2013-07-23 15:52:38

மனித மாண்புக்கு எதிரான இழிசெயல்கள் குறித்த விழிப்புணர்வை மக்களில் ஊட்ட கல்கத்தா பேராயர் அழைப்பு


ஜூலை,23,2013. கல்கத்தாவில் மூன்று வயது பெண்குழந்தை ஒன்று கற்பழித்துக் கொலைச்செய்யப்பட்டது குறித்து தன் வன்மையான கண்டனங்களை வெளியிட்டுள்ளார் அந்நகர் பேராயர் தாமஸ் டி சூசா.
இந்தக் கொடூரமான மனிதாபிமானமற்ற செயல் குறித்து தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளதாக உரைத்த பேராயர், மனித மாண்புக்கு எதிரான இத்தகைய இழிசெயல்கள் குறித்த விழிப்புணர்வை மக்களில் ஊட்ட திருஅவை தன்னால் ஆன அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் எனவும் உறுதியளித்தார்.
வீடற்று தெருவில் வாழும் ஒரு தம்பதியரின் இந்த மூன்று வயது குழந்தையின் மரணத்தால் துயருறும் அனைவரோடும் தன் ஒருமைப்பாட்டை தெரிவிப்பதாகவும் பேராயர் டிசூசா தெரிவித்தார்.
சனிக்கிழமையன்று காணாமற்போன இந்த 3 வயது பெண் குழந்தையின் உயிரற்ற உடல் ஞாயிறன்று காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. இக்குழந்தையின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அது கற்பழித்துக் கொலைச்செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
மக்களிடையே நல்ல மனச்சான்றை உருவாக்க அனைத்து மதங்களுடன் கத்தோலிக்க தலத்திருஅவை இணைந்து உழைக்க உள்ளதாகவும் உரைத்தார் பேராயர் டிசூசா.

ஆதாரம் : FIDES








All the contents on this site are copyrighted ©.