2013-07-18 15:28:57

கற்றனைத்தூறும்... டைனசோர்கள்


டைனசோர்கள்(Dinosaur) என்பது ஏறத்தாழ 23 கோடியே 70 இலட்சம் ஆண்டுகளுக்குமுன் முதலில் நிலத்தில் வெளிப்பட்டு, 13 கோடியே 50 இலட்சம் ஆண்டுகள்வரை முழுஆற்றலுடன் வாழ்ந்துவந்த முதுகெலும்புள்ள விலங்கினங்களைக் குறிக்கும். ரிச்சர்டு ஓவன் (Richard Owen) என்னும் பிரித்தானிய தொல்லுயிரியல் ஆய்வாளர், 1842ம் ஆண்டில் இவற்றுக்கு இப்பெயரை இட்டார். இந்த இராட்சத உயிரினங்கள் வாழ்ந்த காலத்தில் எத்தனை வியப்பூட்டும் பெரிய விலங்காக இருந்திருக்கும் என்று வியந்து, கொடும்பெரும்பல்லி என்று பொருள்படும் டயனசோர் என இவர் பெயரிட்டார் எனச் சொல்லப்படுகின்றது. டைனசோர்கள் ஏறக்குறைய 6 கோடியே 50 இலட்சம் ஆண்டுகளுக்கும்முன் ஒரு பேரழிவு காரணமாக முற்றிலுமாய் அழிந்துபோனதாகச் சொல்லப்படுகின்றது. டைனசோர்களில் ஏறக்குறைய 3,400 வகை இனங்கள் இருந்ததாக முந்தைய ஆய்வுகள் கூறினாலும், 2008ம் ஆண்டில் வெளியான ஆய்வில், 1047 வகை இனங்கள் பெயரோடு வெளியிடப்பட்டன. இவற்றில் பறக்கவல்ல ஒருசில இனங்களும் இருந்தன. டைனசோர்களில் சில இனங்கள் மரஞ்செடி கொடிகளையும், இன்னும் சில, மாமிசத்தையும் உண்பவைகளாக இருந்தன. டைனசோர்களில் சில இருகால்களில் நடப்பனவாகவும், சில நான்கு கால்களில் நடப்பனவாகவும், அம்மோசோரஸ் இகுவானடோன் போன்ற சில டைனசோர்கள் தேவைக்கேற்றால்போல இருகால்களிலும் அல்லது நான்கு கால்களிலும் நடப்பனவாயும் இருந்தன. வரலாற்றுக்கு முந்தைய டைனசோர்களில் பல, பெரிய உடம்பைக் கொண்டதாய், 58 மீட்டர் நீளத்தையும், 9.25 மீட்டர் உயரத்தையும் கொண்டிருந்தன. பெரும்பாலான டைனசோர்களின் சராசரி எடை 500 கிலோ கிராம் எனக் கணக்கிட்டுள்ளனர். தற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆய்வாளர்கள், 2,500 கிலோ எடை கொண்ட இந்த இராட்சத டைனோசோரின் புதிய இனம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். ட்ரைசெர்ராடாப்ஸ் (Triceratops) பிரிவைச் சேர்ந்த இந்த டைனசோர், ஐந்து மீட்டர் நீளம்வரை வளரக் கூடியதாகவும், மிகப்பெரிய மூக்கையும் அளவுக்கதிகமான நீளம் கொண்ட கொம்பையும் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இராட்சத விலங்கினம் ஏழரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்திருந்தவை என Utah பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லுயிரியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த விலங்கினத்துக்கு Nasutoceratops titusi என்று பெயரிடப்படுள்ளது. வித்தியாசமான உடல் அமைப்புடன் பார்ப்பதற்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு விலங்கினமாக இது இருக்கிறது என்றாலும் இது ஒரு தாவர-உண்ணி விலங்குதான். இது, மற்ற டைனசோர்களைப் பயமூட்டிய ஒரு விலங்கல்ல என்றும், மாறாக சுற்றியுள்ள சதுப்பு நிலக் காடுகளின் செடிகொடிகளில் தங்கியிருந்த ஒரு விலங்கு என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
டைனோஸ் என்றால் “கொடிய” “அச்சமூட்டும்”, “பெரிய” என்று பொருள்படும்; சோரா என்றால் “பல்லி”, “ஊர்வன” என்று பொருள்படும். எனவே டைனசோர்களை, கொடும்பல்லி அல்லது கொடிய ஊர்வன என்றும் சொல்லலாம். டைனசோர்கள் வாழத்தொடங்கிய காலத்திற்கு சற்று முன்னர்வரை பூமி உருண்டையில் ஒரேயொரு தரைப்பகுதிதான் பெரிய கண்டமாக இருந்ததென்றும், அதனை முழுவதுமாய்ச் சூழ்ந்து ஒரேயொரு பெருங்கடல் மட்டும்தான் இருந்ததென்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நிலப்பகுதிகள் கண்டங்களாகப் பிரிந்து நகரத் தொடங்கியபொழுது, இயற்கையாக அமைந்த நிலப்பாலங்கள்வழி இவை அன்றிருந்த தரைநிலம் முழுவதும் திரிந்தன. டைனசோர்கள் வாழ்ந்த அதேகாலத்தில் முதலைகளும், தவளைகளும், பல்லிகளும், ஆமைகளும், நத்தைகளும், பூச்சிகளும் வாழ்ந்திருந்தன. கடலில் கிளிஞ்சலுயிரி, கணவாய் வகைகள் (squids), இளகிநீரிகள் (jelleyfish), நட்சத்திர மீன்கள், சுறா மீன்கள், பிற மீன் இனங்கள், இன்று மறைந்துவிட்ட கடலில்வாழ்ந்த இச்தியோசோர், பிளெசியோசோர், ஊர்வன உடலமைப்புகொண்ட வௌவால் போன்ற இறக்கைகள் கொண்ட இப்டெரோசோர் மட்டுமல்லாமல் சிறிய எலி அளவிலான பாலூட்டி வகைகளும் வாழ்ந்தன.

ஆதாரம் : விக்கிப்பீடியா / ஊடகங்கள்








All the contents on this site are copyrighted ©.