திருத்தந்தையின் முதல் வெளிநாட்டுத் திருப்பயணம் - பிரேசில் நாட்டில் திருத்தந்தை
ஜூலை,23,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது முதல் வெளிநாட்டு மேய்ப்புப்பணித்
திருப்பயணத்தை இத்திங்கள் உரோம் நேரம் காலை 8.45 மணிக்குத் தொடங்கினார். பிரேசில் நாட்டின்
ரியோ தெ ஜனெய்ரோவில் நடைபெறும் 28வது உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக
இத்திருப்பயணத்தைத் தொடங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பயணத்துக்கென சிறப்பாக
ஒழுங்குசெய்யப்பட்ட A330 ஆல் இத்தாலியா விமானத்தில், திருஅவைத் தலைவர்கள் மற்றும் 70க்கும்
மேற்பட்ட பல நாடுகளைச் சேர்ந்த நிருபர்களுடன் பயணம் செய்த திருத்தந்தை, இப்பயணத்தில்
நிருபர்களை ஒவ்வொருவராகச் சந்தித்துப் பேசினார். அச்சமயத்தில் இளையோர் குறித்துப் பேசியபோது,
தற்போதைய உலகின் நெருக்கடிநிலைகள் இளையோரை நன்றாக நடத்தவில்லை; வேலைசெய்யாமல் இருக்கும்
ஒரு தலைமுறையைக் கொண்டிருக்கும் ஓர் ஆபத்தில் நாம் இருக்கிறோம் என்று கூறினார். பல்வேறு
நாடுகளில் காணப்படும் வேலைவாய்ப்பற்றநிலையினால் ஏற்படும் அறநெறி மற்றும் பொருளாதாரம்
சார்ந்த கடும் விளைவுகள் குறித்தும் கோடிட்டுக் காட்டினார். ஒருவர் தனது உணவுக்காக ஊதியம்
பெறுவதன் வழியாக அவரது மாண்பு கிடைக்கிறது, இது வேலையின் மூலமே கிடைக்கிறது; எனவே நிருபர்களாகிய
நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும், இன்னும் சமுதாயத்தில் இளையோர் மற்றும் வயதானவர்களின்
நன்மைக்காக உழைக்க வேண்டும் எனவும் நிருபர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ
். இந்த நீண்ட விமானப்
பயணத்தில் தான் கடந்து சென்ற மௌரித்தானியா, அல்ஜீரியா, செனெகல், இன்னும் இத்தாலி ஆகிய
நாடுகளின் அரசுத் தலைவர்களுக்குத் தனது நல்வாழ்த்துக்களையும் ஆசீரையும் தெரிவிக்கும்
தந்திச் செய்திகளையும் அனுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் விமானத்தில் ஏறியபோது தனக்கேயுரிய எளிமையும் தாழ்மையும் நிறைந்த பாணியில் தனது
கைப்பையைத் தானே எடுத்துச்சென்றது அனைவரையும் வியப்புகலந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இத்தாலியப் பிரதமர் என்ரிக்கோ லெத்தா உட்பட இத்தாலிய அரசு அதிகாரிகள் மற்றும் திருஅவைத்
தலைவர்கள் விமான நிலையத்தில் திருத்தந்தையை வழியனுப்பி வைத்தனர். இவர்களையெல்லாம் வாழ்த்தியபோதுகூட
ஒரு கையில் பையை வைத்துக்கொண்டேதான் இருந்தார். 9,201 கிலோ மீட்டர் தூரம் விமானப் பயணம்
செய்த திருத்தந்தை, ரியோ தெ ஜனெய்ரோவின் “Galeão/Antonio Carlos Jobim” இராணுவ விமான
நிலையத்தைச் சென்றடைந்தபோது அந்நாட்டு நேரம் மாலை 3 மணி 43 நிமிடங்கள். அப்போது சிறார்
பாடகர் குழு ஒன்று பாடிக்கொண்டிருந்தது. அவர்களைக் கையசைத்து வாழ்த்தத் தவறவில்லை திருத்தந்தை.
விமானப்படிக்கட்டுக்களில் பிரேசில் அரசுத்தலைவர் Dilma Rousseff, ரியோ தெ ஜனெய்ரோ மாநில
ஆளுனர் Sergio Cabral, நகர மேயர் Eduardo Paes, என அரசு அதிகாரிகளும், தலத்திருஅவைத்
தலைவர்களும் திருத்தந்தையை வரவேற்றனர். இரு சிறார் மலர்க்கொத்துக்களைக் கொடுத்தனர். ஏறக்குறைய
15 நிமிடங்கள் இடம்பெற்ற இச்சந்திப்புக்குப் பின்னர் காரில் ஏறி, Sao Joaquim என்ற ரியோ
தெ ஜனெய்ரோ பேராயர் இல்லம் சென்றார். வாகனங்களின் நெரிசலால் 8 கிலோ மீட்டர் தூரத்தைக்
கடந்து செல்வதற்கு 44 நிமிடங்கள் எடுத்தன. பாதுகாப்புக்கென கெலிகாப்டர்கள் வட்டமிட்டுக்கொண்டிருந்தன.
சாலையின் இரு பக்கங்களிலும் மக்கள் வெள்ளம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கையசைத்துக்கொண்டே
சென்றார். ரியோ தெ ஜனெய்ரோ பேராயர் இல்லம் அடைந்த திருத்தந்தை பிரான்சிஸ், அங்கிருந்து
திறந்த காரில் Guanabara அரசு மாளிகைக்குச் சென்றார். 1853ம் ஆண்டில் கட்டத் தொடங்கப்பட்ட
Guanabara அரசு மாளிகை, 1889ம் ஆண்டில் பிரேசில் குடியரசாக அறிவிக்கப்பட்டதுவரை இளவரசர்கள்
வாழும் மாளிகையாக இருந்தது. தற்போது அம்மாளிகை தேசிய உடமையாக்கப்பட்டு அரசு அலுவலகமாக
இயங்கி வருகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் பார்த்து அவரது கையைத் தொடுவதற்காகப்
புயலென மக்கள் திரண்டு சாலைகளின் இரு பக்கங்களிலும் நின்று கொண்டிருந்தனர். மக்களை அடக்குவதற்கு
காவல்துறை பெரும்பாடுபட்டது. அப்படியிருந்தும் ஓரிடத்தில் ஒரு குழந்தையை திருத்தந்தை
முத்தமிட்டார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்த ஒரு வாரத் திருப்பயணத்துக்கென
28 ஆயிரத்துக்கு அதிகமான காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பயண நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டதற்கும் ஒரு மணிநேரம் தாமதமாகப் போய்க் கொண்டிருந்ததால்
திறந்த காரில் சென்று மக்களை வாழ்த்திய பின்னர், கெலிகாப்ட்ர் மூலம் Guanabara அரசு மாளிகை
சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு திருத்தந்தைக்கு அரச மரியாதைகளுடன் வரவேற்புகள்
வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரேசில் அரசுத்தைவர் Dilma Rousseff திருத்தந்தையை வரவேற்றுப்
பேசினார். உலகில் நிலவும் சமத்துவமற்றநிலையையும், ஏழ்மையையும் அகற்றுவதற்கு பிரேசில்
அரசும், வத்திக்கானும் சேர்ந்து உழைப்பதற்குத் திருத்தந்தையிடம் பரிந்துரைத்தார். பிரேசிலுக்கு
அருகிலுள்ள நாட்டிலிருந்து, இலத்தீன் அமெரிக்காவிலிருந்து ஒருவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதைப்
பெருமையுடன் குறிப்பிட்டார். 13 நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஐரோப்பியர் அல்லாத ஒரு திருத்தந்தையாக
இருப்பவர் திருத்தந்தை பிரான்சிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களும் பிரேசில் நாட்டுக்கானத் தனது முதல் உரையை வழங்கினார். இந்நிகழ்வில், மொசைக்கு
கலைவண்ண வேலைப்பாட்டிலான ரியோ தெ ஜனெய்ரோ நகரத்தை விளக்கும் அழகான படம் ஒன்றை, பிரேசில்
அரசுத்தலைவர் திருத்தந்தைக்கு பரிசாக அளித்தார். இந்நிகழ்வுக்குப் பின்னர், அங்கிருந்து
ஏழரை கிலோ மீட்டரில் இருக்கின்ற சுமாரே என்ற அந்நகர் பேராயரின் தனிப்பட்ட இல்லத்துக்கு
வந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வில்லம் கடல்மட்டத்திலிருந்து 400 மீட்டர் உயரத்திலுள்ளது.
அங்கிருந்து ரியோ தெ ஜனெய்ரோ மாநகரத்தை நன்றாகப் பார்க்க முடியும். இவ்வில்லத்தில் ஓய்வெடுக்கிறார்
76 வயதாகும் திருத்தந்தை பிரான்சிஸ். உரோமைக்கும் பிரேசிலுக்கும் இடையேயுள்ள நேர இடைவெளி,
நீண்ட விமானப் பயணம் ஆகியவையே இந்த ஓய்வுக்குக் காரணம். பிரேசில் நாட்டுக்கான திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களின் திருப்பயண நிகழ்வுகள் இப்புதனன்று மீண்டும் தொடங்கும். அன்னைமரியா
மீது மிகுந்த பக்தி கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், இப்புதனன்று அப்பெரிசிதா அன்னைமரியா
திருத்தலம் செல்கிறார். இவ்விடம் ரியோ டி ஜெனீரோவிலிருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில்
உள்ளது. மேலும், ரியோவில் தனக்கு அமோக வரவேற்பளித்த அதிகாரிகள் மற்றும் அனைவருக்கும்
தனது நன்றியையும் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இன்னும்,
இச்செவ்வாய் காலையில் ரியோ தெ ஜனெய்ரோவின் Corcovadoவிலுள்ள இயேசு நம் மீட்பர் திருவுருவத்தின்
முன்பாகச் செபித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உருவம் பொறித்த பதக்கத்தை இத்திருப்பயணத்தின்
நினைவாகத் திறந்து வைத்தார் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே.
இந்தியாவுக்கும் பிரேசிலுக்கும் இடைப்பட்ட கால இடைவெளி 8 மணி 30 நிமிடங்களாகும்.
இச்செவ்வாய் முதல் வருகிற ஞாயிறுவரை நடைபெறும் இவ்விளையோர் தின நிகழ்வுகள், “நீங்கள்
போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குகள்(மத்.28,19)” என்ற தலைப்பில் இடம்பெறுகின்றது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் குறிப்பிட்டதுபோல இந்த
வாரம் உலக இளையோர் வாரம். 180 நாடுகளிலிருந்து இலட்சக்கணக்கான இளையோர் ரியோ தெ ஜனெய்ரோவில்
கூடியுள்ளனர். 11 ஆயிரம் அருள்பணியாளர்களும், 1,500 ஆயர்களும், 60 கர்தினால்களும் இந்நிகழ்வுகளில்
கலந்து கொள்கின்றனர். இந்த 28வது உலக இளையோர் தின நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்கு
இலத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசுத்தலைவர்களுக்கு பிரேசில் அரசுத்தலைவர் அழைப்பு விடுத்திருக்கிறார்
என ஊடகச் செய்திகள் கூறுகின்றன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தாய்நாடான அர்ஜென்டினா
அரசுத்தலைவர் உட்பட அந்நாட்டிலிருந்து ஏறக்குறைய 45 ஆயிரம் பேர் இந்நிகழ்வுகளில் கலந்து
கொள்கின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு வாரத்
திருப்பயணத்தை மேற்கொண்டுள்ள பிரேசில் நாடு, 1500ம் ஆண்டு சனவரி 26ம் தேதி இஸ்பானியரான
Vincente Yanez Pinoz என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவர், புதிய உலகமான அமெரிக்காவைக்
கண்டுபிடித்த கிறிஸ்டோபர் கொலம்பசின் குழுவில் இருந்தவர். உலகிலே கத்தோலிக்கரை அதிகமாகக்
கொண்டுள்ள நாடான பிரேசிலில் 84.48 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். இந்நாடு, இலத்தீன் அமெரிக்காவில்
ஆதிக்கம் செலுத்தும் நாடாக மட்டுமல்லாமல், பரப்பளவிலும் பெரியதாக உள்ளது. ஏறக்குறைய 2,500
மைல் நீளத்தையும், 2,650 மைல் அகலத்தையும் கொண்டுள்ள பிரேசில், 32,18,130 சதுர மைல் பரப்பளவில்
அமைந்துள்ளது. தென் அமெரிக்காவில் சிலே நாட்டைத் தவிர, மற்ற அனைத்து நாடுகளையும் எல்லைகளாகக்
கொண்டுள்ளது பிரேசில். பெரு நாட்டின் அமேசான் காடுகளில் உற்பத்தியாகும் 2,500 மைல் நீளமுடைய
அமேசான் நதி பிரேசிலில் பாய்ந்து அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கின்றது. உலகிலுள்ள மிகப்பெரிய
அமேசான் பருவமழைக்காடுகளின் 60 விழுக்காட்டுப் பகுதி பிரேசில் நாட்டில்தான் உள்ளது. திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியிருப்பது போல, இன்று
ரியோவில் அருமையான நாள் தொடங்கப்பட்டுள்ளது. இளையோர், இயேசு கிறிஸ்துவில் தங்களின் நட்பை
ஆழப்படுத்துவதற்கு உரிய காலமாக இந்நாள்கள் அமைய நாம் அனைவரும் செபத்தால் உதவுவோம். இக்காலத்தின்
தேவைகளாகிய ஏழ்மை ஒழிப்பு, நீதியையும் மனித-ஆன்மீக வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்காக,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குரல் கொடுத்து வருகிறார் என, திருத்தந்தையோடு எல்லா
நேரங்களிலும் பயணம் செய்யும் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி
ரியோவில் நிருபர் கூட்டத்தில் கூறியிருக்கிறார். திருத்தந்தையின் இம்முயற்சிகள் வெற்றிபெற
நாமும் நமது ஒத்துழைப்பை நல்குவோம்.