2013-07-18 16:16:47

உணவுப் பாதுகாப்பு குறித்த சட்டவரைவுகள் தகுந்த முறையில் விவாதிக்கப்படவேண்டும், இந்திய ஆயர் பேரவை வேண்டுகோள்


ஜூலை,18,2013. அடுத்துவரும் சில வாரங்களில் இந்திய பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவிருக்கும் உணவுப் பாதுகாப்பு குறித்த சட்டவரைவுகள் தகுந்த முறையில் விவாதிக்கப்படவேண்டும் என்று இந்திய ஆயர் பேரவையின் அதிகாரி ஒருவர் கூறினார்.
பீகார் மாநிலத்தில் கலப்படம் செய்யப்பட்ட, கெட்டுப்போன உணவை உண்டதால் 22 குழந்தைகள் பலியானதைக் குறித்து Fides செய்தியிடம் தன் கருத்தை வெளியிட்ட இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி, முன்னேற்ற பணிக்குழுவின் செயலர் அருள் பணியாளர் சார்லஸ் இருதயம் இவ்வாறு கூறினார்.
பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் கலந்திருந்த நச்சுப் பொருள்களால் 10 வயதுக்குட்பட்ட 22 குழந்தைகள் பீகார் மாநிலத்தில் இறந்தது குறித்து ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்த அருள் பணியாளர் இருதயம் அவர்கள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்வது அரசின் தலையாயக் கடமை என்று எடுத்துரைத்தார்.
இந்தியாவில் கத்தோலிக்க திருஅவையால் நடத்தப்படும் பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவைக் குறித்து மிகுந்த கவனம் தேவைப்படுகிறது என்பதை இந்தத் துயர நிகழ்வு நமக்குச் சொல்லித் தருகிறது என்று அருள் பணியாளர் இருதயம் மேலும் கூறினார்.
உணவு பாதுகாப்புச் சட்டம் என்று இந்தியப் பாராளுமன்றம் மேற்கொண்டுள்ள முயற்சியை இந்திய கத்தோலிக்கத் திருஅவை முற்றிலும் ஆதரிக்கிறது என்பதையும் அருள் பணியாளர் இருதயம் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.