2013-07-24 15:42:13

திருத்தந்தையின் முதல் வெளிநாட்டுத் திருப்பயணம் – பிரேசிலின் Aparecidaவில் திருத்தந்தை


ஜூலை,24,2013. நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள், உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள் என்று உயிர்த்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம் சீடர்களுக்கு ஆணையிட்டார். திருத்தந்தையர்களும் நம் ஆண்டவரின் இவ்வாணையின்படி உலகெங்கும் இருக்கின்ற கத்தோலிக்கரை அவ்வப்போது சந்தித்து அவர்களைக் விசுவாசத்தில் ஆழப்படுத்தி வருகின்றனர். இவ்வாண்டு மார்ச் மாதம் 19ம் தேதியன்று கத்தோலிக்கத் திருஅவையின் 266வது பாப்பிறையாக, அதன் தலைமைப் பணியை ஏற்ற நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வளவு குறைந்த காலத்தில், உலகினரின் மனங்களைக் எவ்வளவுதூரம் கவர்ந்துள்ளார் என்பதற்கு அவர் கலந்து கொண்டுள்ள அத்தனை பொது நிகழ்ச்சிகளுமே சான்று. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் திட்டமிட்ட இந்தப் பிரேசில் நாட்டுக்கானத் திருப்பயணத்தை மேற்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், அந்நாட்டின் ரியோ தெ ஜனெய்ரோவில் கால் பதித்த முதல் நாளே அவரைத் தொட வேண்டுமென்று துடித்த மக்கள் வெள்ளத்தைப் பார்த்து நாம் வியந்தோம். கத்தோலிக்கத் திருஅவை, வீட்டுக்குள்ளே, திருப்பூட்டறைக்குள்ளே முடங்கிக் கிடப்பதல்ல என்பதற்கு இந்நாள்களில் ரியோவில் நடந்துவரும் நிகழ்ச்சிகளே சான்று. “அன்பு இளையோரே, கிறிஸ்து உங்கள்மீது நம்பிக்கை கொண்டுள்ளார்; அவர் தமது பணியை உங்களிடம் ஒப்படைத்துள்ளார் : போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” என்று இப்புதனன்று தனது டுவிட்டரில் செய்தி வெளியிட்டு இந்நாளையத் திருப்பயண நிகழ்வுகளைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் நகரிலிருந்து நீண்டதொரு விமானப்பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், ரியோ தெ ஜனெய்ரோவின் Sumare பேராயர் இல்லத்தில் இச்செவ்வாயன்று ஓய்வெடுத்தார். ஆயினும் அந்நாளில் திருஅவைத் தலைவர்கள் சிலரையும் சந்தித்தார். இப்புதனன்று இத்திருப்பயண நிகழ்வுகளை மீண்டும் தொடங்கியுள்ளார். இப்புதன் உள்ளூர் நேரம் காலை 7.45 மணிக்கு Sumareவிலிருந்து 200 கிலோ மீட்டரில் இருக்கின்ற Aparecidaவுக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது இந்திய இலங்கை நேரம் இப்புதன் மாலை 4 மணி 15 நிமிடங்களாகும். திருத்தந்தை, Aparecidaவுக்கு கெலிகாப்டரில் செல்வதாக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அங்கு நிலவும் மோசமான காலநிலை காரணமாக, Sao Jose வரை விமானத்தில் பயணம் செய்த திருத்தந்தை, அங்கிருந்து 70 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Aparecida திருத்தலம்வரை கெலிகாப்டரில் சென்றார். பின்னர் திறந்த காரில் ஏறி அந்த வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை ஆசீர்வதித்தார். பின்னர் Aparecida திருத்தலப் பசிலிக்கா சென்றார் திருத்தந்தை. அங்கு முதலில் Aparecida பசிலிக்கா திருத்தல அதிபர் திருத்தந்தையை வரவேற்றார். அத்திருத்தலத்தின் இரண்டாவது மாடியிலுள்ள 12 திருத்தூதர்கள் அறைக்கு நேரிடையாகச் சென்றார் திருத்தந்தை. அங்குதான் Aparecida அன்னைமரியா திருவருவம் வைக்கப்பட்டுள்ளது. அவ்வன்னையிடம் தனது பாப்பிறைப் பணிக்காகச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அதன்பின்னர் Aparecida பசிலிக்கா திருத்தலத்தில் திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது இந்திய நேரம் இப்புதன் மாலை 7 மணி. இயேசு காணாவூர் திருமணத்தில் தண்ணீரை, திராட்சை இரசமாக மாற்றிய புதுமை நிகழ்வு இத்திருப்பலியின் நற்செய்தி வாசகமாகும்.
இத்திருப்பலியில் திருத்தந்தை மறையுரையும் ஆற்றினார்.
இத்திருப்பலியின் இறுதியில் Aparecida அன்னைமரியிடம் தனது பணியை அர்ப்பணித்துச் செபித்தார். இத்திருப்பலிக்குப் பின்னர் Aparecidaவின் குழந்தை இயேசு குருத்துவக் கல்லூரி மாணவர்களோடு மதிய உணவருந்துதல், பின்னர் ரியோ திரும்பி போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் பராமரிக்கும் புனித பிரான்சிஸ் மருத்துவமனை செல்லுதல், சுமாரே சென்று இரவு உணவருந்தி உறங்கச் செல்லுதல் ஆகியவை இப்புதன் திருப்பயணத் திட்டத்தில் உள்ளன.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்ற Aparecida அன்னைமரி, பிரேசில் நாட்டின் பாதுகாவலர். Aparecida பசிலிக்கா திருத்தலம், பிரேசிலின் தேசிய திருத்தலம். இது உலகிலே இரண்டாவது பெரிய திருத்தலமாகும். இவ்வன்னையின் திருவிழா அக்டோபர் 12ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது. அந்நாள், பிரேசில் நாட்டுக்குத் தேசிய விடுமுறை நாளாகும். 1717ம் ஆண்டின் அக்டோபரில், São Paulo மாநில ஆளுனருக்கு Guaratinguetá என்ற சிறிய கிராமத்தினர் பெரிய விருந்தளிக்க விரும்பினர். அதற்கு நிறைய மீன்கள் தேவைப்பட்டன. அதனால் Guaratinguetá கிராமத்தின் Domingos Garcia, Filipe Pedroso, João Alves ஆகிய மூன்று மீனவர்கள் Paraiba ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றனர். இந்த ஆற்றில் வழக்கமாக நிறைய மீன்கள் கிடைக்கும். ஆனால் அன்று அம்மீனவர்கள், 12 மணி நேரங்களாகக் கடினமாக உழைத்தனர். ஆனால் மீன்கள் ஒன்றும் அகப்படவே இல்லை. இரவும் வந்தது. அப்போது அவர்கள் வீசிய வலையில், தலையில்லாத பெண்ணின் உடலமைப்புடன் கைகளைக் கூப்பிச் செபிப்பது போன்ற ஒரு சிலையின் உடல் மட்டும் சிக்கியது. பின்னர் அவர்கள் வலைகளை வீசி அதன் தலையை எடுத்தனர். அவையிரண்டையும் சுத்தப்படுத்திப் பார்த்தபோது அது, அமலமரி அன்னையின் திருவுருவம் எனக் கண்டுபிடித்தனர். தாங்கள் கண்டுபிடித்த அவ்வன்னைக்கு, “தண்ணீரில் தோன்றிய அமலமரி” எனப் பெயரிட்டனர். அதனைச் சுருக்கமாக “Aparecida” அதாவது “தோன்றிய அன்னைமரி” என அழைத்தனர். அதற்குப் பின்னர் அவர்கள் ஆற்றில் வலைகளை வீசினர். வியக்கத்தக்க விதமாக, வலைகள் நிரம்பிவழியும் அளவுக்கு மீன்களை ஏராளமாகப் பிடித்தனர். இதுவே Aparecida அன்னைமரி நிகழ்த்திய முதல் புதுமையாகும். இம்மூன்று மீனவர்களில் ஒருவராகிய Filipe Pedroso என்பவர், அவ்விரண்டு துண்டு சிலைகளையும் தனது மனைவியிடம் கொடுத்தார். அவர் அவற்றை மெழுகால் ஒட்டவைத்தார். பின்னர் அதனைத் தங்களது குடும்பக் கோவிலில் வைத்து வழிபட்டனர். இவ்வாறு Aparecida அன்னைமரியின் புகழ் பரவத் தொடங்கியது. Aparecida அன்னைமரியின் பரிந்துரையால் இன்றும் ஏராளமான புதுமைகள் நடைபெற்று வருகின்றன.
அக்காலத்திய அடிமை வியாபாரத்தால், ஆப்ரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட கறுப்பின மக்களின் தலைமுறைகள் பிரேசிலில் வாழ்ந்து வருகின்றனர். எனவே கறுப்பு நிறத்திலுள்ள Aparecida அன்னைமரியாவை, நிற, இன வேறுபாடின்றி அனைத்து மக்களும் தங்களின் தாயாகப் போற்றி வருகின்றனர். Formula 1 ஓட்டுனர் Ayrton Sennaன் தலைக்கவசம், கால்பந்து வீரர் Ronaldo உதைத்த கால்பந்து உட்பட பல நேர்ச்சைப் பொருள்கள் Aparecida அன்னைமரியாத் திருத்தல காணிக்கை அறையில் வைக்கப்பட்டுள்ளன. தமது பாப்பிறைப் பணியை Aparecida தாயிடம் அர்ப்பணித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காக நாமும் செபிப்போம்.







All the contents on this site are copyrighted ©.