2013-07-25 15:51:28

6200க்கும் அதிகமான மைல்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள இளைஞர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சந்திப்பு


ஜூலை,25,2013. உலகின் பல நாடுகளிலும் 6200க்கும் அதிகமான மைல்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள இளைஞர் ஒருவரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்ற வாரம் வத்திக்கானில் சந்தித்தார் என்பதை அந்த இளைஞர் தற்போது ஊடகங்களுக்குக் கூறியுள்ளார்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த Leandro Martins என்ற இளைஞர், Amsterdam நகரில் துவங்கிய தன் சைக்கிள் பயணத்தை, ஆசியாவில் முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.
இப்பயணத்தின் ஒரு பகுதியாக இவர் வத்திக்கான் வந்திருந்தபோது, திருத்தந்தையைச் சந்திக்க முயற்சிகள் மேற்கொண்டதாகவும், தான் ஒரு கத்தோலிக்கர் இல்லை என்றாலும், எளிமையின் உருவமாக விளங்கும் திருத்தந்தையைச் சந்திக்க தன் ஆவலை வெளியிட்டு 15 முறை மின்னஞ்சல்களை அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.
இவரது தொடர்ந்து முயற்சிகளின் பலனாக, ஜூலை 18, கடந்த வியாழனன்று திருத்தந்தை இவரைச் சந்தித்ததாகவும், இவர் சுமந்து செல்லும் பிரேசில் நாட்டின் கொடியில் 'இறைவன் உங்களுடன் பயணத்தில் இணைவராக' என்ற சொற்களுடன் திருத்தந்தை தன் கையொப்பம் இட்டதாகவும் Matins ஊடங்களுக்குக் கூறினார்.
அருள் பணியாளர்கள் தங்களிடம் உள்ள விலையுயர்ந்த கார்களை விற்றுவிட்டு, மலிவான கார்களில் பயணம் செய்யவும், முடிந்தால் சைக்கிள்களில் பயணம் செய்யவும் திருத்தந்தை விடுத்துள்ள அழைப்பு இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : The Huffington Post








All the contents on this site are copyrighted ©.