2013-07-25 16:25:15

திருத்தந்தையின் முதல் வெளிநாட்டுத் திருப்பயணம் – பிரேசிலின் ரியோ தெ ஜெனெய்ரோவில் திருத்தந்தை


ஜூலை,25, 2013. “இறைவன் நமக்கு எப்போதும் மிகச் சிறந்தவைகளையே செய்கிறார். அவர் செயல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவர் நம்மில் செயலாற்றுகின்றார். வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், இறைவன் மீதான நம்பிக்கையை மட்டும் ஒருபோதும் இழக்காதீர்கள், ஏனெனில் அவர் எப்போதும் உங்கள் பக்கம் இருக்கிறார், அவர் ஒருபோதும் உங்களைக் கைவிடுவதில்லை” எனப் பிரேசில் மக்களிடம் சொல்லி, 28வது உலக இளையோர் தினத்தையும், சிறப்பாக, தனது பாப்பிறைப் பணியையும் Aparecida அன்னைமரியிடம் அர்ப்பணித்து பிரேசில் நாட்டுக்கான தனது திருப்பயணத்தை நடத்தி வருகிறார் நம் திருத்தந்தை பிரான்சிஸ். பிரேசிலின் பாதுகாவலரான Aparecida அன்னைமரி, அதாவது தோன்றிய அன்னைமரி திருத்தலத்தில் இப்புதனன்று திருப்பலி நிகழ்த்தியபோது இவ்வாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். மழையையும், குளிரையும் புறந்தள்ளி, தங்களது இலத்தீன் அமெரிக்க மகனைப் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் முந்திய நாளே Aparecida அன்னைமரி திருத்தலம் வந்திருந்தனர். இத்திருத்தலத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். இத்திருத்தலத்தில் நிகழ்த்திய திருப்பலிக்குப் பின்னர் பால்கனி சென்று திருப்பயணிகளை இஸ்பானிய மொழியில் வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனைவருக்கும் ஓர் இனிப்புச் செய்தியையும் சொன்னார்.
RealAudioMP3 என் அன்புச் சகோதர சகோதரிகளே, எனக்குப் போர்த்துக்கீசிய மொழி தெரியாது. எனவே இஸ்பானியத்தில் பேசுகிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள். உங்கள் எல்லாருக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள். உங்களையும், உங்கள் குடும்பங்களையும், உங்கள் பிள்ளைகளையும், உங்கள் தந்தை நாட்டையும் எல்லாரையும் நமது Aparecida அன்னை ஆசீர்வதிப்பாராக. ஒரு தாய் தனது பிள்ளைகளை மறக்க முடியுமா. அத்தாய் நம்மைப் பாதுகாக்கிறார். எனக்காகச் செபியுங்கள். எனக்குச் செபம் தேவைப்படுகின்றது. எனக்காகச் செபியுங்கள். 2017ம் ஆண்டில் Aparecida அன்னைமரி திருத்தலத்துக்குத் திரும்பி வருவேன். மீண்டும் சந்திப்போம் எனத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொன்னவுடன், அடேயப்பா, அந்த இடமே மகிழ்ச்சி ஆரவாரத்தால் அதிர்ந்தது. Aparecida அன்னைமரி RealAudioMP3 Paraiba ஆற்றில் மூன்று மீனவர்களுக்குத் தோன்றிய 300ம் ஆண்டு 2017ம் ஆண்டில் சிறப்பிக்கப்படுகின்றது. அத்துடன், போர்த்துக்கல் நாட்டின் பாத்திமாவில் மூன்று சிறாருக்கு அன்னைமரி காட்சி கொடுத்ததன் நூறாம் ஆண்டும் 2017ம் ஆண்டில் சிறப்பிக்கப்படுகின்றது. எனவே அவ்வாண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்விரு திருத்தலங்களுக்கும் செல்லக்கூடும் எனத் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி நிருபர் கூட்டத்தில் அறிவித்தார். மேலும், முஸ்லீம் மத குரு ஒருவர், யூதமத ராபி ஒருவர், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை பிரதிநிதிகள் குழு ஆகியோர் இத்திருப்பலியில் கலந்து கொண்டது கிறிஸ்தவ ஒன்றிப்புணர்வையும் பிற சமயத்தவருடன் கொண்டுள்ள உறவையும் காட்டியது எனவும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார். திருத்தந்தை இப்பிரதிநிதிகளைத் தனித்தனியாகக் கைகுலுக்கி வாழ்த்தினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அன்னைமரிமீது கொண்டிருக்கும் அளவற்ற பக்தியை Aparecida அன்னைமரி திருத்தலத்தில் மிகத் தெளிவாக உணர முடிந்தது என எமது நிருபர்கள் கூறுகின்றனர். தனது பாப்பிறைப் பணியில் மேற்கொள்ளும் இந்த முதல் வெளிநாட்டுத் திருப்பயணத்தை அன்னைமரியின் பாதுகாவலில் வைத்துத் தொடங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். அவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்ச் 13ம் தேதிக்கு அடுத்த நாள் காலையில் உரோம் புனித மேரி மேஜர் பசிலிக்கா சென்று அன்னைமரியின் அருளாசீரைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்புதனன்று Aparecida அன்னைமரி திருத்தலத்தில் திருப்பலியை முடித்து, பின்னர் Aparecida நகரிலுள்ள Bom Jesus குருத்துவக் கல்லூரி சென்ற திருத்தந்தை பிரான்சிஸ், அக்குருத்துவக் கல்லூரியில் புனித Antonio de Santana Galvaoவின் பிரமாண்டமான திருவுருவத்தைத் திறந்து வைத்தார். அங்கு ஆயர்கள் மற்றும் குருத்துவ மாணவர்களுடன் மதிய உணவு அருந்திய திருத்தந்தை, அதன்பின்னர் சமையல்வேலை செய்தவர்கள், பணியிலிருந்த காவல்துறையினர், ஆயர்கள், குருத்துவ மாணவர்கள் என ஒவ்வொருவரையும் தனித்தனியாக வாழ்த்தினார். அடைபட்ட துறவு இல்லத்தில் வாழும் ஏறக்குறைய முப்பது அருள்சோதரிகளையும் ஒவ்வொருவராக வாழ்த்தினார் திருத்தந்தை. இச்சகோதரிகள் சிறகுவிரித்த பறவைகள் போல மகிழ்வுடன் ஒவ்வொருவரும் திருத்தந்தையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், ஆனந்தக் கண்ணீருடன் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் புத்தகங்களிலும் திருத்தந்தையின் கையெழுத்தைப் பெற்றனர். மொத்தத்தில் திருத்தந்தை அன்று பிற்பகலில் ஓய்வெடுக்கவே இல்லை என திருப்பீடப் பேச்சாளர் கூறினார்.
Aparecida அன்னைமரி திருத்தலத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிகழ்த்திய திருப்பலியின் தொடக்கத்தில் அவரை வரவேற்றுப் பேசிய, பிரேசில் ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Raymundo Damasceno Assis... RealAudioMP3
பிரேசிலின் முக்கியமான தேசிய சமய அடையாளமாக இருக்கும் Aparecidaவுக்குத் திருத்தந்தை வந்திருப்பது, பிரேசில் நாடு முழுவதுக்கும் வருகை தந்தது போல் இருக்கின்றது உரோம் ஆயரே இத்திருத்தலத்துக்குத் திருப்பயணம் மேற்கொண்டுள்ளது, விசுவாசத்தின் உண்மையில் உறுதிப்படுத்தியதாக அனைவரையும் உணர வைத்துள்ளது. இங்குள்ள Aparecida அன்னைமரி திருவுருவம் போன்றதொரு திருவுருவத்தை இத்திருப்பலியின் தொடக்கத்தில் தங்களுக்கு வழங்குகிறோம். ஆற்று மணல் மற்றும் மெழுகுதிரிகளின் புகையால் இத்திருவுருவம் கறுப்பு நிறத்தில் இருக்கிறது எனச் சொல்லலாம். ஆயினும், பிரேசில் வரலாற்றில் ஒதுக்கப்பட்ட மக்கள், குறிப்பாக கறுப்பினத்தவர் மற்றும் ஏழைகளின் துன்பங்களைக் குறிப்பதாக இத்திருவுருவம் இருப்பதாகவும் பொருள் கொள்ளப்படுகிறது. தங்களிடம் கொடுக்கப்ட்ட இந்த Aparecida அன்னைமரி, தங்களையும் தங்களது திருப்பணியையும் ஆசீர்வதிக்குமாறு அனைத்து பிரேசில் மக்கள் சார்பாக இறைஞ்சுகிறேன். அதேசமயம், திருத்தந்தை அவர்களும் இந்த மாபெரும் பிரேசில் நாட்டுக்காகச் செபிக்குமாறு கேட்கிறேன்
இவ்வாறு கர்தினால் Assis, திருப்பலியின் ஆரம்பத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் கேட்டுக்கொண்டார். இப்புதனன்று பிற்பகலில் Aparecidaவிலிருந்து ரியோ தெ ஜெனெய்ரோவுக்குத் திரும்பிய திருத்தந்தை, உள்ளூர் நேரம் மாலை 5.30 மணியளவில் புனித பிரான்சிஸ் அசிசி மருத்துவமனைக்குச் சென்றார். இவ்விடத்தில் மதுபானம் மற்றும் போதைப்பொருள்களுக்கு அடிமையானவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் புதுப்பகுதி ஒன்றையும் திறந்து வைத்தார். மதுபானம் மற்றும் போதைப்பொருள்களுக்கு அடிமையாகி சிகிச்சை பெற்றுவரும் இளையோரை அணைத்து முத்தமிட்டு ஆசீர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இம்மருத்துவமனையில் உரை ஒன்றும் ஆற்றினார் திருத்தந்தை. RealAudioMP3
போதைப்பொருள்களைச் சட்டரீதியாக அங்கீகரிப்பதற்கு கொலம்பியா, பொலிவியா, ஈக்குவதோர் மற்றும் பிற இலத்தீன் அமெரிக்க நாடுகள் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.