2013-07-24 15:30:07

அனைத்துச் சாலைகளும் ரியோ தெ ஜனெய்ரோ நகரை நோக்கியேச் செல்கின்றன - பேராயர் Orani João Tempesta


ஜூலை,24,2013. இந்த வாரம் முழுவதும் அனைத்துச் சாலைகளும் ரியோ தெ ஜனெய்ரோ நகரை நோக்கியேச் செல்கின்றன என்று அந்நகரின் பேராயர் Orani João Tempesta அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ரியோ தெ ஜனெய்ரோ நகரை நெருங்கியபோது, அந்நகர் பேராயரும், நகர மேயரும் செய்தியாளர்களுக்கு நடத்திய ஒரு கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளையோரும் கலந்துகொண்டனர்.
அர்ஜென்டினா நாட்டிலிருந்து வந்திருந்த Alberto Perez என்ற இளைஞர், தனது நாட்டிலிருந்து 2,174 கிலோ மீட்டர் தூரத்தை நடைபயணமாகவே கடந்து வந்ததாகவும், இங்கிருந்து திரும்பும்போது புதிய ஓர் இதயத்துடன் திரும்பும் நம்பிக்கை தனக்கு உள்ளதென்றும் கூறினார்.
Mozambique நாட்டிலிருந்து வந்திருந்த Crespim என்ற இளைஞர், தான் பகல் நேரத்தில் படிப்பதாகவும், இரவு நேரத்தில் உழைப்பதாகவும் கூறியதோடு, இந்த உலக நாளுக்கென தன் முதலாளி வழங்கியுள்ள முன் தொகைக்காக அடுத்த ஓராண்டு எவ்வித ஊதியமும் இன்றி தான் உழைக்க வேண்டும் என்றும், உலக இளையோர் நாளில் கலந்துகொள்ள இத்தகையத் தியாகம் ஏற்புடையதுதான் என்றும் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய ரியோவின் மேயர், Eduardo Paes அவர்கள், இதுவரை நிகழ்ந்த உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களைக் காட்டிலும் இது மறக்க முடியாத ஓர் அனுபவமாக இளையோருக்கு இருக்கும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார்.

ஆதாரம் Zenit








All the contents on this site are copyrighted ©.