2013-07-18 16:12:24

திருத்தந்தை பிரான்சிஸ் : பிறருடன் பகிர்ந்துகொள்ளவே நம்பிக்கை நமக்கு வழங்கப்பட்டுள்ளது


ஜூலை,18,2013. “இந்த நம்பிக்கை ஆண்டில் நாம் நினைவில் கொள்ளவேண்டிய ஓர் உண்மை இது: நம்மிலேயே வைத்துக்கொள்வதற்கு அல்ல, மாறாக, பிறருடன் பகிர்ந்துகொள்ளவே நம்பிக்கை நமக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிறிஸ்தவரும் திருத்தூதரே” என்ற Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று ஒன்பது மொழிகளில் வெளியிட்டார்.
மேலும், வருகிற செப்டம்பர் மாதம் 16ம் தேதி திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் மறைமாவட்டத்தின் அருள் பணியாளர்களை புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் சந்திப்பார் என்ற செய்தியை ஒரு மடல் வழியாக தெரிவித்துள்ளார் கர்தினால் Agostino Vallini.
கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னை உரோம் ஆயர் என்றே அடிக்கடி கூறிவந்துள்ளார் என்பதை, தன் மடலில் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் Vallini, செப்டம்பர் மாதம் காலை 10 மணிக்கு இச்சந்திப்பு நிகழும் என்றும் அறிவித்துள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Buenos Aires பேராயராக பணியாற்றிய வேளையில், 2008ம் ஆண்டு தன் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள் பணியாளர்களுக்கு எழுதியிருந்த மடலை உரோம் அருள் பணியாளர்களும் இச்சந்திப்பிற்கு முன்னர் வாசிக்குமாறு திருத்தந்தை விழைகிறார் என்று கூறியுள்ள கர்தினால் Vallini, அம்மடலின் பிரதி ஒன்றை அனைவருக்கும் மின்னஞ்சல் வழியே அனுப்பியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.