2013-07-16 15:22:17

ரியோ டி ஜெனீரோ திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றது


ஜூலை,16,2013. அனைத்துலக கத்தோலிக்க இளையோர் தின நிகழ்வுக்காகப் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவுக்கும், Aparecida மரியா தேசிய திருத்தலத்துக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்லவிருப்பது மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கப்படுவதாக Aparecida உயர்மறைமாவட்ட பேராயர் கர்தினால் Raymundo Damasceno Assis கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Aparecida மரியா திருத்தலத்துக்குச் செல்லவிருப்பது குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த கர்தினால் Damasceno, கடந்த வாரத்தில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து இத்திருப்பயணம் குறித்துப் பேசியதை விளக்கினார்.
இம்மாதம் 24ம் தேதி காலை 10 மணியளவில் Aparecida மரியா திருத்தலத்துக்குச் செல்லவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ், அப்பசிலிக்காவில் திருப்பலி நிகழ்த்துவார், பின்னர் அப்பசிலிக்கா வளாகத்தில் மக்களைச் சந்திப்பார், பிற்பகலில் குருத்துவ மாணவர்களையும், அடைப்பட்ட துறவு இல்லச் சகோதரிகளையும் சந்திப்பார் என்று கூறினார் கர்தினால் Damasceno.
ரியோ டி ஜெனீரோவில் இம்மாதம் 23 முதல் 28 வரை நடைபெறவிருக்கும் அனைத்துலக இளையோர் தின நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு 3 இலட்சத்து 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஏற்கனவே தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாமலே பலர் இதில் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
6,500 நிருபர்கள் இவ்விளையோர் தின நிகழ்வுகள் குறித்து செய்திகளை வெளியிடுவார்கள் எனவும், 7,000 வெளிநாட்டவர் உட்பட 60 ஆயிரம் தன்னார்வப் பணியாளர்களும் பணியில் இருப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.