2013-07-16 15:23:13

தெற்கு ஆசியாவில் மனித வியாபாரத்துக்குப் பலியாகும் ஒரு இலட்சம் பெண்களைப் பாதுகாப்பதற்கு ஐ.நா. புதிய திட்டம்


ஜூலை,16,2013. தெற்கு ஆசியாவில் மனித வியாபாரத்துக்குப் பலியாகும் ஒரு இலட்சம் சிறுமிகள் மற்றும் பெண்களை, அதிலிருந்து காப்பாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தொழில் நிறுவனமும், பிரிட்டன் அரசின் பன்னாட்டு வளர்ச்சித் துறையும் இணைந்து புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளன.
தெற்கு ஆசியாவிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் முறைப்படி வேலை அங்கீகாரத்தையும், தரமான ஊதியத்தையும் பெறவும், மனித வியாபாரத்துக்குப் பலியாகாமல் இருக்கவும் உதவிசெய்யும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்புதிய திட்டத்தின் மூலம், அப்பெண்கள் வேலைக்குரிய திறமைகளோடும், அந்நாடுகளில் வாழ்வதற்கான தயாரிப்புகளோடும் செல்வதற்கு உதவி பெறுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
சிறார் தொழில்முறையை ஒழிக்கும் நோக்கத்தில், 16 வயதுக்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான சிறுமிகள் பள்ளிப்படிப்பை விட்டுவிடாமல் இருப்பதற்கும் இப்புதிய திட்டம் உதவி செய்யவிருக்கின்றது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் கட்டாய வேலைசெய்யும் பெண்கள், ஆண்டுக்கு 120 கோடி டாலருக்கு அதிகமாகப் பணம் சம்பாதிக்கின்றனர் என்று ILO நிறுவனம் கூறியுள்ளது.
ILO அனைத்துலக தொழில் நிறுவனத்தின் கணிப்புப்படி, உலகில் ஏறக்குறைய 2 கோடியே 10 இலட்சம் பேர் வியாபாரம் செய்யப்பட்டு கட்டாய வேலைக்கு உட்படுத்தப்படுகின்றனர் எனத் தெரிகின்றது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.