2013-07-18 16:13:30

பிரேசில் நாட்டில் மேய்ப்புப்பணி பயணத்தின்போது, திறந்த காரிலேயே பயணம் செய்ய திருத்தந்தை விருப்பம்


ஜூலை,18,2013. ஜூலை 22ம் தேதி, வருகிற திங்கள் முதல் பிரேசில் நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் முதல் மேய்ப்புப்பணி பயணத்தின்போது, திறந்த காரிலேயே அவர் பயணம் செய்ய விழைவதாக அறிவித்துள்ளார்.
பொதுவாக, திருத்தந்தையர் வெளிநாடுகளில் பயணங்கள் மேற்கொள்ளும்போது, குண்டு துளைக்காத கண்ணாடிக் கூடு பொருத்தப்பட்ட காரில் பயணம் செய்வர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மக்களுடன் தொடர்பு கொள்வதை முக்கியமென்று கருதுவதால், தான் வழக்கமாக புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் பயன்படுத்தும் திறந்த காரையே பயன்படுத்த விரும்புகிறார் என்று, இப்பயணத்தின் விவரங்களை இப்புதனன்று செய்தியாளர்களுக்கு வழங்கிய திருப்பீடப் பேச்சாளர் அருள் தந்தை Federico Lombardi அவர்கள் கூறினார்.
திருத்தந்தையின் இந்த முடிவை அடுத்து, பிரேசில் அரசு தன் பாதுகாப்பு முயற்சிகளில் மாற்றங்கள் செய்யுமா என்பது தற்போது தெரியாது என்று கூறிய அருள் தந்தை லொம்பார்தி, வத்திக்கான் காவலர்கள் வழக்கம்போல் திருத்தந்தையைச் சுற்றி பாதுகாப்பு தருவர் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
2014ம் ஆண்டு நிகழவிருக்கும் உலகக் கால்பந்து போட்டி, மற்றும் 2016ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளையொட்டி பிரேசில் நாட்டில் நிலவிவரும் எதிர்ப்புப் போராட்டங்கள் திருத்தந்தையின் பயணத்தைப் பாதிக்காது என்று தாங்கள் நம்புவதாகவும் அருள் தந்தை லொம்பார்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி/AP








All the contents on this site are copyrighted ©.