந்த அளவு நாம் அவற்றிற்கு அடிமையாகி விடுகிறோம். இதற்குப் பதிலாக, நாம் கிறிஸ்துவைப் பெற்றிருந்தால், அவரை அணிந்துகொண்டால் ஏமாற்றம் அடைய முடியாது.
என் அன்பு இளையோரே, கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள். குறிப்பாக, இந்த இளையோர் நாள் நிகழ்வுகளின்போது, இறைவார்த்தை வழியாக வரும் கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள். ஒப்புரவு அருள் சாதனத்தில் உங்களுக்காகக் காத்திருக்கும் கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள். இறைவனிடம் மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள். மன்னிப்பதில் அவர் எப்போதும் சலிப்படைவதில்லை, மன்னிப்பு கேட்பதில்தான் நாம் சலிப்படைந்துவிடுகிறோம். திருப்பலியிலும், திருநற்கருணையிலும் தன்னைப் பகிர்ந்துகொள்ளக் காத்திருக்கும் கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்.
உங்களை நம்பிக்கை வாழ்வில் உறுதிப்படுத்தும் பல இளையோரின் வழியாக கிறிஸ்து உங்களைச் சந்திக்கக் காத்திருக்கிறார். தங்கள் நம்பிக்கை வாழ்வாலும், அன்பு, நன்மை, சேவை என்ற மொழியாலும் உங்களை உற்சாகப்படுத்தும் இளையோரின் வழியாக கிறிஸ்து உங்களை வந்தடைகிறார்.
"நாம் இங்கேயே இருப்பது நல்லது." கிறிஸ்துவை நம் வாழ்வில் அணிந்துகொள்வோம், அவர் தரும் நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகியவற்றை அணிந்து கொள்வோம். இந்த இளையோர் நாள் நிகழ்வுகளுக்கு Aparecida அன்னை மரியாவை நம் மத்தியில் வரவேற்றுள்ளோம். அன்னைமரியாவின் துணையோடு நாம் சீடர்களாக, மறைபரப்புப் பணியாளர்களாகத் திகழ்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.